சாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை!
இந்த வாரத்தில், அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (அய்.எஸ்.எஸ்), ஒரு பெண்ணாக 289 நாள்களைக் கடந்த போது, விண்வெளியில் தொடர்ந்து அதிக நாள்களைக் கழித்த பெண் என்கிற சாதனையை படைத்திருக்கிறார்.
பெண்களுக்கான முந்தைய சாதனையை மற்றொரு அமெரிக்கரான பெக்கி விட்சன் 2016_-2017ஆம் ஆண்டில் படைத்திருந்தார்.
மின் பொறியியலாளரான கோச் (40) அந்தச் சாதனையை நீட்டிக்க உள்ளார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று கிறிஸ்டினா பூமிக்குத் திரும்புகிறார். அப்போது அவர் 328 நாள்கள் விண்வெளியில் வசித்திருப்பார். விண்வெளிப் பயணங்கள் பொதுவாக ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், ஏப்ரல் மாதத்தில் தனது பணியை விரிவுபடுத்தப் போவதாக நாசா அறிவித்தது.
ஆண் மற்றும் பெண் விண்வெளி வீரர்களைக் கணக்கிடுகையில், இது அமெரிக்கர் ஒருவரின் மிக நீண்ட ஒற்றை மனித விண்வெளிப் பயணத்திற்கான ஒட்டுமொத்த சாதனையாகும். ஸ்காட் கெல்லி 2015_-2016ஆம் ஆண்டில் 340 நாள்கள் விண்வெளியில் கழித்தார்.
ஜனவரி 1994 மற்றும் மார்ச் 1995 க்கு இடையில், ரஷ்யாவின் வலேரி பாலியாகோவ் 438 நாள்கள் மிர் விண்வெளி நிலையத்தில் கழித்தார். ஒட்டுமொத்தமாக, இது மிக நீண்ட ஒற்றை மனித விண்வெளிப் பயணத்திற்கான உலக சாதனை ஆகும்.
கோச் இப்போது மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்திற்காக பெக்கி விட்சனை முந்தியிருந்தாலும், பெக்கி விட்சன், விண்வெளிப் பயணத்தில் ஒரு பெண்மணியாக மிக நீண்ட காலம் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இப்போது 59 வயதானதால் ஓய்வுபெற்ற விட்சன், உயிர்வேதியியலாளர் ஆவார், அவர் 2002 மற்றும் 2017 க்கு இடையில் பல விண்வெளிப் பயணங்களில் மொத்தம் 665 மணி நேரங்களைப் பதிவு செய்தார்.
இப்போது, கோச்சின் நீட்டிக்கப்பட்ட பணியானது, நாசாவுக்கு நீண்ட விண்வெளிப் பயணங்களின் விளைவுகளைப் பற்றி அறிய உதவும். எதிர்கால ஆழமான விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆதரிக்க இதுபோன்ற தகவல்கள் தேவை என்று நாசா அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எந்தவொரு விண்வெளி வீரரும், ஆணும், பெண்ணும் விண்வெளியில் செலவழித்த மிக நீண்ட ஒட்டுமொத்த நேரம் இதுவாகும். ரஷ்யாவின் ஜெனடி படல்கா இந்தச் சாதனையைப் படைத்துள்ளார், 1998 மற்றும் 2015 க்கு இடையிலான அய்ந்து விண்வெளிப் பயணங்களில் 878 நாள்கள் (சுமார் 2 ஆண்டுகள்) இதில் அடக்கம்.
– சரா