சிந்தனை – போதி தருமர்
சரவனா ராஜேந்திரன்
6-ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்திய தீபகற்பம் முழுவதும் பரவி இருந்த பவுத்தம் தென் இந்தியாவில் சிவனைக் கும்பிடும் சைவ மதத்தவர்களால் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது. பவுத்தத்தைச் சேர்ந்த துறவிகள் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர். 7ஆம் அறிவு என்னும் திரைப்படத்தின் மூலமாக நமக்கு அறிமுகமான போதிதருமர் என்கிற தமிழ் பவுத்தத் துறவி பவுத்த நெறிகளைக் காப்பாற்றும் பொருட்டு 6-ஆம் நூற்றாண்டில் இன்றைய மலேசியா சென்று அங்கிருந்து தரை வழியாக சீனா சென்றார். அங்கு புத்தரின் கொள்கையை மக்களிடையே பரப்பத் துவங்கினார்.
சீனாவில் ஏற்கெனவே கன்பூசியஸ். லாவோதிசூ போன்றோரின் பகுத்தறிவுக் கருத்துகளின் தாக்கம் இருந்தது. அதை ஒட்டியே போதி தருமரின் புத்தக் கொள்கையும் சீனாவில் குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. சீனா, மங்கோலியா, கொரிய தீபகற்பம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று புத்தரின் கொள்கையைப் பரப்பி வந்தார்.
விரைவிலேயே அவர் கிழக்காசியா முழுவதும் அறிமுகமானார். போதி தருமரின் வருகை வசந்த காலத்தில் வனமெங்கும் பரவும் செர்ரிப்பூக்களின் நறுமணம் போல் இருந்ததாக சீனர்கள் வருணிப்பார்கள். தென் கிழக்கு ஆசிய நாடுகள் எங்கும் சுற்றுப்பயணம் செய்த போதி தருமர், ஒருமுறை வணிகர்கள் கப்பலில் ஏறி ஜப்பான் சென்றார்.
அக்காலத்தில் அங்கு ஆட்சியில் இருந்த ஜப்பான் அரசன் கண்மூடித்தனமான மூடநம்பிக்கை கொண்டிருந்தார். காலை எழுந்த உடன் அவர் கண் திறக்கும்போது ஒரு கடல் ஆமையைக் காட்டவேண்டுமாம். ஜப்பானியர்களுக்கு கடல் ஆமையை அதிகாலையில் பார்த்தால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை உண்டாம்.
அதே போல் மறுபிறவி என்பதிலும், நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக பூஜைகள் செய்வது போன்ற பல கோமாளித்தனமாக செயல்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டவர். பெரும்பாலான மக்களுக்கு அந்த மன்னரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. இருப்பினும் அவர் மன்னர்; அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் தலையை வெட்டிவிடுவார்கள். ஆகையால், மக்கள் மன்னரின் செயல்பாடுகளால் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவந்தனர். இந்த நிலையில் வணிகர் கப்பலில் சென்ற போதி தருமர் ஜப்பான் துறைமுகத்தை அடைந்தார்.
அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. போதிதருமரை வணங்கிய ஓர் அரேபிய வணிகர் மிகவும் உயர்வகை நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை பரிசாகத் தந்தார். அவற்றைப் பெற்றுக்கொண்ட போதி தருமர் சில நாள்கள் ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். மக்களுக்குப் பல்வேறு இன்னல்கள் இருப்பதும், அதற்கு மன்னரின் மூடநம்பிக்கையும் காரணம் என்று தெரிந்துகொண்டார். இந்த நிலையில் போதிதருமர் ஜப்பான் வந்ததும், அவர் மக்களைச் சந்திப்பதும் ஜப்பான் மன்னருக்கும் தெரிய வந்தது.
போதிதருமர் புகழ்பெற்ற பவுத்தத் துறவி. ஆகையால் மன்னர் அவரைத் தனது அரண்மனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட போதிதருமர், அரண்மனைக்கு வருகை புரிய ஒப்புக்கொண்டார். இதனையொட்டி போதிதருமரை வரவேற்க அரண்மனை சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது. கோடைக் காலம் _ போதிதருமருக்கு முழுநிலவு இரவு விருந்து கொடுக்க மன்னர் விரும்பினார். போதிதருமரும் மன்னரின் அரண்மனைக்கு வருகைதந்தார். மன்னரும் அவரது மனைவியும் போதிதருமரை வாசல் வரை வந்து வரவேற்றனர்.
