தியாக சீலர்
கோமாளி மாமா-3
ஓவியம், கதை: மு.கலைவாணன்
நண்பர்கள் இருவரும் வருவதற்கு முன்பாக, தான் முதலில் போய்விட வேண்டும் என்று பூங்காவுக்கு வேகவேகமாக ஓடினான் செல்வம்.
ஆனால், அவன் வருவதற்கு முன்னதாகவே மாணிக்கமும் மல்லிகாவும் வந்திருந்தனர்.
“வா செல்வம்… நாங்க இப்பதான் வந்தோம். இன்னும் கோமாளி மாமா வரலே… அதுவரையில் நாம விடுகதை போடுவமா?’’ என்றாள் மல்லிகா.
“யோசிக்கிற வேலையாச்சே… அது செல்வத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே’’… என்றான் மாணிக்கம்.
“ஆமாமா… கஷ்டந்தான்… என்ன செய்யிறது… விடுகதையை சொல்லு மல்லிகா’’ என்றான் செல்வம்.
“எனக்குக் கண்கள் உண்டு… ஆனால், எதையும் பார்க்க மாட்டேன்… காதுகள் உண்டு. ஆனால் எதையும் கேட்க மாட்டேன்… எனக்கு வாய் உண்டு. ஆனால், எதையும் பேச மாட்டேன்… நான் இன்று போலவே என்றும் இருப்பேன்… நான் இளமையாக இருந்தால் இளமையாகவே இருப்பேன். முதுமையாக இருந்தால் முதுமையாகவே இருப்பேன். நான் யார்…? பதில் சொல்லுங்க’’… என்றாள் மல்லிகா.
“பெரிய விடுகதையா இருக்கே இது… இதுக்கு என்னா விடை?’’ என்றான் செல்வம்.
“டேய்! கொஞ்சம் யோசிடா…’’ என்று கெஞ்சுவது போல் சொன்னான் மாணிக்கம்.
“அதுதான் கஷ்டம்னு சொன்னனே… சரி யோசிக்கிறேன்’’ என்றபடி கண்ணை மூடிக்கொண்டு விடுகதையை மறுபடி சொல்லிப் பார்த்தான் செல்வம்.
“மல்லிகா! போட்டோதானே?’’ என்றான் மாணிக்கம்.
“சரியா சொன்னடா மாணிக்கம்! ஆமா, போட்டோதான். எப்படிடா கண்டுபுடிச்சே?’’ என வியப்பாகக் கேட்டாள் மல்லிகா.
“இளமையா இருந்தா இளமையா இருப்பேன்… முதுமையா இருந்தா முதுமையா இருப்பேன்னு சொன்னியே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்’’ என்றான் மாணிக்கம்.
“சரி… விடு… எனக்குப் பதிலா நீ விடை சொல்லிப் பேரு வாங்கிட்டே… யாரு யாருக்கோ எவ்வளவோ தியாகம் பண்றேன். உனக்காக நான் இதுகூட செய்ய மாட்டேனா…’’ என்றான் செல்வம்.
“எனக்காக நீ என்னடா பெருசா தியாகம் செய்தே?’’ என்று கேட்டான் மாணிக்கம்.
“எனக்கு பதில் தெரிஞ்சும் சொல்லாமல் இருந்தேனே, அதுவே பெரிய தியாகம். பதில் தெரியலேன்னாலும் அதுக்காக யோசிக்காமல் இருந்தனே அது அதைவிடப் பெரிய தியாகமில்லியா’’ என்றான் செல்வம்.
“செல்வம் நீ உண்மையிலேயே பெரிய தியாக சீலன்டா’’ என கேலியாகச் சிரித்தபடி சொன்னாள் மல்லிகா.
அந்த நேரம் அங்கே வந்த கோமாளி மாமா…
“என்ன மல்லிகா, யாரை தியாக சீலன்னு பாராட்டுறே?’’ என்றார்.
“அது ஒண்ணுமில்லே மாமா! மல்லிகா ஒரு விடுகதை போட்டுச்சு. அதுக்கான விடையை நான் சொல்ல வேண்டியது. எனக்குப் பதிலா மாணிக்கம் சொல்லட்டுமேன்னு நான் அமைதியா இருந்து அவனுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கித் தந்தேன். அதுக்காக என்ன மல்லிகா பாராட்டுதுங்க மாமா’’ என்றான் செல்வம்.
“ஏன், நீ பதில் சொல்ல வேண்டியதுதானே’’ என்றார் கோமாளி.
