ஏழடிச் சுவர்
விழியன்
மணிமேகலைக்குக் கோபம் கோபமாக வந்தது. பள்ளிக்குக் கிளம்பும்போதுதான் அந்த சுவரைக் கவனித்தாள். மேகலையின் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் அய்ந்நூறு மீட்டர் தூரம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு முதன்மைச் சாலையின் இந்தப் பக்கம் இவர்களது வசிப்பிடம். அந்தப் பக்கம் அவர்களது பள்ளி. பள்ளியின் மணிச்சத்தத்தை சன்னமாக வீட்டில் இருந்தபடியே கேட்கலாம். ஆனால், அந்தச் சாலைக்கு வந்த பிறகு இந்தச் சத்தம் கேட்பது குறைந்துவிட்டது. எப்போதும் ஏதேனும் வண்டிச்சத்தம் மட்டுமே கேட்கும். மேகலையின் கோபத்திற்குக் காரணம், அந்த முதன்மைச் சாலையின் இருபக்கமும் சுவர் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். இதனால் மணிமேகலையும் அவள் நண்பர்களும் சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றிக்கொண்டுதான் பள்ளிக்குப் போக இயலும். மணிமேகலைக்குப் போவதில் சிரமம் இல்லை. ஆனால், அவளுடன் காலினை இழுத்து இழுத்து நடக்கும் நண்பர் பிரேமால் எப்படிப் போக முடியும் என்று கோபமுற்றாள்.
இவர்கள் பகுதி ஊருக்கு வெளியேதான் இருக்கின்றது. நகரத்தில் இருந்து அய்ந்து கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக ஒரு கால்பந்து விளையாட்டுத் திடல் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் பகுதியில் இருந்தும்கூட ஆள்கள் அங்கே வேலைக்குச் செல்வார்கள். அந்தத் திடலை விரைவில் திறக்க இருக்கின்றார்கள். அதனை பெரிய விழாவாக எடுக்கின்றார்கள். அயல் நாட்டில் இருந்து பெரிய அதிகாரி ஒருவர் வருகை புரிகின்றார். அவர் நகரத்தில் இருந்து விளையாட்டுத் திடலுக்குச் செல்லும் வழியில் மணிமேகலையின் பகுதி இருப்பதால், அதனை மறைக்க இரண்டு பக்கமும் ஏழடி உயரத்துக்கு சுவர் எழுப்புகின்றார்கள்.
பிரேமை பள்ளிக்கு அழைத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு நாள் பாடமும் முக்கியம். மணிமேகலைக்கு சைக்கிள் ஓட்ட வராது. சுரேஷ் அண்ணனிடம் அவரது சைக்கிளைக் கேட்டாள். பிரேமை அதன் பின் இருக்கையில் அமர்த்தினாள். சிரமப்பட்டு தள்ளிக்கொண்டே சென்றாள். பிரேமின் அம்மாவும் அப்பாவும் “ஒரு ரெண்டு வாரம் தானம்மா, விடு! வீட்லயே இருக்கட்டும்’’ என்றனர். ஆனால் மணிமேகலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கோபமாகத்தான் இருந்தாள். ஆனால், நிதானமாக வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றாள்.
இதனிடையே அப்பகுதியில் சுவர் எழுப்ப எதிர்ப்புக் கிளம்பியது. பெண்கள் தண்ணீர் எடுக்க வெகுதூரம் செல்ல வேண்டும். வேலைக்குச் செல்பவர்கள் வெகுதூரம் சென்று பேருந்தோ, வண்டியோ ஏற வேண்டும். தானிகள் (ஆட்டோக்கள்) அதிக தூரம் சென்று ஊருக்குள் செல்லவேண்டும். ஊரின் நடுவே எல்லோரும் கூடி என்ன செய்வது என பேசினார்கள். சிலர் சமாதானம் செய்தார்கள். “ஒரு வாரம் தானப்பா, பல்லைக் கடிச்சிட்டு இருப்போம்.’’ அவருக்கு எதிராகச் சத்தம் எழுப்பினார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த மணிமேகலை திடீரென எழுந்தாள். “ஆமா, எல்லாமே நமக்கு தூரமாத்தான் இருக்கு’’ என்று கூறினாள். கூட்டம் அமைதியானது. மெல்ல கலைந்து சென்றுவிட்டனர்.
