தியேட்டர் ஸ்க்ரீன் கிரகணம்
“தீபா, நித்யா! நீங்க ரெண்டு பேரும் எந்திரிங்க”
தீபாவும் நித்யாவும் எந்திரிச்சாங்க.
“எதுக்கு டீச்சர் எழுப்பி விட்டீங்க?”
“கொஞ்ச நேரம் நில்லுங்க”
“சரி டீச்சர்”
கொஞ்ச நேரம் போனப்புறம் டீச்சர் கேக்குறாங்க,
“எதுக்கு எழுப்பி விட்டேன் தெரியுமா? அன்னைக்கு நம்ம ஸ்கூல்ல உள்ள எல்லா ஏழாம் எட்டாம், ஒன்பதாம் வகுப்பு பசங்களையும் “ஆப்பிரிக்க வானிலை’’ங்கிற ஆவணப் படத்துக்கு கூட்டிட்டு போகும்போது நீங்க என்ன செஞ்சீங்கன்னு நினைவிருக்கா’’ அதுக்குதான் எழுப்பி விட்டேன்’’
“ஹி… ஹி…! அது ஜாலிக்கு டீச்சர்”
“எல்லாரும் வேர்க்கடலை தின்னுக்கிட்டே படம் பார்த்தீங்க. அந்தப் படத்த ஸ்கிரீன் செய்ற அண்ணன் குறுக்கையும் நெடுக்கையும் அப்போ அப்போ போகும்போது என்ன பண்ணுனீங்க, நீங்க ரெண்டு பேரும்?’’
“அண்ணன் அப்படிப் போகும்போது ஸ்கீரினப் பாத்து அய்யோன்னு சொன்னோம். அப்ப வேர்கடலை சாப்பிடுறத நிறுத்திட்டோம்.”
“ஆமா அதப் பாத்து எல்லோரும் வேர்க்கடலை சாப்பிடுறத நிறுத்திட்டு அய்யோ அய்யோன்னு பயந்தாப்புல குரல் கொடுத்தாங்க’’
“ஹி… ஹி… ஆமா டீச்சர்.’’
“ஏதோ உள் அர்த்தம் வச்சுதான் அத செய்தீங்க. ஏன் செய்தீங்கன்னு சொன்னா விட்டுர்றேன்’’
“சரி டீச்சர்! இப்ப நாங்க உங்கள கேள்வி கேக்குறோம்… கேக்கவா?’’
“கேளுங்க… கேள்விதான? கேளுங்க பிள்ளைகளா!’’
“போன வாரம் சூரிய கிரகணம் வந்துச்சே… அப்ப நீங்க என்ன சொன்னீங்க’’
“என்ன சொன்னேன்?’’
“யோசிச்சி சொல்லுங்க டீச்சர்!’’
“ம்ம்ம்… ஆங்… இன்னைக்கு சூரிய கிரகணம் காலைல வருது… எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுருங்கன்னு சொன்னேன், அதுவா?’’
“ஆமா… அது எப்படி நீங்க சொல்லலாம். பூமி மேல படுற சூரிய ஒளிய சந்திரன் மறைக்குது. அதான் சூரியன் தெரியாம இருட்டாகுது. அதத்தான் சூரிய கிரகணம்னு சொல்றோம். அப்படி ஒரு அறிவியல் காரணம் அறிவியல் டீச்சரான உங்களுக்குத் தெரிஞ்சி இருந்தும்கூட மூடநம்பிக்கைய வளக்குற பேச்சுதானே’’
“அதுக்கும் தியேட்டர்ல அவரு குறுக்க வந்தபோது கடலை சாப்பிடாம ‘அய்யோ’ன்னு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?’’
“புரோஜெக்டர்ல இருந்து வர்ற ஒளிதான் சூரியன் டீச்சர்… சரியா? குறுக்க ஒரு அண்ணன் போனாரே அவருதான் நிலா… ஓகே? நாம அத பூமில இருந்து பாக்குறோம். அண்ணன் குறுக்க வரும்போதெல்லாம் அவரோட நிழலு திரையில் விழுந்து அங்க ஒரு “தியேட்டர் ஸ்க்ரீன் கிரகணம்’’ வருதே டீச்சர். தியேட்டர் கிரகணம் வரும்போது எப்படி சாப்பிட முடியும்? அது நம்ம ஹெல்த்துக்கு ஆபத்தாச்சே! அதான் சாப்பிட்டுக்கிட்டு இருந்த வேர்க்கடலையை சாப்பிடாம நிறுத்திட்டு, அய்யோ! அய்யோ!ன்னு கத்துனோம் டீச்சர்’’ நித்யாவும் தீபாவும் கோரஸா குரல் கொடுத்தாங்க.
டீச்சர் அதக் கேட்டு வாய்விட்டு சிரிச்சாங்க. சிரிச்சிட்டு நித்யாவையும், தீபாவையும் வாரிக் கட்டி அணைச்சிகிட்டாங்க…
“ஆமா செல்லம்ஸ். நான் தப்புதான் பண்ணிட்டேன். ஒரு சயின்ஸ் டீச்சரா இருந்துட்டு சூரிய கிரகணம் ஆபத்துன்னு சொல்லியிருக்கேன் பாருங்க. சின்ன வயசுல இருந்து என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் அப்படி சொல்லிச் சொல்லி வளர்த்து அந்த மூடநம்பிக்கையே மனசுக்குள்ள ஏறிப் போச்சு. இப்ப நீங்க “தியேட்டர் கிரகணம்’’ என்று உதாரணம் வைச்சி சொல்லும்போதுதான் எனக்கே புரியுது.’’
“லவ்யூ டீச்சர்’’
“லவ் யூ கண்ணுங்களா… நம்ம நாட்ல நிறைய பேர் படிச்சி பட்டம் வாங்கினாலும், இப்படி ஏராளமான மூடநம்பிக்கையோடு இருக்காங்க. பள்ளிகள்ல அறிவியல், கணிதம் சொல்லிக் கொடுக்குற ஆசிரியர்களே மூடநம்பிக்கையை நம்புறாங்க, அத பசங்களுக்கும் சொல்லிக் கொடுக்குறாங்க.
அவுங்கள எல்லாம் உங்கள மாதிரி குட்டிப் பசங்கதான் இப்படி திருத்தணும் போல இருக்கு’’
அப்படின்னு டீச்சர் சொன்னாங்க.
மறுநாள் காலைல தீபாவும், நித்யாவும் பள்ளிக் கூடத்துக்கு வரும்போது அங்க அறிவிப்புப் பலகையில் பசங்க செய்த ‘தியேட்டர் கிரகணம்’ பற்றி, குறிப்பு எழுதிக் அது எப்படி தன்னை மூடநம்பிக்கைல இருந்து காப்பாத்துச்சுன்னு டீச்சர் எழுதின லட்டர் ஒண்ணு இருந்துச்சு…
தீபாவும், நித்யாவும் மூடநம்பிக்கைக்கு எதிரா இருந்து, பெரியவங்கள எப்படித் திருத்தினாங்களோ அப்படித்தான் நீங்களும் நிறைய பெரியவங்கள சொல்லிச் சொல்லி திருத்தணும்…
உங்க வாழ்க்கைல அதுவும் முக்கியமான வேலையில ஒன்னுதான். புரியுதா…!