“பதில் தெரிஞ்சிருந்தா முதல்லேயே சொல்லியிருப்பேனே’’ என்றான் செல்வம்.
“ஓகோ… அதான் உன்னை தியாகி… தியாக சீலன்னு கிண்டலா பாராட்டுறாங்களா…’’ என்றார் கோமாளி.
“எப்படி என் தியாகம்?’’ என காலரை தூக்கிவிட்டபடி கேட்டான் செல்வம்.
“இது தியாகமே இல்லை. பல பேருடைய நன்மைக்காக ஒருத்தர் சிரமத்தை ஏத்துக்கிறதும், அதுக்காக கடைசி வரைக்கும் மனந்தளராமல் கொண்ட கொள்கையில் உறுதியா இருக்கிறதும்தான் தியாகம். நாட்டு விடுதலைக்காக… தன் இனத்தின் மேன்மைக்காக… தன்னோட மொழிக்காகன்னு உலகம் முழுக்க பலபேர் பல தியாகங்களைச் செய்திருக்காங்க. நீ என்னடான்னா விடுகதைக்கு விடை தெரியாமல் கதை விடுறதை தியாகம்னு சொல்றே…’’ என்றார் கோமாளி.
“மாமா! உண்மையான தியாகத்துக்கு ஏதாவது கதை இருக்குங்களா மாமா?’’ என்றான் மாணிக்கம்.
“கதையில்லே… உண்மை வரலாறே நிறைய இருக்கு… அதிலே ஒன்றைச் சொல்லட்டுமா?’’ என்றார் கோமாளி.
“சொல்லுங்க மாமா’’ என மூவரும் ஒரே குரலில் கேட்டனர்.
பிரெஞ்சு நாட்டில் உள்ள கிழக்கு பிரான்சில் டோல்ங்கிற ஊரில் 1822ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் பிறந்தவரு லூயிபாஸ்டர்…ங்கிற அறிவியல் அறிஞர். இவர்தான் உலகத்திலேயே முதன்முதலா வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியிலிருந்து காப்பாத்த ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிச்சவரு. அவர் அளவுக்கு அறிவியலுக்கு உயர்ந்த பங்களிப்பைச் செய்த ஓர் அறிவியல் அறிஞரை உலகம் இதுவரையிலே சந்திக்கவே இல்லை. அதனாலேதான் அவரை மருத்துவத்தின் தந்தைன்னு உலகம் போற்றிப் புகழுது.
ரேபீஸ் நோய் பத்தி ஆராய்ச்சியிலே ஈடுபட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்திலே ஜோசப்மெயின்ஸ்டர்ங்கிற ஒன்பது வயசு சின்னப் பையனை தெருவிலே விளையாடும்போது ஒரு வெறிநாய் பன்னிரண்டு இடத்திலே கடிச்சிடுச்சு.
அந்தப் பையனோட அம்மா அவனை தூக்கிக்கிட்டு மருத்துவமனைக்கு ஓடுனாங்க. ஆனா எந்த மருத்துவமனையிலேயும் அவனை காப்பாத்தவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கடைசிலே லூயிபாஸ்டர்னு ஓர் அறிவியல் அறிஞர் வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்காருன்னு கேள்விப்பட்டு அவரைத் தேடி வந்து… என் பிள்ளையை எப்படியாவது காப்பாத்துங்கன்னு கதறி அழுதாங்க அந்த அம்மா.
லூயிபாஸ்டரும், தான் கண்டுபிடிச்ச மருந்தை சோதிச்சுப் பாக்க இதுதான் சரியான வாய்ப்புன்னு அந்த சின்னப் பையனுக்கு மருந்தைச் செலுத்தி யாருமே காப்பாத்த முடியாதுன்னு சொன்ன ஜோசப் மெயின்ஸ்டரை காப்பாத்திட்டாரு.
அவனோட அம்மாவும் அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டருக்கு நன்றி சொல்லிட்டுப் போயிட்டாங்க.
உயிர் பிழைச்ச அந்த ஜோசப் மெயின்ஸ்டர் படிச்சு, வளந்து இளைஞனா ஆனான். படிச்ச படிப்புக்கு வேலை தேடி அலைஞ்சான்.
கடைசியா லூயி பாஸ்டர் கிட்டேயே மெய்க்காப்பாளன் வேலை கிடைச்சுது. அதைத் தன் உயிரைக் காப்பாத்துன உத்தமருக்குச் செய்யிற நன்றிக் கடனாக நினைச்சு சிறப்பா வேலை செய்துக்கிட்டிருந்தான். அவருடைய ஆராய்ச்சிக் கூடத்தின் காவலாளியாகவும் இருந்தான்.
