இளமை.. புதுமை: ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் போராளி!
ச.மலர்விழி
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஜான்னா ஜிஹரத் இளம் வயதில் நிருபராக மாறியிருக்கிறார். நபி சலே கிராமத்தைச் சேர்ந்த ஜான்னா, இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியில் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் அங்கு நிகழும் போர்க் கொடூரங்களைக் கண்டு அதனை வெளி உலகுக்கு செய்தியாக, வீடியோவாக அனுப்பி வருகிறார். தன் அனுபவத்தைக் கூறுகையில்,
“என்னைவிடச் சிறியவனான ஒரு நண்பனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்தபோது, அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனேன். அதிலிருந்து மீண்டு வர முடியாமல் என்னுடைய எண்ணங்களை எல்லாம் ஒவ்வொரு இரவிலும் எழுதி வைக்க ஆரம்பித்தேன். என்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, அநியாயங்களை அம்பலப்படுத்த விரும்பினேன். அதனை சர்வதேச அமைதிப் போராட்டக்காரர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைப்பேன்’’ என்கிறார் ஜான்னா.
“நான் பார்ப்பதை எல்லாம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களை மட்டுமே எழுதுவேன். படம் பிடிப்பேன், டி.வி., யூ_டியூப், பேஸ்புக் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தின் வன்முறைகளை அம்பலப்படுத்தினேன். இதற்காக பல முறை என் வீடு கண்ணீர்ப் புகையால் நிரப்பப்பட்டிருக்கிறது. நான் அதற்கு துப்பாக்கியை ஏந்தாமல் பேனாவையும், ஒளிப்படக் கருவிகளையும் கொண்டு பதில் அளிக்கிறேன். துப்பாக்கி ஏந்தும் போராளிகளைவிட, இப்போது பேனாவை ஏந்தும் போராளிகளே வெற்றிபெற முடியும். என்று கருதுகிறேன்’’ என்கிறார் ‘பேனா போராளி’ ஜான்னா.
இவரது செய்தியாளர் முயற்சிக்கு உலகெங்கிலும் பாராட்டுகள் பல குவிந்து வருகின்றன.
தகவல் துளி!
திருச்சி விமானநிலையம் இந்தியாவில் மிகச்சிறிய ஓடுபாதையைக் கொண்ட விமானநிலையங்களுள் ஒன்றாகும். அதன் நீளம் 2,480மீ.