அமெரிக்காவிலிருந்து… ஆப்பிரிக்காவுக்கு உணவுப்பொட்டலம்!
பாசத்திற்குரிய அருமை பேத்தி, பேரன்களே,
எல்லோரும் போன மாதம் பெரியார் பிஞ்சு இதழில் எனது அமெரிக்கப் பயணம் பற்றியும் அதில் கண்ட விநோதங்களைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொண்டு உங்களையெல்லாம் மகிழ்ச்சியில் திகைக்கச் செய்வேன் என்று எழுதினேன் அல்லவா?
நீங்களும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.
தொடர் பயணங்கள் என்றாலும் உங்களுடன் பேசுவது தாத்தாவுக்கு மகிழ்ச்சியில்லவா? பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், அவருடைய சக தோழர்கள் எல்லாம் இரண்டு நாள் மாநாட்டை அமெரிக்க மனிதநேய அமைப்புடன் இணைந்து நடத்தி ஜமாய்த்துவிட்டார்கள்!
நம் தோழர் அரசு செல்லையா அவர்கள் பேராசிரியராக பணிபுரிந்த மாண்ட்கோமரி கல்லூரியின் அரங்கில் அந்த மாநாடு நடந்தது; நமது பேராளர்கள் (Delegates) பலரும் தங்கிட எதிர்சாலையில் உள்ள ‘ஹாலிடே இன்’ (Holiday Inn) என்ற நடுத்தர தங்கும் விடுதியில் தான் நாங்களும் தங்கினோம். காலைச் சிற்றுண்டி மட்டும் இலவசம்.
ஒரே குஷி, கும்மாளம், 50, 60 பேர்கள் முதல் 100 பேர்கள் வரை எல்லாம் நம்ப குடும்பங்கள் தான். கலகலப்பாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது, உரையாடுவது சிறந்த உறவாடலாகவே இருந்தது.
அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள நம் தோழர்கள், பாலின வேறுபாடு இல்லாமல், எல்லோரும் தொண்டர்களாகவே மாறி ஓடிஓடி, மாநாட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர்!
டாக்டர் இளங்கோவன் இயக்குநர் (டைரக்டர்); அவருக்குத் துணையாக KRS என்று பலராலும் அழைக்கப்படும் நவீன சகலகலா வல்லுநர் _- பன்மொழிப் பாவலர் ரவிசங்கர் கண்ணபிரான் அவர்களும், பிற தோழர்களும் பம்பரங்களாகச் சுழன்று சுழன்று மாநாட்டை நடத்தினர்!
நேரம் போனதே தெரியவில்லை; இரண்டு நாள்கள் இருபது மணித் துளிகள்போல வேகமாக ஓடிக் கொண்டே இருந்தது!
அடுத்த அடுத்த காட்சி மாற்றங்கள் பேச்சுகள் மேடை அரங்கில்!
வெளியில் நம் கோ. தோழர்கள் கருணாநிதி, தாம்பரம் முத்தையன், டாக்டர் வீரசேகர் மற்றும் தமிழ்மணி போன்றவர்கள் புத்தக விற்பனையிலும், வழிகாட்டும் கைகாட்டிகளாகவும் இருந்தனர்.
பக்கத்தில் உணவுக் கூடம் _ வேளைதவறாமல் அறுசுவை உணவு _ என்ன நாக்கில் தண்ணீர் வடிகிறதா? (ஒருநாள் நாம் எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்… அவசரப்படாதீங்க!)
இப்படி கூட்டம், பேச்சு, தோழர்களுடன் குடும்பம் குடும்பமாக சந்திப்பு எல்லாம் மிக ஜோர்! ஜோர்!
வர்ஜினியாவில் உள்ள நம் அறிவுப் பொன்னி – எழில்வடிவன் ஆகியோரின் செல்வங்கள் நம் பிஞ்சுகள் இனியா-, இலக்கியா ஆகியோர் கடவுள் மறுப்பு சொல்லி மாநாட்டில் பலத்த கைதட்டலைப் பெற்றனர்!
அதுபோலவே சிகாகோவில் உள்ள ரவிக்குமார் – வினுப்பிரியா பிள்ளைகளான யாழினியும், அவர் சகோதரரரான பெரியார் பிஞ்சு பிரபாகரன் எல்லாம் பார்த்து எனக்கு ஒரே மகிழ்ச்சி!
‘அக்காளின்’ அட்டகாசமான பேச்சு அரங்கத்தையே அதிர வைத்தது.
அது மட்டுமா? ரவிசங்கர் என்னையும் பாட்டியையும் திடீரென்று மேல்மாடிக்கு மாநாட்டு அரங்கில் அழைத்துச் சென்றனர்! ஒரு தலைக் குல்லாயை மாட்டிவிட்டு ஒரு பொட்டலம் கட்டும்வேலையையும் கொடுத்தனர்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் எவ்வளவோ பேருக்கு உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை என்பதால், அவர்களுக்கு நமது மாநாட்டின் சார்பில் பல ஆயிரம் பொட்டலங்கள் உணவுகளை அனுப்புன் அரிய மனிதாபிமானப் பணியையும் இணைத்துச் செய்தது ஒரு புது – முயற்சி – ஆக்கபூர்வமான அரிய உதவி – மோகனா பாட்டி, டாக்டர் சரோஜா அம்மா எல்லாரும் அங்கே இருந்தனர். என்னோடு இன்னும் பல நண்பர்கள் நம் பிரின்ஸ் உட்பட!
என்னமாதிரி சுறுசுறுப்பான பேக்கிங்க் (Packing) நாம் வெறும் கடவுள் மறுப்பாளர்களான எதிர்மறையாளர்கள் அல்ல; மாறாக ஆக்கப்பூர்வமாக மனிதர்களுக்கு உதவும் குணங்கொண்டோரும் கூட என்பதை நிரூபிக்க, பெரியார் தாத்தா நமக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்?
“கடவுளை மற”
அடுத்து, “மனிதனை நினை” இல்லையா?
அதற்கு எடுத்துக்காட்டுதானே இந்த பல்லாயிரம் உணவுப் பொட்டலங்கள். பசித்த வயிறுகள் காய்ந்து கிடந்து உயிர்விடக் கூடாதல்லவா? இதிலிருந்து என்ன நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?
நமது அன்றாடப் பணிகளில் பிறருக்கு உதவுவதும், ஒரு முக்கியப் பணியாகக் கருதி அதன்படி நடக்க வேண்டும்; அதில் எவ்வளவு தொகை வரவு? விளம்பரம் கிடைக்குமா? என்று பார்க்காமல் அதில் ஏற்படும் மகிழ்ச்சியை பெரிய சம்பளமாகப் பார்க்க வேண்டும்.
இன்னும் சொல்வேன் -_ அடுத்த இதழில்!
அன்புடன்,
ஆசிரியர் தாத்தா
கி.வீரமணி