மறுநாள் போலிஸ் ஜீப்பில் சிலர் வந்து, எதுவும் செய்யாதீர்கள் என மிரட்டிவிட்டுச் சென்றனர். செவ்வாய்க்கிழமை கால்பந்துத் திடல் திறப்புவிழா. திங்கள், செவ்வாய் இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் சலித்துக்கொண்டனர். ‘எப்படியும் இன்னொரு நாள் திறக்கச்சொல்லுவாங்க. சிலர் நான்கு நாள்கள் விடுமுறை இருக்கு’ என வெளியூருக்குக் கிளம்பிவிட்டனர். சனிக்கிழமை முதலே மணிமேகலை தனியாகவே அமர்ந்து இருந்தாள். பேசவில்லை; ஒழுங்காகச் சாப்பிடவில்லை. ஒரே யோசனையாக இருந்தாள். சனிக்கிழமை மாலை சுரேஷ் அண்ணன் அவர் வீட்டில் பறை அடித்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் மேகலைக்கு அந்த எண்ணம் தோன்றியது. ஞாயிறு அன்று காரியத்தில் இறங்கினாள். எல்லாரிடமும் முழுச் சம்மதமும் கிடைத்தது.
திங்கட்கிழமை காலை முதலே பக்கத்து ஊர்களில் இருந்து குழந்தைகள் வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் விடுமுறை தானே! சுமார் அறுபது பறைக் கருவிகள் வந்துவிட்டன. சுரேஷ் அண்ணனும் அவர் நண்பர்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் பறையடிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். திங்கள் காலை முதல் மாலை வரையில். ஊர்ப் பெரியவர்கள் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். ரோந்து (சுற்றுக்காவல்) வந்த போலிஸ், “நாளைக்கு ரோட்டுக்கு இந்தப் பக்கம் வராதீர்கள்’’ என எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி முதல் பறையிசை அந்தப் பகுதி முழுக்க எதிரொலித்தது. விளையாட்டுத் திடல் திறப்பு விழாவுக்கு அப்பகுதியைக் கடந்து சென்ற வெளிநாட்டு அதிகாரியின் காதில் விழும் அளவுக்குச் சத்தமாக இருந்தது. அவர், “என்ன சத்தம் அது’’ என விசாரித்தார். “அது இந்த மண்ணின் இசை’’ என்றார் இந்திய அதிகாரி. “என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள்’’ என்றார். இந்திய அதிகாரிகள், “அது ப்ரோட்டாகாலில் (நிகழ்ச்சித் தொகுப்பில்) இல்லை, பாதுகாப்பு காரணங்களுக்காக முடியாது” என்று மறுத்துவிட்டனர். ஆனால், அவர் விடவில்லை. சரி என்று கார்கள் திரும்பி அந்த சுவரைக் கடந்து மணிமேகலையின் ஊருக்குள் நுழைந்தன. கார் சன்னலை இறக்கி சுற்றும் முற்றும் பார்த்தார். “என்ன அங்கே நடக்கின்றது? யார் காரணம்?’’ என்றதும் கைகள் அனைத்தும் மணிமேகலையைச் சுட்டின. அவளை மட்டும் வெளிநாட்டு அதிகாரியின் காருக்கு அருகே அழைத்தனர். அவளை ஆய்வு செய்து அனுப்பினர்.
“குட்டிப்பெண்ணே, எதற்கு இப்படிச் செய்தாய்?’’ என ஆங்கிலத்தில் கேட்டார்.
“உங்கள் காதுக்கு இது கேட்கவேண்டும் என்று தான். நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்’’ உடைந்த ஆங்கிலத்தில் மணிமேகலை பேசினாள்.
“என்ன உதவி வேண்டும்? சொல்லம்மா!’’
அவர்கள் பேசுவதை எல்லோருமே கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்திய அதிகாரிகள் கூனிக்குறுகி நின்றார்கள். ஊர் மக்கள், சுவர் இடிக்கச் சொல்லுவாள் என்று நினைத்தார்கள். பெண்மணிகள் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு வேண்டும் எனக் கேட்பாள் என நினைத்தார்கள். ஒவ்வொருவராக பின்னால் இருந்து ‘இதைக் கேள், அதைக் கேள்’ என்று கோரினார்கள்.
தன் சட்டைக்குள் கைவிட்டாள். பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கையானார்கள். உள்ளிருந்து ஒரு புத்தகம் எடுத்தாள். அண்ணல் அம்பேத்கர் ஒளிப்படம் தாங்கிய புத்தகம். அதனை அந்த அதிகாரியிடம் நீட்டி, “Please arrange for a big library. Books, a calm place and a dedicated librarian would do”
“ஒரு பெரிய நூலகத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். புத்தகம், வாசிக்க அமைதியான இடமாகவும் ஓர் அர்ப்பணிப்புள்ள நூலகரும் போதும்’’ என்றாள்.
கூட்டத்தில் இருவேறு எதிர்வினைகள் _ இதைப்போய் கேட்டிருக்காளே… அதைக் கேட்டிருக்கலாம் என்று.
இந்திய அதிகாரிகளைப் பார்த்து “This girl is not asking for a help, she is asking seed for a change” “அவள் உதவி கேட்கவில்லை மாற்றத்துக்கான விதையைக் கேட்கின்றாள்” என்றார்.
அவளிடம் திரும்பி அவள் தலையை வருடி “I will” என்று சொல்லி கைகுலுக்கினார்