காரணமின்றி ஏற்காதீர்கள்: ஆணின் இடுப்பில் அரைநாண் கயிறு கட்டுதல்
சிகரம்
ஆண்களுக்கு இடுப்பில் அரைநாண் கயிறு கட்டுவது வழக்கத்தில் உள்ளது. இதைக் கிராமப்புறங்களில் ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றுகின்றனர்.
ஆண்கள் அரைநாண் கயிறு கட்டவேண்டும் என்பது கட்டாயம் ஒன்றும் இல்லை. கட்டாவிட்டால் எந்தக் கேடும் வராது.
அக்காலத்தில் ஆண்கள்தான் உழைப்பாளிகள், ஆண்கள் உடுத்திக் கொள்வது வேட்டியும் துண்டுமே! உழைக்கும்போது வேட்டியும் துண்டும் அணிந்திருப்பது அவர்களுக்கு இடையூறாக அமைந்தது. அதனால், அக்காலத்தில் உழைப்பாளர்கள் எல்லாம் கோவணம் கட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டனர். அது மட்டுமன்றி நாம் இன்றைக்கு அணியும் ஜட்டிக்குப் பதிலாக அன்றைக்குக் கோவணமே ஆண்களுக்கு உரிய உள்ளாடையாக அமைந்தது.
கிராமப்புறங்களில் அண்மைக் காலம் வரை ஆண்கள் கோவணம் அணிவதே வழக்கில் இருந்தது. பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், திருக்கோயிலூர் இன்னும் பல பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை 90 விழுக்காடு ஆண்கள் கோவணமே கட்டியிருப்பர். வேலை செய்யும் நேரம் மட்டுமன்றி, வீட்டில் இருக்கும்போதும் கோவணம் கட்டிக் கொண்டேயிருப்பர்.
வேட்டியிருந்தால்கூட அதைத் தலையிலே சுற்றிக் கொள்வர். நரிக்குறவர்கள்கூட அது போன்று கோவணம் கட்டிக்கொண்டு, தலையில் வண்ண வேட்டியைச் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
ஆக, அக்காலத்தில் அதிகம் உடுத்தியிருந்த ஆடை கோவணமாகவே இருந்தது. அது மட்டுமன்றி ஆண்களுக்கு மறைவிடம் என்பது ஓர் இடமாக இருந்ததால் அவர்களுக்குக் கோவணம் மட்டுமே போதுமானதாக அமைந்தது.
ஆனால், பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்க வேண்டியவர்களாக இருந்தனர். அதனால் பெண்களுக்குக் கோவணம் ஒத்து வரவில்லை. எனவே, ஆண்களுக்கு மட்டுமே கோவணம் உரியதானது. கோவணம் கட்டவேண்டும் என்றால் இடுப்பில் ஒரு கயிறு வேண்டும். அப்போதுதான் கோவணம் கட்ட முடியும். அதற்காக ஆணின் இடுப்பில் எப்போதும் இருக்கும் வகையில் இடுப்புக் கயிறு கட்டும் வழக்கம் ஏற்பட்டது.
அரைநாண் என்றால் இடுப்புக் கயிறு என்று பொருள். அரை என்றால் இடுப்பு; நாண் என்றால் கயிறு.
ஆக, அக் காலச் சூழலுக்கு ஏற்ப இடுப்பில் கயிறு கட்டும் வழக்கம் ஆண்களுக்கு ஏற்பட்டது. ஆனால், இன்றைக்கு அரைக்கால் சட்டைகள் வந்துவிட்டன. எனவே, கோவணம் கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.
இதையொரு சம்பிரதாயமாகக் கட்டிக்கொள்வது அறியாமையாகும். தேவையற்று ஒரு கயிறு இடுப்பில் இருப்பதால் அதில் அழுக்குச் சேர்ந்து உடல் நலத்திற்கே கேடு பயக்கும். மேலும் சிலர், நம் பரம்பரைக்குக் கருப்புக் கயிறுதான் கட்டவேண்டும் என்றும், வேறு சிலர் நம் பரம்பரைக்கு சிவப்புக் கயிறுதான் கட்டவேண்டும் என்றும் வழக்கம் வைத்துள்ளனர்.
கருப்பு சிவப்பு என்பதெல்லாம் உடல் நிறத்திற்கேற்ப உருவாக்கப்பட்டதே தவிர வேறல்ல. சிவந்த உடம்புக்குக் கருப்புக் கயிறும், கருத்த உடம்புக்குச் சிவப்புக் கயிறும் பொருத்தமாகக் கொள்ளப்பட்டன.
