வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை!
விட்டத்திலும் தலைகீழாய்
வீட்டுள் தொங்கும் பறவை!
ஒட்டிநிற்கும் சுவர்மீதும்
ஒற்றைக்காலுப் பறவை!
எட்டவைத்தும் நடைபோட
இயன்றிடாத பறவை!
வட்டமிட்டும் நடுவானில்
வலம்வராத பறவை!
பட்டினிக்கும் இரைதேடும்
பழக்கமிலாப் பறவை!
குட்டைகுளம் நதிநீரும்
குடித்தறியாப் பறவை!
திட்டமிட்டும் ஒரு கூடும்
தேர்ந்தமைக்காப் பறவை!
முட்டையிட்டும் அடைகாவா
மூன்றுசிறகுப் பறவை!
அட்டியின்றி வெயிற்காலம்
அகற்றும்நமது வியர்வை!
வெட்டும்மின்னல் மழைக்காலம்
விரட்டியடிக்கும் கொசுவை!
தட்டிவிடும் விசையாலே
தான்சுழற்றும் சிறகை!
மெட்டெடுத்தும் இசைபாடா
‘மின்விசிறி’ப் பறவை!
– தளவை இளங்குமரன்,
தென்காசி.