ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி
விழியன்
சிம்சிம் தன் பொந்தினைவிட்டு வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தது. சிம்சிம் காட்டில் வாழும் ஓர் எலி. நூறு நாட்களுக்கு பின்னர் தன் பொந்தினை விட்டு வெளியே வர இருக்கின்றது. ஆமாம் காட்டினில் ஒரு கொடிய நோய் பரவியது. அதனால் காட்டின் விலங்குகள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று விலங்குகளவை (மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது மக்களவை என்பது போல, விலங்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் அவை விலங்குகளவை) உத்தரவிட்டது. வாரம் ஒரு முறை ஒவ்வொருவர் இருப்பிடத்தின் வாசலிலும் உணவு கிடைத்துவிடும். யாரும் வெளியே தலைகூட காட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வாசலில் நின்று கையை மட்டும் நீட்டி உணவினை எடுத்துக்கொள்வார்கள்.
சிம்சிம் தனியாகத்தான் வாழ்ந்து வந்தது. அது மரத்தில் உள்ள ஒரு பொந்தில் தான் வாழ்ந்தது. அதே மரத்தில் மரங்கொத்திகளும் வாழ்ந்து வந்தன. ஆனால் அவை மேலே இருக்கும்; சிம்சிம் எலி, வேருக்கு அருகில் இருக்கும். அவர்கள் பொந்தில் இருந்து எப்போதும் சிரிப்புச் சத்தம் கேட்கும். சிம்சிம் சில சமயம் கடுப்பாகிக் கத்தும் “கொஞ்சமாச்சும் தூங்க விட்றீங்களா?” என்று! பின்னர் சிரிப்புச் சத்தம் அடங்கிவிடும். சிம்சிம்மின் வேலை காலை எழுந்துகொள்வது. கொஞ்சம் கொறிப்பது. குட்டித் தூக்கம். எழுந்ததும் உணவு. நீண்ட தூக்கம். பின்னர் எழுந்து உணவு. நீ..ண்..ண்..ண்..ட தூக்கம். மாலை வந்ததும் கொட்டாவி விட்டு திரும்பத் தூக்கம். இந்த தூக்கம் கெடுகின்றது என்று தான் மரங்கொத்திகளைச் சத்தம் போடும்.
இன்று தான் நூற்றி ஒன்றாவது நாள். முந்தைய நாள் மாலை, காடு முழுக்க ஒலிக்கும்படி செய்தி கூறினார்கள். “டமடம டமடம.. இதனால் அறிவிக்கும் செய்தி. நாளை காலை முதல் விலங்குகளும், பூச்சிகளும் காட்டிற்குள் நடமாடலாம். டமடம் டமடமடம்…” சிம்சிம் தன்னுடைய மூன்று நண்பர்களை சந்திக்கத் திட்டமிட்டது. எழுந்து பல் தேய்த்து, தலைக்கு ஒரு மஞ்சள் நிறக் குல்லா போட்டுக்கொண்டு தயாரானது. பொந்திற்குள் இருந்ததாலும் அதுவும் பொந்தினை சின்ன கதவு வைத்து மூடி இருந்ததாலும் வெளியே என்ன நேரமானது என்று சிம்சிம்மிற்கு தெரியவில்லை. கதவினைத் தள்ளி வைத்தபோது தான் அது விடியற்காலை என புரிந்தது. பரவாயில்லை கிளம்புவோம் என நினைத்தது. நீண்ட நாட்கள் கழித்து தலையை வெளியே நீட்டியது. ஆஹா என்ன சுத்தமான காற்று என நினைத்துக்-கொண்டது.
அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. சிம்சிமின் தலை பொந்தின் வாசலில் மாட்டிக் கொண்டது. நூறு நாட்கள் நன்றாகத் தின்று தின்று உறங்கியதால் சிம்சிம் பெருத்துவிட்டது. வெளியே போக நினைத்து வேகமாக உடலைத்தள்ளியதால் இன்னும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. சிம்சிம்மின் வீட்டில் கண்ணாடி இல்லை என்பதால் அது எவ்வளவு பெருத்துவிட்டது என அதற்குத் தெரியவில்லை. முன்பு இருந்ததைவிட பதினாறு மடங்கு பெரியதாகி இருந்தது. “காப்பாத்துங்க காப்பாத்துங்க” எனக் கத்தியது. இன்னும் யாருமே விழிக்கவில்லை. தலையைப் பொந்திற்குள் இழுக்க முயற்சி செய்யாமல் வெளியே உடலைத் தள்ள முயன்றதால் இன்னும் சிக்கலில் மாட்டிக்-கொண்டது. ‘ஓ’வென்று அழ வேண்டும்போல இருந்தது.
அப்போது தூரத்தில் ஒரு சத்தம். “ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி.. ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி”. ஒரு ராணுவ ஒழுங்குடன் எறும்புகள் கூட்டம் நடந்து வந்துகொண்டு இருந்தது. அதன் தலைவன் சிகாரியா முதல் வரியைப் பாட மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். சிகாரியாவை, சிம்சிம்மிற்கு நன்றாக தெரியும். சில மாதங்கள் முன்னர் சிகாரியாவின் தலைமையில் கட்டப்பட்ட எறும்புப் புற்றினை சிம்சிம் சிதறடித்தது. “இங்க எல்லாம் புற்று கட்டக்கூடாது; எனக்குப் பிடிக்காது” என சிம்சிம் கத்தியதால் எறும்புகள் வேறு இடம் பார்த்துக்கொண்டன. எறும்புகளும் நூறு நாட்களுக்கு வெளியே வரவில்லை. இன்று தான் வெளியே வருகின்றன. சிம்சிம்மினை பார்த்ததும் எறும்புக்கூட்டம் பயந்தது. பின்னே… சாதாரண எலிபோல இருந்தால் பரவாயில்லை அதன் முகமும் பதினாறு மடங்கு பெரியதாகிவிட்டது அல்லவா? “சிகாரியா, நான் தான் சிம்சிம்” என்றது. எறும்புகளின் கூட்டம் சிம்சிம்மின் தலையைச் சூழ்ந்து கொண்டது.
