புதிய தொடர்: கோமாளி மாமா
மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் நண்பர்கள். இவர்களின் வீடும் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியில் அருகருகே அமைந்திருந்தது.
பள்ளிக்கு விடுமுறை விட்டால் போதும் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் வீட்டருகே இருக்கும் பூங்காவிற்குச் சென்று விளையாடுவது வாடிக்கை.
அப்படி பூங்காவில் மூவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, கோமாளி வேடத்தோடு ஒருவர் அந்த பூங்காவிற்குள் வந்தார். அவர் அந்த ஊரில் வசிப்பவர். பெயர் நல்லதம்பி. அவரது பேச்சும், செயலும் பார்க்கும் அனைவரையும் பல் தெரிய சிரிக்க வைக்கும். அவருக்குத் தொழிலே நாடகத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதுதான்.
மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் விளையாடுவதை விட்டுவிட்டு, கோமாளி வேடத்தில் வந்திருக்கும் நல்ல தம்பியை ஓடிப்போய் பார்த்தனர்.
அவர் சிரித்தபடி, “வாங்க குழந்தைகளே! வாங்க! உங்களைப் பார்க்கத்தான் நான் வந்திருக்கிறேன்.
“எங்களை பாக்கவா… நாங்க என்ன அவ்வளோ பெரிய ஆளா?” என ஆச்சரியமாக கேட்டாள் மல்லிகா…
“நாளைய தலைமுறையான நீங்கதானே நீண்ட நாள் இந்தப் பூவுலகில் வாழப் போறவங்க… அதனாலேதான் உங்களைப் பாத்து நிறைய சேதி சொல்ல வந்திருக்கேன்…” என்றார் கோமாளி நல்ல தம்பி.
“அடடே! அப்ப நாங்க தோட்டத்துக்கு வரும்போதெல்லாம் நீங்களும் தோட்டத்துக்கு வருவீங்களா?” என்றான் மாணிக்கம்.
“ஆமாம்! கட்டாயம் வருவேன்!”
“அய்! அப்ப நீங்க எங்களுக்குக் கதை ஏதாவது சொல்லுவீங்களா? என்றான் செல்வம்.
“ஓ… நிறைய கதை… புதிய புதிய நல்ல செய்திகள் எல்லாத்தைப் பத்தியும் நாம கலந்து பேசலாம்… என்றார் கோமாளி.
“சரி.. சரி… நாங்க விடுகதை சொன்னா நீங்க பதில் சொல்லுவீங்களா…” மல்லிகா கேட்டாள்…
“ஊம்… பதில் சொல்லுவேன். நானும் புதிர் போடுவேன்.. நீங்க கண்டு புடிக்கலாம்…!”
“ஆகா! இனிமே நாம அடிக்கடி சந்திப்போமா?” என்றான் மாணிக்கம்.
“சந்திப்போம்… சிந்திப்போம்” என சிரித்துவிட்டு…
“என் பேரு நல்ல தம்பி”… என்றார் கோமாளி.
“நாங்க உங்களை ‘கோமாளி மாமா’ன்னே கூப்பிடுறோம்” என்றான் செல்வம்…
“சரி… அப்படியே கூப்பிடுங்க.. நான் உங்களை எப்படி கூப்பிடுறது?
“என் பேரு மல்லிகா!”
“என் பேரு மாணிக்கம்!”
“என் பேரு செல்வம்!” என ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு கோமாளி மாமாவிடம் கை குலுக்கி மகிழ்ந்தனர்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தின் அருகில் குழாய் இருந்தது. அதன் அடியில் நீர் நிரம்பிய இரும்பு வாளி ஒன்றும் இருந்தது. அந்த வாளியைக் காட்டிய கோமாளி …
“இந்த பெரிய பக்கெட்ல தண்ணி நிறைய இருக்கு.. இதை ஒரு விரல்ல தூக்க முடியுமா?” என்றார்.
“இத்தே பெரிய பக்கெட் தண்ணியை ஒரு விரல்ல தூக்கணுமா? அதெப்படி முடியும்” என்றான் மாணிக்கம்.
“பெரியவங்களாலேயே முடியாது” என்றாள் மல்லிகா.
“ஆனா! பக்கெட்ல.. நான் ஒன்னைப் போட்டேன்னா அதோட எடை குறைஞ்சிடும்… ஒரு விரல்லயே தூக்கிடுவேன்… பக்கெட்டுல நான் போட்டது என்ன?” என்றார் கோமாளி.
மாணிக்கம் உடனே… “கோமாளி மாமா… நீங்க பக்கெட்டுல பஞ்சு கொண்டு வந்து போடுவிங்க” என்றான்.
“பஞ்சை போட்டா அது தண்ணியை உறிஞ்சும். ஆனா, எடை குறையாதே” என்றாள் மல்லிகா…
“ஆங்… அதோ அந்த செங்கல்லை எடுத்துப் போடுவிங்க.. அது தண்ணியை உறிஞ்சிடும்.. அப்புறம் அதை எடுத்துப் போட்டுட்டு பக்கெட்டை ஒரு விரல்ல தூக்குவிங்க” என்றான் செல்வம்.
“நான் பக்கெட்ல போட்டதை எடுக்க மாட்டேன்” என்றார் கோமாளி.
“அப்படின்னா அது என்னாது?” என்று கேட்டான் மாணிக்கம்.
“எதை பக்கெட்டுல போட்டாலுமே எடை கூடுமே தவிர… எடை குறையாதே… அப்படி என்னதான் போடுவாரு” என்று யோசித்தபடி கோமாளி மாமாவின் அருகில் சென்ற மல்லிகா அவரை சீண்டி” மாமா யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் சொல்லுங்க மாமா” என்றாள்.
“மாமா! சொன்னா எல்லாருக்கும் சொல்லுங்க” என்றான் செல்வம்.
“விடை யாருக்கும் தெரியலியா… சரி… சொல்றேன்” என்றார் கோமாளி…
மூவரும் ஆர்வமாக கோமாளி மாமாவைப் பார்த்தனர்.
“ஒரு சின்ன ஆணியை வச்சு ஓட்டை போட்டா தண்ணி வெளியே போயிடும்! எடை குறைஞ்சிடும். ஒத்தை விரல்ல பக்கெட்டைத் தூக்கிடலாம்” என்று சிரித்தபடி சொன்னார் கோமாளி.
“அடச்சே… நாம இப்படி யோசிக்காமல் போயிட்டமே” என சிரித்தபடி சொன்னான் மாணிக்கம்…
“யார் எதைச் சொன்னாலும் கவனமா கேக்கணும். அது அறிவுக்கும் பொருத்தமானதான்னு சிந்திக்கணும். அப்பறந்தான் அதை ஏத்துக்கணும். நான் பக்கெட்டுலெ ஒண்ணை போடுவேன்னு சொன்னதும், நீங்க பொருளா யோசிச்சிங்க… ஆனா அது செயல்னு தெரிஞ்சபிறகு சிரிச்சிங்க.
இன்னும் இதுமாதிரி புதிரோடவும், புதுப் புது கதையோடவும் நாம அடிக்கடி சந்திப்போம். புதுசு புதுசா சிந்திப்போம்” என்று சொல்லிவிட்டு ஆடி அசைந்து சென்றார் கோமாளி மாமா நல்லதம்பி.
மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் அடுத்து எப்போது அவரைப் பார்ப்போம் என்ற ஆவலோடு பார்த்துக் கொண்டே நின்றனர்…
கதை, ஓவியம்: மு.கலைவாணன்
(மீண்டும் வருவார் கோமாளி)