கண்ணாடி!
எனக்கு எதிரே கண்ணாடி
என்னைப் பார்த்தேன் முன்னாடி
நினைத்த போதே என்னைப்போல்
கணத்தில் காண மகிழ்ந்தேனே!
வலது கையால் செய்ததை
மறதி ஏதும் இல்லாமல்
இடது கையால் செய்ததே
என்னைக் கவர்ந்த கண்ணாடி!
எந்த வீடு சென்றாலும்
எதிரே நிற்கும் கண்ணாடி
சொந்தம் போல நம்மோடு
உறவாய் இருக்கும் கண்ணாடி!
தண்ணீர் போல முகம்காட்டும்
தன்மை கொண்ட கண்ணாடி
கண்ணீர் மனத்தின் உணர்வுகளை
காட்டிக் கொடுக்கும் கண்ணாடி!
சிரித்தால் சிரிக்கும் கண்ணாடி
சிந்திக்கத் தெரியா கண்ணாடி
உரித்தாய் காக்கத் தவறிட்டால்
உடைந்தே போகும் கண்ணாடி!
– அருப்புக்கோட்டை செல்வம்.