பரம்பரையாகக் கருத்த நிறம் உடையவர்கள் சிவப்புக் கயிற்றைத் தேர்வு செய்தனர். சிவந்த நிறம் உடையவர்கள் கருப்புக் கயிற்றைத் தேர்ந்தெடுத்தனர். அதை அந்தக் குல வழித்தோன்றல்களும் அணிந்தனர். மற்றபடி கருப்பு சிவப்பில் எந்தச் சிறப்புக் கூறும் இல்லை.
இப்படிப்பட்ட இடுப்புக் கயிற்றை வெள்ளியிலும் தங்கத்திலும் வசதிக்கேற்ப அணியும் வழக்கமும் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இன்றைக்கு இடுப்புக் கயிறு அணிய வேண்டிய தேவை இல்லை.
அம்மை வந்தவர்கள் பாய்மீது படுக்கக் கூடாதா?
அம்மை வந்தவர்களுக்கு உடல் முழுக்கக் கொப்புளங்களும் புண்ணும் இருக்கும். அப்பொழுது பாயில் படுத்தால் உறுத்தும். மேலும் பாயில் பலநாள் அழுக்கு சேர்ந்திருக்கும். அம்மை வந்தவர்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தொற்றுக் கிருமிகள் தாக்குதல் ஏற்படும்.
மேலும், அம்மை கண்டவர்கள் எச்சில் ஈளை மிதிக்கக் கூடாது என்பார்கள். பொதுவாக எல்லோருமே எச்சில் ஈளை மிதிக்காமல் இருப்பது நல்லது. அதிலும், அம்மை வந்தவர்கள் அறவே இவற்றின் பக்கம் போகக்கூடாது. மிகத் தூய்மையாக இருக்க வேண்டும்.
இதில் மாரியாத்தாள் பக்தி என்கிற கண்ணோட்டம் எதுவும் இல்லை. தூய்மை கட்டாயம் என்பதைச் சொல்லிப் புரிய வைக்கத் தெரியாமல்தான் கடவுளோடு தொடர்பு படுத்தினார்கள்.
காலரா நோய் என்பது அசுத்த நீரைக் குடிப்பதால் வருவது. அம்மை நோய் அளவு கடந்த வெப்பத்தால் வருவது.
காலரா, காளியாத்தாள் சீற்றத்தால் வருவது: அம்மை_மாரியாத்தாள் சீற்றத்தால் வருவது என்று எண்ணுவதும் – நம்புவதும், அதற்காக உடுக்கையடித்து ஓலமிடுவதும், படையல் போடுவதும் அறியாமையாகும். இந்நோய்கள் இன்றைக்குத் தடுப்பு நடவடிக்கைகளால் அறவே ஒழிக்கப்பட்டதால், இவை கடவுளால் வருபவையல்ல என்பதை நன்கு உணரலாம்.
பாத பூஜை செய்தல்
திருமணத்தின் போது, தாலி கட்டுவதற்கு முன் பாத பூஜை செய்தல் என்னும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
பெண்ணின் தாய் தந்தையர் மணமேடையின் ஒரு புறம் நிற்பர். மணப்பெண் தனது பெற்றோரின் கால்களைத் தூய்மை செய்து, சந்தனம் பூசி வணங்குவாள். அதேபோல் மாப்பிள்ளை தன் பெற்றோரின் கால்களில் சந்தனம் பூசி வணங்குவான். இந்நிகழ்ச்சிக்குத்தான் பாத பூஜை செய்தல் என்று பெயர்.
பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற உணர்வின் உச்சகட்டமாகத்தான் இவ்வழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால், இன்றைக்கு இவ்வுண்மை உணரப்படாமல், இதையொரு சடங்காகப் பின்பற்றுகின்றனர்.
தன் பெற்றோருக்குச் சாப்பாடுகூடப் போடாமல் அடித்து விரட்டும் மகன் திருமணத்தின்போது, தாய் தந்தையரை நிறுத்தி வைத்துக் காலைக் கழுவி வணங்குவான். அதை அவன் ஒரு சடங்காகச் செய்கிறானே தவிர, உண்மையிலேயே அவன் பெற்றோரை மதிப்பதில்லை. இப்படிச் செய்யப்படும் சடங்குகளால் என்ன பயன் ஏற்படும்?
அண்மைக்காலத்தில் சில பள்ளிகளில் பெற்றோருக்குப் பாத பூஜை செய்தல் என்ற பெயரில் குழந்தைகளிடம் இப்பழக்கம் புகுத்தப்படுகிறது.
மரியாதை என்பது காலில் சந்தனம் பூசி வணங்குவதில் இல்லை. உண்மையிலேயே பெற்றோரை மதித்து அவர்களை முறைப்படி பேணுவதில்தான் உள்ளது. காலில் விழுவது என்பது சுயமரியாதைக்கு இழுக்கானதாகும்.