நெப்போலியனை தோற்கடித்தவர்
உடன் பிறந்தவர்கள் 11 பேர். 6 ஆவது பிள்ளையாகப் பிறந்தவர். குடும்பத் தலைவனின் வருமானம் மிகவும் குறைவு. வறுமையில் வாடியதால் குழந்தைகள் எலும்பும் தோலுமாகவே காட்சியளித்தனர். 6 ஆவது பிள்ளை மெலிந்த தோற்றத்துடன் காட்சியளித்தாலும் உள்ளத்தில் திடமான உறுதி கொண்டவராக இருந்தார். பயம் என்றால் என்னவென்றே அறியாதவர். எதனையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்.
தன் அண்ணனுடன் பள்ளிக்குப் புறப்பட்டார். சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். பாதையோ மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 18 ஆம் நூற்றாண்டு அல்லவா? நல்ல பாதைகள் அரிதாகவே காணப்பட்ட காலம். அது பனிக்காலம் என்பதால் அதிகமான பனி பெய்து, பாதை பார்ப்பதற்குத் தெரியாமல் பனிப்பாறைகள் சூழ்ந்திருந்தன.
அண்ணனும் தம்பியும் பள்ளிக்குக் கிளம்பியதைக் கவனித்த அப்பா, குழந்தைகளா, பனி இன்று அதிகம் பெய்கிறது. நீங்கள் செல்லும் வழியில் ஆபத்து ஏதேனும் ஏற்படுமென்று தோன்றினால், உடனடியாக வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுங்கள். துணிந்து செல்வதாக நினைத்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. எனவே, பாதையின் தன்மையைப் பார்த்துச் செயல்படுங்கள் என்ற அறிவுரையுடன் பள்ளிக்கு அனுப்பினார்.
அண்ணனும் தம்பியும் சென்ற வழியானது குறுகலாக, சதுப்பு நிலமாக இருந்தது. இங்கே கால் வைத்தால் அ-ழுந்திவிடுவோம் என்று யாரும் பயப்படும்படியாக பாதை இருந்தது. பாதையைப் பார்த்த அண்ணன் பயந்தார் – அங்கேயே நின்றார். தம்பி அச்சம் என்பதை அறியாதவர். ஆதலால், துணிந்து காலை முன் வைத்தார்.
அண்ணன் தம்பியைப் பார்த்து, தம்பி ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால் பள்ளிக்குச் செல்லாமல் திரும்பி வந்துவிடுங்கள் என்று அப்பா எச்சரிக்கை செய்து – அறிவுரை சொல்லித்தானே அனுப்பினார். வா வீட்டிற்குச் சென்று விடலாம் என்றார்.
இதனைக் கேட்ட தம்பி, அண்ணா ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால்தானே அப்பா திரும்பி வரச் சொன்னார். எனக்கு ஆபத்து ஏற்படும் என்று தோன்றவில்லை. தாங்கள் வேண்டுமானால் திரும்பி வீட்டிற்குப் போங்கள் என்றார். சொல்லியதோடு நிற்காமல், ஆபத்துகளைக் கடந்து பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பினார்.
தம்பியின் அஞ்சா நெஞ்சத்தைப் பார்த்த அண்ணன், அவர்களது அப்பா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவரது குடும்பத்தினரை மட்டுமா ஆச்சரியப்படவைத்தார்? பிற்காலத்தில் மாபெரும் வீரன் எனப் போற்றிப் புகழப்பட்ட நெப்போலியனையே தோற்கடித்து, இந்த உலகத்தையே ஆச்சரியப்பட வைத்தவரல்லவா? இவரது பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர் நெஞ்சை நிமிர்த்தியல்லவா நிற்பர்.
இங்கிலாந்தில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனால், வீரர்களுக்-கெல்லாம் வீரர் எனப் போற்றப்படுபவர் நெல்சன் ஒருவர்தானே!