காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்?
தேங்காய் உரிக்கும்போது அதற்குக் குடுமி வைப்பது சம்பிரதாயம், குடுமி வைக்காமல் முழுவதும் உரித்து விட்டால் சண்டை போடுவார்கள்.
தேங்காய் உடைக்கும்போது குடுமியிருந்தால்-தான் பிடிமானத்திற்கும் உடைப்பதற்கும் வசதியாய் இருக்கும். அதற்காகத்தான் தேங்காய் உரிக்கும்போது குடுமி வைக்க வேண்டும் என்றனர்.
ஆனால், இந்த உண்மையை உணராமல், குடுமி பிய்ந்து போனால் அத் தேங்காயின் மதிப்பே போய்விட்டதாகக் கருதுகிறார்கள். அதைப் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்.
தேங்காய் உடைத்தவுடன் குடுமியைப் பிய்த்துப் போடுவார்கள். அதாவது, தேங்காய் உடைக்கப்பட்டவுடன் அந்தக் குடுமியின் பயன்பாடு முடிந்துவிட்டது என்பதே அதற்கு அர்த்தம். எனவே, குடுமி வைப்பதே உடைக்கும்போது பிடிமானம் வேண்டும் என்பதற்காகத்தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
மேலும், உரித்த தேங்காயை நீண்ட நாள்கள் வைத்திருக்க நேர்ந்தால் குடுமியிருந்தால்தான் தேங்காய்க்குப் பாதுகாப்பும்கூட! குடுமி மூடியுள்ள பகுதியில் மூன்று துளைகள் மூடப்பட்டிருக்கும். அதைத் தேங்காய் கண் என்பார்கள். குடுமி நீங்கிவிட்டால் அந்தக் கண்ணில் எளிதில் துளை விழ வாய்ப்பு ஏற்படும். எனவே, அதைத் தவிர்க்க ஒரு பாதுகாப்புக் கவசமாகவும் குடுமி பயன்படுகிறது.
குடுமி வைப்பது தேங்காய்க்கு ஓர் அழகையும் அளிக்கிறது என்பதும் மற்றுமோர் காரணம்.
மற்றபடி குடுமி போய் விட்டால் தேங்காயின் மதிப்பே போய் விட்டதாகக் கருதுவது அறியாமையாகும். குடுமி சிதைந்து போனால்கூட அதை அனைத்துக் காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். குற்றம் ஒன்றும் இல்லை.
இறந்தவரது வீட்டில் உள்ளவர்கள்
எண்ணெய் தடவக் கூடாதா?
வீட்டில் யாராவது இறந்துபோனால், இறந்தபின் 16 ஆம் நாள் கரும காரியம் செய்வார்கள். அவ்வாறு கருமகாரியம் செய்து முடிக்கின்ற வரை வீட்டிலுள்ளவர்களும், பங்காளிகளும் தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளக்கூடாது. புலால் உண்ணக்கூடாது என்கிற வழக்கம் இன்றளவும் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.
தலையில் எண்ணெய் தடவி தலைவாரிக் கொள்வதும், புலால் உண்பதும் மகிழ்வோடு இருக்கும்போது செய்யப்படுபவை. மகிழ்ச்சியைக் கொண்டாடும்போது ஆடு, கோழி அடித்து விருந்து வைப்பது வழக்கம்.
இறந்து போனவர் குடும்பத்தவர் அளவு கடந்த துயரத்தில் இருப்பதால், தலைக்கு எண்ணெய் தடவி ஒழுங்குபடுத்தும் மனநிலையிலும், நல்ல உணவு உண்ணும் மனநிலையிலும் இருக்க மாட்டார்கள். எனவே இவற்றைத் தவிர்த்திருப்பர். இதில் கட்டாயம் ஏதும் இன்றி இயல்பாய் நடந்திருக்கும். பிற்காலத்தில், இழவு வீட்டார் தலைக்கு எண்ணெய் தடவி, ஒழுங்குபடுத்திக் கொண்டால், இறந்த கவலை கொஞ்சம்கூட இல்லையென்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்பதற்காக, கவலையான கோலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தலைக்கு எண்ணெய் தடவுவதைத் தவிர்த்தனர். கவலையோடு இருக்கும்போது இவையெல்லாம் எதற்கு என்கின்ற வகையில்தான் புலால் உணவும் தவிர்க்கப்பட்டது.
எனவே, எண்ணெய் தடவவே கூடாது என்பதோ, புலால் உணவு உண்ணவே கூடாது என்பதோ கட்டாயம் இல்லை. அவ்வாறு செய்வதால் எக் கேடும் வராது.
கரும காரியம் என்னும் வழக்கம் 16 ஆம் நாள் வைத்தது கூட, இரண்டு வார துக்கத்திற்குப் பின் ஓரளவு அவர்கள் மீட்சி பெற்றிருப்பார்கள்; அதன்பின் அவர்கள் இயல்பான வாழ்வைத் தொடங்க ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.
அன்றைக்குத் தலைக்குத் தேய்த்து முழுகிப் புத்தாடை அணிந்து, விருந்துண்டு, துயரச் சூழலில் இருந்து விடுபடச் செய்தனர்.
இழவு வீட்டார் கவலையை உடனடியாக ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாது. ஆள் ஆற்றாததை நாள் ஆற்றும் என்கிற அனுபவ மொழிக்கு ஏற்ப, கவலையை மறக்க ஒரு கால அவகாசம் கொடுத்து, அக்கால அவகாசத்திற்குப் பின் உறவினர்கள், பலகாரம், புத்தாடை, புலால் உணவு இவற்றைக் கொண்டுவந்து இழவு வீட்டாருக்குக் கொடுப்பர். அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான, உளவியல் சார்ந்த ஒரு முயற்சியே இது.
ஆனால், இக் காரணம் புரியாமல், கருமாதித் துறைக்குச் சென்று, மந்திரம் ஓதச் செய்து கருமாதிச் சடங்கு செய்து வருகின்றனர். இச்சடங்குகளும், மந்திரங்களும் பின்னாளில் புகுத்தப்பட்ட செயற்பாடுகளே! இழவு வீட்டார், அந்த ஆண்டு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல், இவற்றைத் தீபாவளித் துக்கம், பொங்கல் துக்கம் என்றே அனுசரிப்பர். இவை இறந்தவர் மீதுள்ள தங்கள் பற்றையும், தங்கள் மனதில் உள்ள துயரத்தையும் வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பண்பாட்டின் அடையாளங்களே!
எனவே, இவற்றுள் கட்டாயம் ஏதும் இல்லை. இறந்தவர் வயது, குடும்பத்தவர் மனநிலை இவற்றுக்கு ஏற்ப, உண்மையான உணர்வின் வெளிப்பாடாக இவை இருக்க வேண்டுமேயன்றி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காகச் செய்யப்படுமானால் அது ஒரு நாடகமாகவே அமையும்.
– சிகரம்