உயிரைப் பறித்த முட்டைப் பந்தயம்
பிஞ்சண்ணா
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் (வயது 42). இவர் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் சந்தைக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளைச் சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர்.
அதன்படி 50 முட்டைகளை சாப்பிட்டுக் கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. பந்தயத் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 250 ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டுள்ளது.
இதன்பின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு முட்டை சாப்பிட ஆரம்பித்துள்ளார் சுபாஷ். மது குடித்துக்கொண்டே முட்டைகளை சாப்பிட ஆரம்பித்தவர் 41 முட்டைகளை சாப்பிட்டுள்ளார். 42-வது முட்டையைச் சாப்பிடும்போது அவர் மயக்கமடைந்து கீழே விழ அருகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் சுபாஷை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு கூறிவிட்டனர்.
உடனடியாக சுபாஷை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நடந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாஷுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் அண்மையில்தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் பந்தயத்தில் சுபாஷ் உயிரை இழந்துள்ளார்.
அளவுக்கதிகமாக மதுவும் முட்டையும் உண்டதால் மட்டுமல்ல… போட்டிக்காக, பந்தயத்துக்காக என்று இயல்புக்கு மீறி எதைச் செய்தாலும் ஆபத்துதான். தேவையற்ற போட்டிகளால், சவால்களால் இன்னுயிரை இழக்கலாமா?
நாமும் சில நேரங்களில் ‘Bet’ என்னும் பெயரால் (பெட் கட்டுறேன்… பந்தயம் கட்டுறேன்) விளையாட்டுத்தனமாக எதையாவது செய்வதாகக் கூறி போட்டி போடுவோம். அதில் வெற்றி பெறுவது பெருமை என்றும் கருதுவோம். பெரும்பாலும் இப்படி Betகள் இயல்புக்கு மீறியதாக, செய்யக் கூடாததை செய்வதற்காகத்தான் கட்டப்படுகின்றன. பிறர் மத்தியில் ‘கெத்து’ காட்டப் பயன்படுகின்றன. ஏறத்தாழ எல்லா ‘Bet’களும் பயனற்ற செயலுக்காகக் கட்டப்படுபவையே! இவற்றில் வென்றால் கிடைக்கும் பலன் என்று சொல்லப்படுவதும் மிகச் சிறிய தொகையே! ஆனால், இதில் ஈடுபடுவது ஒருவகை போதை! நாம் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கு! இத்தகைய ‘பெட்’ கட்டும் போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொண்டு ஆபத்தில் மாட்டிக் கொள்ளலாமா?