பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா
பகுத்தறிவாளரானது எப்படி?
ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் ‘ஏட்டுக்கல்வி’ என்ற முறையில் தன்னை அடைத்துக் கொள்ளாத எங்கும் பறந்து, மரங்கொத்திப் பறவையாக கொத்திக் கொத்தி – கேள்வி மேல் கேள்வி போட்டே மற்றவர்களைச் சிந்திக்க வைத்தவர்.
இது அவருக்கு வாலிப வயதில் வந்ததில்லை. பாலக வயதில், பையனாக வளந்த போதே வேதவிற்பன்ன கீதை புராண காலட்சேப பக்தி வியாபாரிகளான பார்ப்பனர்களை மடக்கி மடக்கி கேள்விகேட்டே தனது பட்டறிவை புத்தறிவாக்கி சாணை தீட்டிக் கொண்ட சரித்திர நாயகர்! அவரே கூறிகிறார்.
“கடைசியாக நான் திண்ணைப் பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டது; ஏனெனில் திண்ணைப்-பள்ளியில், என் சிநேகிதம் புழங்கக்கூடாத ஜாதியருடன் அதிகம். அதனால் நான் முரடனாகிவிட்டேன் என்பது என் குடும்பத்தார் எண்ணம். காலில் விலங்கு இடப்பட்டேன்; அந்த விலங்குடனேயே நான் பிள்ளைகளுடன் கூடித் திரிந்தேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக் கட்டைகள் போடப்பட்டேன். அப்பொழுதும் இரு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்துக்கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.
கடைசியாக, நான் அப்பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டது. சர்க்கார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக் கூடத்திற்கு. அதுவும் 2 வருடத்திலேயே (10, 12 வயதிலேயே) நிறுத்தப்பட்டு எங்கள் கடையிலேயே-வியாபாரத்தில் போடப்பட்டுவிட்டேன்.
அதில் எனக்குள்ள வேலை மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாக புராணங்களைப் பற்றி விவகாரஞ்செய்வது – (அதாவது விவாதிப்பது)
இந்த ‘வேலை’- -எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சமயப் பிச்சைக்காரர்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததனாலும், அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்க்காததாலும் அவர்கள் சொல்வதைப் பரிகாசம் (கேலி) செய்ய ஆரம்பித்து, மெள்ள மெள்ள அதுவே ஒழிந்த நேர வேலையாகவும், அதுவே இளப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்துவிட்டன.
நான் புராணங்களையோ வேறு தனிப்பட்ட புத்தகங்களையோ படிப்பதில்லை என்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்பந்தமாக உள்ள கதைகளோ சரித்திரங்களோ சதா சர்வகாலம் எங்கள் வீட்டில் இரு சமய பக்தர்களாலும் காலட்சேபம் செய்ய்யப்பட்டு வந்தது – -ஏன்? பணம் வந்து குவியும் போது தர்மம் செய்து ‘தர்மப்பிரபு’ பட்டம் வாங்க வேண்டாமா? ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள். தகப்பானாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்பந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும், அவர்கள் (பக்தர்கள்– பண்டிதர்கள்) பல கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கொரு விதமாய் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு கெட்டிக்காரப் பேச்சுக்காரன் என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது! என் தகப்பனாருக்கு நான் இப்படி விதாண்டவாதமான கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும், உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்திசாலியாய் பேசுகிறானே என்ற மகிழ்ச்சியடைவார்.
இந்த சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி-மதத்திலும் கடவுள், சம்பிரதாயங்கள் ஆகியவைகளிலும் நம்பிக்கை இல்லாமல் போகும்படி செய்திருக்காலம் என்று நினைக்கிறேன்.”
இப்படி பெரியார் தாத்தாவின் கேள்வி கேட்கும் ஆற்றல், அவருடைய பாடப் புத்தகம் போதித்து வரவில்லை — பட்டறிவின் அனுபவங்களில் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களே ஒளிவுமறைவின்றி கூறிவிட்டார்!
‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று பார்போற்றும் அவரது உயர் சிந்தனைக்கும், புரட்சிகர லட்சியங்கள் உருவாவதற்குமான உலைக் களம்- அவரது ஒப்பற்ற கேள்வி ஞானம் என்ற விதையேயாகும். அதிலிருந்து செடியாகி, மரமாகி பூத்து, காய்த்துக் கனிந்த பழங்கள் தாம் நாம் பெற்ற பலன்கள்
அன்புள்ள பேரன் பேத்திகளே,
ஏன் மேலே சொன்ன செய்தியை உங்களுக்கு பெரியார் தாத்தா எழுதியதிலிலிருந்தே எடுத்துக் காட்டினேன் தெரியுமா?
கேள்வி கேட்டு, விடை கண்டதால்தான் இன்றைய விஞ்ஞான உலகம் நம் கையில் உள்ளது என்பதை மறுக்க முடியுமா?
அய்சக் நியூட்டன் கேள்வி – ஆப்பிள் பழம் ஏன் மரத்திலிருந்து கீழ்நோக்கி விழுந்தது? ஏன் மேல்நோக்கிச் செல்லவில்லை என்ற கேள்விதானே அறிவியலில் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய அடிப்படைக் காரணமாக அமைந்தது, இல்லையா?
ஆகவே, எதையும் அப்படியே மனப்பாடம் செய்வதும் மதிப்பெண்கள் பெறுவதற்காக, அதை அப்படியே ‘வாந்தி எடுத்து’ப் பரிசுகள்,- பெருமைகள் பெறுவது உங்களை உண்மையான அறிவாளிகளாக ஆக்காது.
பேரன் பேத்திகளே,
பின் எது ஆக்கும்?
கேள்வி கேட்டு கேட்டு விடை காண முயற்சிப்பதன் மூலம்தான் நம் பகுத்தறிவு பட்டை தீட்டப்பட்ட வைரமாக மாறிவிடும்!
மனிதனின் பகுத்தறிவு எவ்வளவு தூரம் செல்லும் என்று அதற்கு எல்லைக்கோடு கட்ட முடியுமா?
கொரோனா என்ற தொற்றுக்கு இப்போது உடனடியாக மருந்து ரெடிமேடாக இல்லாமல் இருக்காலம். ஆனால் இதுவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அதற்கான தடுப்பு மருத்துவ ஆராய்ச்சி மூலம் வந்தே தீரும் என்பது உறுதி.
ஓடிக்கொண்டே இருந்தால் தான் ஜீவநதி தங்கிய தண்ணீர் என்றால் வெறும் குட்டை தானே
எனவே நீங்கள் பாடப் புத்தகங்களைப் படித்துக்கூட கேள்வி கேட்டு சிந்திக்கும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு தெரியும் உங்களுக்குள் எத்தனை விஞ்ஞானிகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று!
கல்வி – ‘கல்’ என்றால் தோண்டுதல், அறிவைத் தோண்டுங்கள். -அதைத் தோண்ட உதவும் கூர்மையான கருவிகள் எவை தெரியுமா?
கேள்வி, கேள்வி, கேள்விகளே. எனவே எதைப் படித்தபிறகும்கூட மனதிற்குள்ளே கேள்வி கேட்டு உங்கள் அறிவை, ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இது வகுப்பறையில் முடியாது. ஆனால், “தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவர் வகுப்புகள் எல்லாம் மாலைப் பல்கலைக்கழகமாக, மக்கள் மத்தியில் நடைபெறும்” என்றாரே அறிஞர் அண்ணா, அத்தகைய பெரியாரின் வகுப்பறையில் கிடைக்கும், இல்லையா?
பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,
– கி.வீரமணி