1895ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டர் இறந்துட்டாரு…
“அய்யய்யோ! அப்ப அவருகிட்ட மெய்க்காப்பாளனா… காவலாளியா இருந்த ஜோசப் மெயின்ஸ்டருக்கு வேலை இல்லாமல் போயிருக்குமே’’ என சோகமாகக் கேட்டான் மாணிக்கம்.
“அதான்இல்லே… இறந்து போன லூயி பாஸ்டர் அறிவியல் துறையிலே பல சாதனைகள் செய்த அறிவியல் அறிஞரில்லையா? அதனாலே அவரை… அவர் வாழ்ந்த இடத்திலேயே ஒரு நிலவறையிலே அதாவது அன்டர்கிரவுண்டுன்னு சொல்லப்படுற நிலத்துக்கு அடியிலே உள்ள அறையிலே புதைச்சு கல்லறை கட்டினாங்க. அதுக்கு அந்த ஜோசப் மெய்னஸ்டரையே மெய்க்காப்பாளனா நியமிச்சாங்க.
“அடடே! லூயி பாஸ்டர் உயிரோட இருந்தபோதும் ஜோசப் மெய்ன்ஸ்டர்தான் மெய்க்காப்பாளர்; இறந்த பிறகும் ஜோசப் மெயின்ஸ்டர்தான் மெய்க்காப்பாளரா?’’ என வியந்து கேட்டாள் மல்லிகா.
“ஆமாம்! தன் உயிர்காத்த உத்தமரின் கல்லறையைக் காவல் காக்கிற பொறுப்பையும் சிறப்பா செய்து வந்தார் ஜோசப் மெயின்ஸ்டர். அந்தச் சமயத்துலே ஒருநாள் திடீர்னு சர்வாதிகாரி ஹிட்லரோட நாஜிப்படை பிரெஞ்சு நாட்டுக்குள்ள நுழைஞ்சி அந்த நாட்டைக் கைப்பற்றி அந்த நாட்டின் புகழ் பெற்ற இடங்களை எல்லாம் அழிச்சாங்க.
அறிவியல் அறிஞர் லூயிபாஸ்டர் உலகப் புகழ் பெற்றவராச்சே… அவரோட கல்லறையைத் தேடிக் கண்டுபுடிச்சு அழிக்க முயற்சி செய்தாங்க நாஜிப்படை.
ஆனா… அது எங்க இருக்குன்னு புதுசா பிரெஞ்சு நாட்டுக்குள்ள வந்தவங்களாலே கண்டுபுடிக்க முடியலே. மெய்க்காப்பாளரா இருந்த ஜோசப் மெயின்ஸ்டரைப் புடிச்சா அந்த இடத்தைக் கண்டுபுடிக்கலான்னு தெரிஞ்சு அவரைப் புடிச்சிட்டாங்க.
அவரை மிரட்டுனாங்க. அடிச்சாங்க. ஆனாலும்… கல்லறை இருக்கிற இடத்தைக் கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை. ஆத்திரமடைந்த நாஜிப்படை ஜோசப் மெயின்ஸ்டரை சுட்டுட்டாங்க. தன் உயிரைக் காத்த அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டரின் கல்லறையை காட்டிக் கொடுக்காம தன் உயிரை இழந்து தியாகி ஆயிட்டாரு ஜோசப் மெயின்ஸ்டர்.
லூயி பாஸ்டரின் வரலாறு இருக்கிற வரைக்கும் தியாகி ஜோசப் மெயின்ஸ்டரின் பேரும் நிலைச்சி இருக்குதே இதுக்குப் பேருதான் தியாகம்’’ என்றார் கோமாளி.
“அடடா… உலகத்துக்கே உயிர் காக்கும் மருந்து தந்தாரு மருத்துவத் தந்தை லூயி பாஸ்டர். அவராலே உயிர் பிழைத்த ஜோசப் மெயின்ஸ்டர் அவருடைய கல்லறையைக் காட்டிக் கொடுக்காமல் உயிரை இழந்தாலும் தியாக சீலரா ஆயிட்டாரே..!. இதுதான் உண்மையான தியாகம்’’ என கண்கலங்கியபடி சொன்னான் செல்வம்.
– மீண்டும் வருவார் கோமாளி.