“நீ தானே எங்க புற்றினை நாசமாக்கியது” என்று ஒரு குட்டி எறும்பு சிம்சிமின் காதருகே ‘வெடுக்’ என கடித்தது. சிம்சிமால் வலியை பொருத்துக்கொள்ள முடியவில்லை. உடனே சிகாரியா, “இது தவறு நண்பா. இடரில் இருப்பவர்களிடம் இப்படி நடந்துக்கொள்ளக்-கூடாது. இவர் நமக்கு தீங்கிழைத்து இருக்கின்றார் தான். ஆனால் இப்போது நாம் இவருக்கு உதவி செய்ய வேண்டும்” என்று குட்டி எறும்பிடம்.
“மன்னித்துவிடு சிம்சிம்” என்றது அந்த குட்டி எறும்பு. பின்னர் அதே எறும்பு தன் தலைவன் சிகாரியாவிடம் ஒரு யோசனையைக் கூறியது. எறும்பின் மொழியில் அவர்களுக்கு ஆணை பிறப்பித்தது சிகாரியா.
“ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி.. ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி” அதே மரத்தின் மேலே எல்லோரும் ஏறின. ஆமாம் அந்த மரங்கொத்திகளால் தான் உதவ முடியும். மரங்கொத்திகள் மட்டும் தான் பொந்தினை பெரிதாக்க முடியும், எலியை வெளியே மீட்க முடியும். மரங்கொத்திகள் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தன. எறும்புகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கத்தியதால் அவை விழித்துக் கொண்டன. “என்ன இவ்வளவு தூரம், உங்க சிகாரியா குழுவினர் அவசியமில்லாமல் மரம் ஏற மாட்டீர்களே” என்று விசாரித்தன. விஷயத்தைக் கூறியதும், அங்கே இருந்த மூன்று மரங்கொத்திகளும் கிளம்பி மரத்தின் கீழே வந்தன.
எறும்புகளும் வந்த வழியே திரும்பி கீழே வந்தன. அதற்குள் எப்படி எலியை மீட்பது என்று ஆராய்ந்துகொண்டு இருந்தன. பொந்தின் பின்புறம் எளிதான ஓட்டையிடலாம். ஆனால் எலியைப் பின்பக்கமாக இருந்து இழுத்தால் தான், அதன் வழியே வெளியேற வைக்க முடியும். தலை பொந்தில் சிக்கிக்கொண்டு இருப்பதால் எப்படி காப்பாற்றுவது என குழம்பின. குட்டி எறும்பு மீண்டும் யோசனை கூறியது. “பொந்தினைச் சுற்றி பெரிய ஓட்டை போட்டால், இப்போதிருக்கும் சின்ன ஓட்டை, பெரிய ஓட்டையாகிடும், எலியைக் காப்பாற்றிவிடலாம்” என்றது. ‘ஆமாம்… அது தான் சரியான வழி’ என எல்லோரும் ஒப்புக்கொண்டனர். ‘டொக் டொக் டொக்’ என்று கொத்த ஆரம்பித்தன மரங்கொத்திகள். எலி நடுங்கியது. தன் தலையில் கொத்த வருவது போல இருந்தது. முன்பு, மரங்கொத்திகள் சிரித்தபோது அதனை அதட்டியது சிம்சிம்மின் நினைவிற்கு வந்தது.
பெரிய மரங்கொத்தி, “மெதுவா குத்துங்க, சிம்சிம் பயப்படுது” என்றபோது, சிம்சிமின் கண்ணில் நீர் கோத்துக் கொண்டது. சிம்சிம் பயப்படுவதை உணர்ந்து, மரங்கொத்திகள் கொத்துவதற்கு ஏற்ப எறும்புகள் பாட்டுப் பாடின.
மரங்கொத்திகள்: “டொக் டொக் டொக்”-
எறும்புகள்: “ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி..”
மரங்கொத்திகள்: “டொக் டொக் டொக்
எறும்புகள்: ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி..
மரங்கொத்திகள்: டொக் டொக் டொக்
எறும்புகள்: ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி
ம & எ: டொக் டொக் -ரீபப்பரீ
டொக் – ரிபப்பரி”
‘டமால்’ என்று பொந்தின் ஓட்டை பெரிதானது. மெல்ல சிம்சிம்மின் உடல் வெளியே வந்தது. எறும்புகள் எல்லோரும் கைத்தட்டி மகிழ்ந்தன. வேலை முடிந்ததும் சிகாரியா, “வாங்க நம்ம வேலையைப் பார்க்கப் போவோம். ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி” என்று கிளம்பியது. மரங்கொத்திகளும் “பத்திரம் சிம்சிம்” என்று கூறிவிட்டுப் பறந்தன. சிம்சிம் தன் உடல் இளைக்கும்வரையில் ஓடிக்கொண்டே இருந்தது. இரவில் மரங்கொத்திகளின் சிரிப்புச் சத்தம் கேட்கும்போது, இப்போதெல்லாம் அது இசையாக ஒலித்தது சிம்சிம்மிற்கு!<