தாத்தா போட்டபுதிர்
|
தாத்தா தோட்டத்திற்குச் செல்வதற்குத் தயாரானார். மாறன் தாத்தாவைப் பார்த்து, தாத்தா நம்ம தோட்டத்திற்கா செல்கிறீர்கள்? நானும் தங்களுடன் வரட்டுமா? எனக்கு இன்று விடுமுறைதானே என்று கேட்டான். தாத்தா மாறனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
செல்லும் வழியில் மாறனின் நண்பர்கள் பிரியனும், ராகுலும் பார்த்தனர். தாங்களும் வருவதாகக் கூறியதும் அனைவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே நடந்துசென்றனர்.
உற்சாகத்தில் – ஆர்வத்தில் வேகமாக நடந்தனர். சிறிது நேரம் தோட்டத்தில் விளையாடிவிட்டு, மரம் செடி கொடிகளின் அழகினை ரசித்துவிட்டுக் கிளம்பினர்.
வரும்போது நடைப்பயணம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தாத்தா, நான் சிறிது தூரம் நடந்து சென்று ஒளிந்து கொள்வேன். நான் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தால் உங்களுக்கு வீட்டிற்குச் சென்றதும் பரிசுப்பொருள் தருவேன் என்றார். மாறனும் நண்பர்களும், தாத்தா தாங்கள் ஒளிந்திருக்கும் இடத்தை எப்படிக் கண்டு-பிடிப்பது என்று கேட்டனர்.
நீ வரும் வழியில் வயிற்றில் பற்கள் உள்ளவன் இருப்பான். அவன் அருகே நான் ஒளிந்திருப்பேன் என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார் தாத்தா.
நண்பர்கள் மூவரும் யோசித்துக் கொண்டே – தங்களுக்குள் விவாதித்துக் கொண்டே நடந்தார்கள். அப்போது, ராகுல் உற்சாகமாய், நான் கண்டுபிடிச்சுட்டேன் என்று சொல்லி, வயிற்றில் பற்களைப் போன்று ஏராளமான மணிகளைக் கொண்டது மாதுளம்பழம். அதோ தெரிகிறதே அந்த மாதுளைமரத்தின் அருகில் தான் தாத்தா ஒளிந்திருக்க வேண்டும் என்றதும் நண்பர்கள் விரைந்து சென்று தேடினர்.
தாத்தா குழந்தைகளின் அறிவாற்றலைப் பாராட்டினார். இப்போது வயிற்றில் மீசை உள்ளவன் அருகே சென்று ஒளிந்திருப்பேன் என்று சொல்லி விரைந்து சென்றுவிட்டார்.
நண்பர்கள் மூவரும் சிந்தித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினர். அப்போது மாறன், டேய் மாம்பழம்டா, கொட்டையைச் சுற்றி நார் நாராக மீசை போன்று இருக்குமே என்றான். மாமரத்தினைத் தேடி அருகில் சென்று பார்த்தனர். தாத்தா பாராட்டுரையுடன் வரவேற்றார். தாத்தா, நாங்கள்தான் கண்டுபிடிச்-சுட்டோம்ல, என்ன பரிசு தருவீர்கள் என்றான் மாறன்.
அதற்குத் தாத்தா, அவசரப்படாதீர்கள் குழந்தைகளா, இன்னும் ஒரு புதிர் உள்ளது. வயிற்றில் தண்ணீர் உள்ளவன் அருகே ஒளிந்திருப்ன் கண்டுபிடியுங்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
தான் ஒரு புதிருக்கும் விடை கண்டு-பிடிக்கவில்லையே என நினைத்து புத்தியைத் தீட்டினான் பிரியன். அதோ தெரிகிறதே அந்தத் தென்னை மரத்தினருகேதான் தாத்தா இருக்க வேண்டும் என்று பிரியன் சொன்னான். வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப் போல் ஓடிச்சென்று தேடினர். தாத்தா உற்சாக வரவேற்பைக் கொடுத்து, பாராட்டி குழந்தைகளை அழைத்துச் சென்றார்.
அப்போது, பிரியனின் வீடுவந்தது. தாத்தா, எங்க வீடு வந்துவிட்டது. நான் வீட்டிற்குச் செல்கிறேன். எங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன பரிசுப் பொருள்…. என்று இழுத்தான் பிரியன். அதனைக் கேட்ட தாத்தா,
இந்த அரசர் இறந்த பிறகு அரசி அரியணையில் அமர்வாள். அவளைச் சூழ்ந்து அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போது வா என்று கூறி விடைபெற்றார்.
சிறிது தூரம் சென்றதும் ராகுலின் வீடுவரவே, தாத்தா… என்று தயங்கினான் ராகுல். நினைவு இருக்கிறது,
கண்ணாடிப் பாத்திரம் வெள்ளியை உமிழும்போது வா என்று சொல்லிச் சென்றார் தாத்தா.
மாறன் தாத்தாவுடன் வீட்டிற்குள் வந்ததும், தாத்தா எனக்குப் பரிசு இல்லையா என்றான். புன்முறுவலுடன் தாத்தா உலகிலுள்ள தண்ணீரை-யெல்லாம் ஒரு பாத்திரத்தில் எடுத்துவந்து உன் பரிசினை வாங்கிக் கொள் என்றார்.
பிரியனும், ராகுலும் பரிசுப் பொருளினை எப்போது வாங்கினார்கள்? மாறன் எப்படி வாங்கினான்? கண்டுபிடியுங்கள்.