அம்மை போடுவது மாரியாத்தாள் செயலா?
இவ்வளவு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், அம்மை வந்தவுடன் மாரியாத்-தாளுக்கு வேண்டுதல் நடத்துவதும், உடுக்கையடித்துப் பாடுவதும் நின்றபாடில்லை. காரணம், அம்மையென்பது மாரியாத்தாள் சீற்றத்தால் வருவது என்ற நம்பிக்கை மக்களிடம் பதிக்கப்பட்டுள்ளது. மாரியாத்தாளே இல்லையென்னும்போது சீற்றம் எங்கிருந்து வரும்?
எனது மகன் அறிவுக்கரசன் கடலூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படித்தான். அந்த விடுதியில் இருந்த ஒரு மாணவனுக்கு அம்மைவர, அவனோடு இருந்தவர்களுக்கும் அடுத்தடுத்து வர, நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பரவியது. இறுதியில் என் மகனுக்கும் வந்ததால் வீட்டிற்கு வந்தான். செய்தியறிந்ததும் விடுதிக் காப்பாளருடன் தொடர்புகொண்டு, அம்மை வந்தவர்கள் என்ன வைத்தியம் மேற்கொண்டார்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர், மாரியாத்தாள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, உங்கள் மனைவியை தினமும் குளித்துவிட்டு, ஈரத்துணியுடன் மாரியாத்தாள் கோயிலுக்குச் சென்-று மூன்றுமுறை சுற்றிவரச் சொல்லுங்கள் என்றார்.
அதெல்லாம் இருக்கட்டும், வீட்டிற்குப் போகாமல் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்று மீண்டும் கேட்டேன்.
மருந்தெல்லாம் வேண்டாம். சுற்றி வேப்பிலையைப் போட்டுவிட்டு, வேண்டிக்-கொண்டால் போதும் என்றார் விடுதிக் காப்பாளர்.
இதுதான் இன்றைக்குப் படித்தவர்களின் நிலை.
அம்மை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற சிகிச்சை முறையை, காப்பாளருக்குச் சொல்லிவிட்டு, என் மகனுக்கும் அந்தச் சிகிச்சையைச் செய்தேன்.
அம்மையென்பது வெயிலின் கடுமையில் ஒரு நோய்க்கிருமியால் வருவது. அது, தொற்றக் கூடியது. எனவே, அது ஒரு நோய். அது மாரியாத்தாள் கோபத்தால் வருவதல்ல.
அம்மை வந்தவர்களுக்கு இடுப்பில் ஒரு மெல்லிய பருத்தியாடையைக் கட்டிவிட்டு அவர்களைத் தனியறையில் இருக்கச் செய்ய-வேண்டும். மெல்லிய துணிகளைப் பரப்பி, அதில் நிறைய வேப்பிலைகளைப் போட்டு அதில் படுக்கவைக்க வேண்டும். அம்மை வந்தவர்களுக்கு உடம்பெல்லாம் சொறியத் தோன்றும். அப்போது விரல்களால் சொறிந்தால் புண்ணாகிவிடும். எனவே, வேப்பிலையால் வருடிவிட்டால் அரிப்பு தீரும். புண் ஏற்படாது. வேப்பிலையின் இரு விளிம்பும் கூர்கூராக மென்மையாக இருப்பதால், அரிப்பு தீர்க்கும்.
உண்பதற்கு வாழைப்பழத்தில் பேயன்பழம் கொடுக்கவேண்டும். வேப்பிலைக் காற்று அம்மைக் கிருமியைக் கொல்லக்கூடியது. அதனால்தான் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
வேப்பிலை ஒரு இருபது எடுத்து அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாதியாகச் சுண்டும்வரை கொதிக்க வைத்து இறக்கி, நன்றாக ஆற வைத்து, காபி டம்ளரில் 1/2 டம்ளர் சாறு அம்மை வந்தவருக்குக் கொடுக்கவேண்டும். ஒரு நாளைக்கு, காலை மாலை இருவேளைகள் கொடுக்க அம்மை நோய் விரைவில் குணமாகும்.
மற்றவர்களும் தினம் அரை டம்ளர் அச்சாற்றைப் பருகினால் அம்மைநோய் தொற்றாது. இச்சாறு சுரம், சளி இவற்றையும் நீக்கும். மாறாக, உடம்பில் வேப்பிலையை அரைத்துப் பூசுவது அதிக பயன் அளிக்காது.
அம்மை வடுக்கள் விழும்போதுதான் அந்நோய் பரவும். எனவே, அந்த நேரத்தில் அம்மை வந்தவருடன் பழகுதல், ஆடைகளைத் தொடுதல் கூடாது. ஆடைகளை, கொதிக்கும் வெந்நீரில் அமுக்கி அய்ந்து நிமிடம் கழித்துத் துவைக்க வேண்டும். இதெல்லாம் மருத்துவ வசதி அதிகம் வளராத அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை மருத்துவ முறைகள். ஆனால் இன்றைக்கு, ஒரு ஊசி அல்லது மாத்திரை போதும் மாரியம்மன் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடும் எனும் அளவிற்கு மருத்துவம் வளர்ந்து விட்டது. இந்நோய் வந்ததற்கான அறிகுறி தோன்றியதுமே மருத்துவரிடம் காட்டிப் பரிசோதனை செய்து, எளிமையான மருத்துவ முறையில் இந்நோயைக் குணப்படுத்திட முடியும். தழும்பு ஏற்பட்ட இடங்களில் தடவுவதற்கு களிம்பு ஒன்றும் வழங்கப்படுகிறது. அதை முறையாகத் தடவி வந்தால் அம்மை நோய் வந்ததற்கான தடயமே இல்லாமல் மறைந்து விடும். பிஞ்சுகள் இவற்றை நெஞ்சில் கொள்ள வேண்டும்.