காரணமின்றி ஏற்காதீர்கள் – ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா?
வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள். இது மிகப்பெரிய அறியாமை.
வாழைப்பழம் உருவாகும் போது இரண்டு பழங்கள் ஒட்டிக் கொள்கின்றன. அதனால் அப் பழத்தில் எந்த மாற்றமும் கேடும் இருப்பதில்லை. இரட்டைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்ற மூடநம்பிக்கையால் அப்பழங்-களை விலக்குகிறார்கள். இரட்டை வாழைப்பழம் சாப்பிடுகிறவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை. நாம் சாப்பிடும் உணவு எல்லாம் செரித்த பின் இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல் வழியாக வெளியேறும். குழந்தை பிறப்பது கருப்பையில்! கருப்பைக்கும் இரைப்பைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வாழைப்பழமே சாப்பிடாதாவர்களுக்கும் இரட்டைக் குழந்தை பிறக்கிறது. இரட்டைப் பழத்தைச் சாப்பிடுகிறவர்களுக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதில்லை. இதுவே நடைமுறை உண்மை. ஒரே வயிற்றில் நான்கைந்து குழந்தைகள் பிறக்கிறது. இதற்கென்ன இரட்டை வாழைப்பழமா காரணம்? சிந்திக்க வேண்டும்.
சில நிகழ்வில் இரண்டு குழந்தைகள் ஒட்டியே பிறக்கும். 5 வயதுக்குப்பிறகு கூட அவர்கள் ஒட்டியே வளர்ந்து பிறகு அறுவை செய்து பிரித்து எடுத்திருக்கிறார்கள். ஓட்டிப்பிறந்த குழந்தை என்பதால் அவர்களை நாம் ஒதுக்கி விடுவதில்லை அவர்கள் பிற்காலத்தில் நிறைய சாதித்திருக்-கிறார்கள்.
எனவே, இரட்டை வாழைப்பழத்தை வெறுக்காமல், விலக்காமல் விரும்பி உண்ணலாம். அதனால் எந்தக்கேடும் இல்லை.
மனிதர்களிலே சிலருக்கு இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். அது போல் இயற்கையாய் வாழைப்பழங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவே தவிர மற்றபடி அப் பழங்களுக்கும் மற்ற பழங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
பெரியவர்கள் முன்
கால்மேல் கால் போடக்கூடாதா?
ஆண்களுக்கு முன் பெண்கள் உட்காரக் கூடாது என்ற நிலை இருந்தகாலம் உண்டு. அது பெரியார் பிரச்சாரத்தால் ஒழிக்கப்பட்டது. அதே போல், பெரியவர்கள்முன் கால் மேல் கால் போட்டு உட்காருவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று கூறப்படுகிறது. இதுவும் அறியாமையே!
ஒருவர் தன் வசதிக்கு எப்படி உட்கார வேண்டுமோ, அப்படி உட்காருவதுதான் அறிவுடைமை. கால் மேல் காலைப் போடுவதிலோ, கையைக் கட்டிக் கொள்வதிலோ மரியாதை வருவதில்லை.
மரியாதை – சொல்லாலும், செயலாலும் அவர்களை மதித்து நடப்பதில் தான் உள்ளது. மற்றபடி இதுபோன்ற செயல்களால் அல்ல.
தந்தை பெரியாருக்கு எதிரே ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பதறிப் போய் ஒருவர், “அய்யாவுக்கு எதிரே இப்படி உட்காரலாமா?” என்று கண்டித்தார். அப்படி கண்டித்தவரை உடனே தடுத்த தந்தை பெரியார், “ஏங்க அவர் காலை அவர் விருப்பப்படி அவர் கால் மேல் போட்டிருக்கார். அதில் என்ன தப்பு?” என்று பட்டென்று கேட்டார்.
இப்படிப்பட்ட பெரியார் சிறுவர்களைக் கூட “வாங்க… உட்காருங்க” என்று மரியாதையாகத்தான் பேசுவார். எனவே, மற்றவர்களுடைய சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் நாம் நடக்க வேண்டும் என்பதுதான் கட்டாயமே தவிர, கால் போடுவது, கை கட்டுவது எல்லாம் அவரவர் வசதி, விருப்பம்.
அதேபோல் எந்த ஒருவரும் எவர் முன்னும் கை கட்டி, கூனிக் குறுகி நிற்பது தப்பு. அது செயக்கூடாத செயல்.<