காரணமின்றி ஏற்காதீர்கள் – தந்தை எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுதல்?
சிகரம்
தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்தைத் தங்கள் பெயருக்குத் தலைப்பெழுத்தாகக் கொள்வது வழக்கில் உள்ளது.
தந்தைதான் உயிரணுவைத் தருகிறான். தாய் விளை நிலமாகவே பயன்படுகிறாள். குழந்தைக்கு உரிமையாளன் தந்தையே. எனவேதான் தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்து தலைப்பெழுத்தாகப் போடப்படுகிறது என்று சிலர் கருத்துக் கூறுகின்றனர்.
இவ்வாறு விளக்கம் கூறுவது முழுக்க முழுக்க அறியாமையின் அடையாளமாகும்.
குழந்தைக்குத் தேவையான உயிரணுவைத் தந்தை மட்டுமே கொடுப்பதில்லை. தாயின் உயிரணு (சினை அணு), தந்தையின் உயிரணு (விந்தணு) ஆகிய இரண்டும் சேர்ந்தே கரு உருவாகிறது.
தந்தைக்கு உயிரணுவைத் தருவதோடு அவன் வேலை முடிந்து விடுகிறது. ஆனால், கருவைப் பத்து மாதம் சுமந்து கடினப்பட்டுப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்க்கின்ற பெரும் பொறுப்பு தாயினுடையதே. அவ்வகையில் நோக்கின் தாயின் பெயரிலுள்ள முதலெழுத்தையே தலைப்பெழுத்தாகப் போட வேண்டி வரும்; போடவும் வேண்டும்.
தாய் வழிச் சமுதாய அமைப்பு மாறி, ஆண் ஆதிக்கச் சமுதாய அமைப்பும், ஆண் வழிச் சொத்துரிமை ஏற்பட்டமையும் தந்தையின் தலைப்பெழுத்தைப் போடுவதற்கான முக்கிய காரணங்களாகும். தாய், தந்தை, இருவரின் தலைப்பெழுத்துகளையும் சேர்த்துப் போடுவதே சாலச் சிறந்தது. அதை அரசும் ஏற்கிறது. அண்மையில் வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்றில் செயற்கைக் கருவூட்டலில் பிறந்த குழந்தைக்கு, தாயின் தலைப்பெழுத்தையே பயன்படுத்தலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
விளக்கு அணைந்தபின் உண்ணக்கூடாது
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென விளக்கு அணைந்து போனால், சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இருட்டில் சாப்பிடக்கூடாது என்பது சம்பிரதாயமாம்.
விளக்கு அணைந்தபின் சாப்பிட்டால் தரித்திரம் என்பார்கள். இதில் ‘தரித்திரம்’, ‘அதிர்ஷ்டம்’ என்பதற்கெல்லாம் ஒன்றும் வேலையில்லை. சுகாதாரக் கண்ணோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டதே இவ்வழக்கம்.
இருட்டில் சாப்பிட்டால் சாப்பிடும் உணவில் ஏதாவது பூச்சி, தூசு விழுந்தால் தெரியாமல் போய்விடும். அதனால் அதையும் சேர்த்து உண்ண நேரிடும். அதைத் தவிர்க்கும் பொருட்டுத்தான் அவ்விதம் சொன்னார்கள்.
மேலும், சாப்பிடும் பொருள் எது எங்கெங்கு இருக்கிறது என்பதைச் சரியாகக் கண்டறிந்து உண்ண இருட்டில் இயலாது. எனவே, இருட்டில் உண்ணக்கூடாது என்றனர். மற்றபடி இதற்குச் சிறப்புக் காரணம் ஏதும் இல்லை.