லுலுமாவின் விருப்பம்
மரத்தின் மேலே ஊர்ந்து சென்ற கம்பளிப்பூச்சி மரத்தில் இருந்து ‘டொப்’பென விழுந்தது. மேலிருந்து விழும்போதே அதன் நண்பர்கள் ‘லுலுமா’ எனக் கத்தினார்கள். ‘லுலுமா’ நேராக விழுந்தது ஒரு குட்டிப்புலியின் தலையில்தான். குட்டிபுலி குர்சா ஏற்கெனவே பயங்கர கடுப்பில் இருந்தது. நான் பெரியவனாகிவிட்டேன் என்று கத்தியும் அதன் சகோதரர்களும் பெற்றோர்களும் அதனை வேட்டைக்கு அழைத்துச்செல்லவில்லை. காட்டில் அதிக மிருகம் இல்லாத வனப்பகுதியில் தான் குர்சா சுற்றிக்கொண்டு இருந்தது. எல்லோரும் தன்னை விட்டுவிட்டுச் சென்றது குர்சாவுக்கு பிடிக்கவே இல்லை. அதற்கு மற்ற விலங்குகளில் எதுவும் நண்பர்கள் என்று எதுவும் இல்லை. குர்சாவின் நெற்றியில் லுலுமா விழுந்திருந்தது. தன் முன்னங்காலைக் கொண்டு நெற்றியில் இருக்கும் கம்பளிப்பூச்சியினை நசுக்க முயன்றது.
“வீரக் குட்டிப்புலி, உன் வீரத்தை என்னிடம் காட்டி என்ன பயன்?” என்றது லுலுமா. லுலுமாவிற்கு மொத்தம் 64 கால்கள் இருந்தன. மேலே இருந்து விழுந்ததில் கால்களுக்கு ஏதேனும் காயமா என்றுதான் முதலில் பார்த்தது. ஆனால், புலியின் நெற்றி அவ்வளவு மெத்து மெத்து என இருந்ததால் அடி எதுவுமே இல்லை. மரமொன்றில் ஓடிப்பிடித்து விளையாடும்போது கால் தவறி, இல்லை… இல்லை… கால்கள் தவறி மரத்தின் கிளையில் இருந்து விழுந்துவிட்டது.
“ஏய் பூச்சியே, மரியாதையாக இறங்கி விடு! ஒரே அருவெறுப்பாக இருக்கின்றது, நானே எரிச்சலில் இருக்கேன்” என்றது குர்சா.
“நண்பா! எதற்கு எரிச்சல்படுகின்றாய்? நான் உனக்குத் தீங்கு விளைவிக்கமாட்டேன். நீ நினைத்தால் என்னை ஒரே நொடியில் நசுக்கிவிடலாம். ஆனால், நீ அப்படிச் செய்ய மாட்டாய் எனத் தெரியும்.”
பேச்சில் கொஞ்சம் இறங்கியது குர்சா. தன்னிடம் முன்னமே யாராவது பேசி இருந்தால் இந்த எரிச்சல் இருந்திருக்காது என்றும் நினைத்தது. “உன் பெயர் என்ன? உனக்கெல்லாம் பெயர் வைப்பார்களா?” என்று கேட்டது. ஆமாம்! குர்சா, லுலுமாவை தன் நண்பராக ஏற்றுக்கொள்ள துவங்கியது. நெற்றியில் இருந்து உச்சந்தலைக்கு ஏறிக்கொண்டது லுலுமா. குட்டிப் புலியின் மீது சவாரி செய்வது லுலுமாவுக்குப் பெருமையாக இருந்தது. மரத்தின் மீது இருந்த தன் நண்பர்கள் அதனைப் பார்க்கின்றார்கள் என்பதையும் பார்த்துவிட்டது.
இருவரும் பேசியபடியே வெகுதூரம் சென்றுவிட்டார்கள். இனி நிச்சயம் தன் வீட்டுக்குப் போகப்போவது இல்லை என லுலுமாவுக்குத் தெரிந்துவிட்டது. குர்சாவிடம் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாலே தன் வாழ்நாளில் தான் உருவான மரத்தின் அருகே செல்ல முடியாது என நினைத்தது. இந்தக் குறுகிய நேரத்திலேயே குர்சாவுக்கு லுலுமாவை ரொம்பவே பிடித்துவிட்டது. அவ்வளவு அன்பாக லுலுமா பேசியது.
“நண்பா குர்சா எனக்குப் பசிக்கின்றது”
“என்ன வேண்டும்? கேள்! குகையில் மாமிசம் இருக்கு”
“க்கும், எனக்கு ஒரு இலை போதும் நண்பா!”
லுலுமா, புலிகளின் குகையிலேயே வசிக்க ஆரம்பித்தது. ஆனால், மற்ற புலிகளுக்கு அது தெரியாது. எல்லோரும் வேட்டையாடச் சென்றதும் லுலுமாவும் குர்சாவும் பேச ஆரம்பிப்பார்கள், நடப்பார்கள். குர்சாவுக்கு தன்னை வேட்டைக்குக் கூட்டிச்செல்லவில்லை என்று மிகுந்த வருத்தம் இருந்தது. ஆனால், அதனைவிட அதற்கு மேலும் ஒரு கவலை வந்தது.
“நண்பா குர்சா, நான் விரைவில் கூட்டுப்புழுவாக மாறவேண்டிய காலம் வந்துவிட்டது. ஆனால், எனக்கு ஓர் ஆசை உள்ளது. நான் என் வாழ்நாளில் ஒருமுறையேனும் அருவியைப் பார்த்துவிட வேண்டும்” என்றது.