மிகவும் மெலிந்த தேகம், துறவிகளின் எளிய ஆடை, கையில் குச்சி, அதன் மேல் முனையில் மாற்று ஆடைகளையும் தேவையான பொருள்களையும் ஒரு துணியில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அவர் மன்னரின் அரண்மனையின் உள்ளே நுழைந்ததும், அவரது எளிமையைக் கண்டு அனைவரும் வியந்துவிட்டனர். அங்கே இருந்த பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்க, வைர நகைகளுடன் பெரும் செல்வந்தர்களாக இருந்தனர். ஆனால், போதிதருமரோ உடலைப் போர்த்தியிருக்கும் எளிய ஆடையுடனும் கையில் குச்சியுடனும் அரண்மனையின் உள்ளே நுழைந்தபோது அவரை அனைவருமே மரியாதையோடு வரவேற்றனர். அவரின் போதனைகளை மன்னரும், மகாராணியும் அமைதியாகக் கேட்டனர்.
அதன் பிறகு மன்னர் போதிதருமருக்கு உணவு வழங்கினார். உணவருந்திய பிறகு போதி தருமர் மன்னரிடம், “நான் உனக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்று கூறி அரேபிய வணிகர் கொடுத்த ஊதுபத்தியில் சிலவற்றை அங்கே பற்றவைத்தார். அரண்மனை முழுவதும் அந்த நறுமணத்தால் நிரம்பியது. ஊதுபத்தியின் வாசனையில் மயங்கிய மன்னரிடம், “மன்னா! இந்த ஊதுபத்தியின் மணம் எப்படி உள்ளது?” என்றார். அதற்கு மன்னரோ, “இதுவரை நான் என் வாழ்நாளில் இவ்வளவு இனிய நறுமணத்தை நுகர்ந்ததில்லை’’ என்று கூறி, “உங்களிடம் இந்த ஊதுபத்தி இருந்தால் எனக்குத் தாருங்கள்” என்றார்.
அதற்கு போதிதருமர், “மன்னிக்கவும் மன்னா! என்னிடம் அரேபியாவில் இருந்து வந்த ஒரு வணிகர் இதைத் தந்தார். அவர் கப்பலில் இருந்து அப்படியே சீனாவுக்குச் சென்றுவிட்டார். ஆகவே. இந்த ஊதுபத்தியை இனிமேல் மீண்டும் வாங்கமுடியாது. ஆகவே, உனது அரச சபையில் பல மதச் சாமியார்கள் உள்ளனர். அவர்களிடம் கூறி இதோ எரிந்து போன சாம்பலில் இருந்து மீண்டும் ஊதுபத்தியை உருவாக்கிவிடு” என்றார்.
இதைக் கேட்ட ஜப்பான் மன்னர், “என்ன போதி தருமரே! நீங்கள் மாபெரும் துறவி. உங்களது அறிவுத்திறமையை உலகம் புகழ்கிறது. அப்படி இருக்க எரிந்து சாம்பலான ஊதிபத்தியை மீண்டும் உருவாக்க முடியாது என்று தெரிந்தும், நீங்கள் இப்படிக் கூறுவது சரியில்லையே’’ என்றார். அதற்கு போதிதருமர், “மன்னா! ஓர் ஊதுபத்தி எரிந்து போனால் அதை மீண்டும் உருவாக்க முடியாது என்று தெரிந்த நீ, செத்துப் போனால் மறுபிறவி எடுப்பாய் என்பதை எப்படி நம்புகிறாய்?” என்றார், இதைக் கேட்ட மன்னர் திகைத்துவிட்டார். “அதே போல்தான் காலையில் ஆமைமுகத்தில் விழித்தாலும் பூனை முகத்தில் விழிந்ததாலும் அன்றாடம் சூரியன் உதிக்கத்தான் செய்யும். இயற்கை அதன் பணியைச் செய்யத்தான் செய்யும். நம்முடைய நடவடிக்கைதான், நமது அடுத்த செயல் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது. நல்ல தரமான தானியத்தை விதைத்த விவசாயி காலையில் ஆமையைப் பார்த்துகொண்டு இருந்தால், பயிர் முளைக்காது. விதை போட்ட பிறகு நாற்று பிடுங்கி, நட்டு, களை எடுத்து பக்குவமாகத் தண்ணீர் ஊற்றி, கண்ணும் கருத்துமாகப் பயிரைக் கவனித்தால்தான் நெல் வீட்டுக்கு வந்து சேரும். ஆமையைப் பார்த்துக்கொண்டு இருந்தால், ஆமை ஓடிவிடும். ஆனால், உன் அறிவு பாழாகி விடும்.
ஆகவே, இன்றோடு உன்னுடைய முட்டாள்தனமாக மூடநம்பிக்கையை ஒழித்துவிட்டு பகுத்தறிவோடு செயல்படு” என்று அறிவுரை கூறினார்.
போதிதருமரின் அறிவுரையைக் கேட்ட மன்னர் தனது மூடத்தனத்தை உணர்ந்தார். அதன் பிறகு அவனும் தன்னுடைய ஆட்சியை பகுத்தறிவுச் சிந்தனையோடு நடத்தினார். மன்னரின் வழியே மக்களும் நடந்து ஜப்பானை உழைப்பால் முன்னேற்றிக் காட்டினர்.