அற்புத விழா
கற்பனைப் புராண இதிகாசக் கதைகளில் நம்பிக்கை கொளவேண்டாம்!
கற்சிலை பொற்சிலை எதையேனும்
கடவுளாய் நம்பித் தொழவேண்டாம்!
நிற்கதி ஆனோம் எனக்காலில்
நெடுஞ்சாண் கிடையாய் விழவேண்டாம்!
நற்கதி அருள்வாய் எனக்கோரி
நடையினில் உருண்டும் எழவேண்டாம்!
உற்சவ மூர்த்தியை வலமாக ஊரினுள் அழைத்து வரவேண்டாம்!
முற்பிறப் பாற்றிய கலிதீர
மூலவர் ஆசியும் தரவேண்டாம்!
பற்பல புண்ணியத் தலம்தேடிப்
பாதமும் புண்படச் செலவேண்டாம்!
கற்பினும் பகுத்தறி விலராகி காயமும் பொய்யெனச் சொலவேண்டாம்!
விற்பனர் கூடிக் கலந்தாய்ந்து
விழாநாள் குறித்த- தை முதல்நாளில்
நெற்குவை வாழை கரும்பீந்த
நிலம் நீர் வான்கதிர் எருதேரின்
பெற்றியை என்றும் மறவாமல்
பேணிடும் நன்றித் திருநாளாம்
அற்புதப் பொங்கல் விழாபோதும்
ஆரியர் விழாக்கள் எதும்வேண்டாம்!
– தளவை இளங்குமரன்,
செங்கல்பட்டு