செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி
இந்தியா விண்வெளித் துறையில் புதிய உயரத்தை எட்டி வருகிறது. பல குழந்தைகள் விண்வெளித் துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் சபீதா. 14 வயதாகும் இவர், கரூர் அரங்கபாளையம் பகுதியிலுள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். கரூர் மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்று. சில மாதங்களுக்குமுன் இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளார். மேலும், இந்த ஆண்டுக்கான ‘மானக்’ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதுக்குத் தேர்வு பெற்ற இவரின் லட்சியத் திட்டம் பொதுநல நோக்கோடு திட்டமிடப்பட்ட ஒன்றாய் அமைந்துள்ளது. அது பல ஆண்டுகளாக அரசுகள் கூறிவந்த நதிகள் இணைப்புத் திட்டம்தான். அதற்கு எவ்வளவு செலவாகும் என்னும் திட்டத்தையும் தயாராக வைத்துள்ளார்.
“மத்திய அரசு நதிகளை இணைக்க 30 லட்சம் கோடி செலவாகும் என்கிறது. ஆனால், நான் தயார் செய்துள்ள திட்டத்தின்படி 3 லட்சம் கோடிதான் செலவாகும். அதாவது பூமிக்கு அடியில் ‘பைப் லைன்’ (குழாய் இணைப்பு) வசதிகளை மேற்கொண்டு நதிகளை இணைக்க முடியும்” என்கிறார். (நதிகளை இணைத்தல் அவசியமா? அவற்றால் இயற்கை மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விகள் இருப்பினும், சபீதா வகுக்கும் திட்டத்தில் அந்தப் பாதிப்புகள் இருக்குமா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.)
சபீதாவின் இந்தச் செயல்முறை திட்டத்திற்-கு உதவியாக இருப்பவர் _ அவருடைய அறிவியல் ஆசிரியர். தன்னுடைய திட்டத்தை அரசு நிறைவேற்றினால் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சமின்றி மக்கள் வாழ வழிவகுக்கும் என்கிறார் சபீதா. உலகில் தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் நடக்கும் என அறிவியலாளர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு இளம் அறிவியல் ஆர்வலராக புதிய திட்டத்தை முன்மொழியும் சபீதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன பிஞ்சுகளே!
மகிழ்