அருவியை குர்சாவும் பார்த்ததே இல்லை. ஆனால், எந்தத் திசையில் இருக்கின்றது என தெரியும். இரண்டு மலைகளைக் கடந்து செல்லவேண்டும். சில நாள்களில் லுலுமா கூட்டுப்புழுவாக மாறியது. ஓர் இலையில் தன்னைச் சுற்றி, கூடு கட்டிக்கொண்டது. அது விஷச்செடி, அப்படி விஷச்செடியில் கட்டிக்கொண்டால்தான் யாரும் சாப்பிட வரமாட்டார்கள். சில நாள்களேனும் உள்ளே இருந்தால்தான் மெல்ல மெல்ல பட்டாம்பூச்சியாக அது உருவெடுக்கும்.
குர்சாவுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. லுலுமா பட்டாம்பூச்சியாக வரும்போது அது அருவியைப் பார்த்தபடி வெளியே வரவேண்டும் என்று முடிவெடுத்தது. தன் குகையைவிட்டு அந்தச் செடியின் கிளையுடன் மெதுவாகக் காட்டில் இருந்து மலை மீது ஏறியது. மாலையானதும் நல்ல மரமாகப் பார்த்துப் பதுங்கிவிடும். எங்கே ஏதேனும் வேகமாக ஓடினால் கூட்டுப்புழு உடைந்துவிடுமோ என மெதுவாகவே நடந்தது. அய்ந்து நாள்களில் அந்த அருவியைப் பார்த்துவிட்டது குர்சா. “ஆஹா! ஆஹா! என்ன அருமையான இடம் இது! லுலுமா ஆசைப்படாமல் போயிருந்தால் இதனை பார்த்தே இருக்கமாட்டேனே’’ என நினைத்தது.
எப்போது கூட்டுப்புழு உடைந்து பட்டாம்பூச்சியாக மாறும் என குர்சா காத்திருந்தது. அருவியில் சென்று குளித்துவிட்டு வந்து கூட்டுப்புழுவின் அருகிலேயே அமரும். “நண்பா… தோழா…” என அழைத்தும் எந்தச் சலனமும் இருக்காது. இப்படியே அடுத்த நான்கு நாள்கள் கடந்துபோனது. பத்தாம் நாள் காலை வேளையில் சூரியன் உதயமாவதற்கு முன்னர் கூட்டுப்புழு மெல்ல மெல்ல உடைய ஆரம்பித்தது. லுலுமா ஓர் அழகிய பட்டாம்பூச்சியாக உருமாறி இருந்தது. கருப்பு, மஞ்சள், சிவப்பு என வண்ணங்களின் கலவையாக இருந்தது. முதலில் மெல்ல தத்தி நடந்தது. பின்னர் பறக்க ஆரம்பித்தது.
“நண்பா! நான் பறக்கிறேன்” என கத்தியது.
தான் ஓர் அருவிக்கு அருகே இருக்கின்றோம் என்றதும் அதன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உயர உயர உயரப் பறந்தது. அருவி மேலிருந்து விழும் இடம் வரை சென்றுவிட்டது.
“வாவ்!…” என வாய்பிளந்தது. எவ்வளவு அற்புதமான காட்சி இது என வியந்தது. உடனே மேலிருந்து கீழே பறந்து குர்சாவிடம் வந்தது. “மேலே அற்புதமான காட்சி இருக்கின்றது வா” என்றது. குர்சாவுக்கு பெரிய பாறைகளில் ஏறுவது சிரமமாக இருந்தது. ஆனால், விடவில்லை. வேகவேகமாக ஏறி மலையின் உச்சிக்குச் சென்று அருவி ஆரம்பிக்கும் இடத்தில் நின்றது. லுலுமா, குர்சாவின் மூக்கு நுனியில் நின்றது. இருவரும் அப்படி சிரித்தனர்.
திடீரென ஒரு சத்தம். “குர்சா, கீழே இறங்கி வா!” இடையில் காட்டில் குர்சாவைக் காணவில்லை என குர்சாவின் குடும்பத்தினர் வருத்தப்பட்டு ஆளுக்கு ஒரு திசையாகக் கிளம்பினர். குர்சாவின் காலடித்தடம் பார்க்கவே அதனைப் பிடித்து இந்த அருவிக்கு அருகே வந்தனர். “குர்சா, நீ பெரியவனாகிவிட்டாய். தனியாக அந்த மலைமீதே ஏறிவிட்டாய். வா, நீ இனி வேட்டைக்குப் போகலாம்.”
அதே நேரம் தூரத்தில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளும் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன. “நண்பா, போ நீ! வேட்டையாட வேண்டும்” என நினைத்த தருணம் வந்துவிட்டது. நான் அதோ அவர்களுடன் பறந்து சென்று உலகினை ரசிக்கிறேன் என்றது லுலுமா.
கண்கலங்கிய குர்சா, “உன்னை எந்நாளும் மறக்கமாட்டேன் லுலுமா. பறந்து செல்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாக மலையில் இருந்து கீழே இறங்கியது. அந்த ஆயிரம் பட்டாம்பூச்சிகளும் மேலே இருந்து கீழே பறந்துவந்து குர்சாவின் தலையில் ஒவ்வொன்றாக அமர்ந்து தன் நண்பருக்கு உதவியமைக்காக நன்றி தெரிவித்துவிட்டு அதன் தலையில் அமர்ந்து பறந்தது. குர்சாவிற்கு அவ்வளவு மகிழ்வாக இருந்தது.
“வா குர்சா, இருட்டுவதற்குள் நாம் வெகுதூரம் ஓடவேண்டும்…”
விழியன்