அவங்க என்ன நினைப்பாங்க?
எல்லாரும் ஒரே ஜாலியா விடுமுறையைக் கொண்டாடுனீங்களா?. பத்து நாளா சரியான மழை பேஞ்சு, அதுக்கப்புறம் அரையாண்டுத் தேர்வு எழுதி, விடுமுறையை அனுபவிச்சு இப்ப பள்ளிக்கூடம் போய்க்கிட்டு இருப்பீங்க
விடுமுறைக்கு எங்கயாவது சுத்திப்பார்க்கப் போனீங்களா? நான் போயிட்டு வந்தேன். ஆமா பெங்களூரு, மைசூர் போயிட்டு வந்தேன். எங்க அத்தையும் மாமாவும் அங்க வேலை செய்யுறாங்க. அவங்கதான் என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப்போனாங்க.ரெண்டு ஊருமே நல்லா இருந்துச்சு. ஒரே குளிரு. நல்லா சில்லுன்னு இருந்துச்சு. நாங்க சுவட்டர் போட்டுக்கிட்டுத்தான் போனோம். பெங்களூருல விஸ்வேஸ்வரையா அறிவியல் அருங்காட்சியகம்னு ஒண்ணு இருக்கு. அங்க போனோம். நம்மள மாதிரியே பள்ளிக்கூட மாணவர்கள் பலர் வந்திருந்தாங்க.
அந்த அருங்காட்சிகத்துல நுழைந்தவுட-னேயே ஒரு போர் விமானம் இருக்கு. அப்புறம் ஆர்கிமிட்டிஸ் கோட்பாட்ட விளக்குற மாதிரி ஒன்னும் இருந்துச்சு. அதப் பார்த்துட்டு உள்ள போனோம். ஒரு பெரிய்ய டைனோசர் நெசமா உசுரோட இருக்கிற மாதிரியே நின்னுச்சு. அதப்பார்த்துட்டு உள்ள போனோம்.
அங்க மொத்தம் மூணு தளம். முதல் தளத்துல மோட்டார் இஞ்சின் மாதிரிகள் வச்சிருந்தாங்க. முதல்ல உருவாக்கப்பட்ட மோட்டார்ல இருந்து எல்லா வகையான மோட்டார்களும் இருந்துச்சு. இஞ்சின் எப்படி இயங்குதுன்னு விளக்கமா எழுதியிருந்தாங்க. அந்த அரங்கத்துல எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது எது தெரியுமா? ரைட் சகோதரர்கள் முதல்ல கண்டுபிடிச்ச விமானம் மாதிரியே ஒரு விமானம். அது எனக்குப் பிடிச்சிருந்தது. அதுல ஆர்வில் ரைட் விமானத்த இயக்கி கீழே விழுந்தத மாதிரியா வடிவமைச்சிருந்தாங்க. அப்புறம் புவி ஈர்ப்பு விசையை விளக்கும் ஒரு அமைப்பும் இருந்துச்சு. அதுல நான் பந்து போட்டு எப்படி அது பூமிய நோக்கி வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
அடுத்த தளத்துல மின்சாரம் உருவாக்கப்-பட்டது, மின்சாரப் பயன்கள் வளர்ந்தது, நீர், அனல், அணு, காற்றாலை மூலமா மின்சாரத்தை எப்படி உருவாக்-குறாங்கன்னு விளக்கி-யிருந்தாங்க. இதோட மின்னணுவியல், தொலைபேசி, தொலைக்காட்சி, மரபியல் ஆகியவை பற்றியும் இருந்துச்சு. மூன்றாவது தளத்துல விண்வெளி அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறிவியல் விளக்கங்கள் சொல்லியிருக்காங்க. அங்கேயே ஒரு போட்டியும் வைக்கிறாங்க. அதுலயும் நான் கலந்துக்கிட்டேன். நீங்களும் பெங்களூரு போனா அவசியம் விஸ்வேஸ்வரையா அறிவியல் அருங்காட்சியகத்துக்குப் போயிட்டு வாங்க.
இதப் பார்த்துட்டு கடை வீதியெல்லாம் சுத்துனோம். அங்க உள்ள மக்கள் கன்னட மொழி பேசுறாங்க. அது கொஞ்சம் கொஞ்சம் நம்ம தமிழ் மாதிரிதான் இருக்கு. ஓரளவு புரிஞ்சது. அங்க தமிழர்களும் நிறையப் பேர் இருக்காங்களாம், எங்க அத்தை சொன்னாங்க.
மறுநாள் மைசூர் போனோம். போற வழியில திப்பு சுல்தான் கோட்டைக்குப் போனோம். அது இருக்குற ஊருக்குப் பேரு சிறீரங்கபட்டணம். திப்பு சுல்தான் பெரிய வீரராம். வெள்ளைக்-காரங்க கிட்ட சண்டை போட்டிருக்காரு. அந்தக் கோட்டைக்குள்ள அத படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. அவரோட ஆயுதங்கள், உடைகள் அங்க இருந்தது. ஒரு பீரங்கியும் வெளிய இருந்துச்சு. அதப் பார்த்துட்டு அவரு இறந்த இடத்தையும் பார்த்தோம். அதுக்கப்புறம் மைசூருக்குப் போனோம். அந்த ஊரே பழைய காலத்து ஊர் மாதிரி இருக்கு.கட்டடங்கள் அந்தக் கலத்துல கட்டுனது ரொம்ப இருக்கு. அந்த ஊர் மன்னரோட சிலையை வச்சிருக்காங்க. அரண்மனை இருக்கு. அதுக்குள்ள போய்ப் பார்த்தோம். ரொம்பப் பெரிசா பிரம்மாண்டமா கட்டியிருக்காங்க. ரொம்பப் பணக்காரங்களா இருந்திருப்பாங்க போல. வெள்ளிக்கதவு, தங்க சிம்மாசனம், ஏராளமான பொருள்கள், கடவுள் சிலைகள்னு எல்லாத்-தையும் வச்சிருக்காங்க. இந்த அரண்மனையிலும் சுவத்துல படங்கள் வரஞ்சிருந்தாங்க. ஆனா, அது எல்லாம் மன்னரோட பவனி,தசரா ஊர்வலம், ராமாயணம், வெள்ளைக்-காரங்களோட பேசிக்கிட்டிருக்கிறது, மன்னர் குடும்பத்தினர், அவங்களோட ஆடம்பரமான வாழ்க்கையைப் பற்றிதான் வரைந்து வச்சிருக்காங்க. திப்பு சுல்தான் கோட்டைக்கும் இதுக்கும் ரொம்ப வித்தியாசம். அது சாதாரணமான வீடு மாதிரிதான் இருந்தது. ஆனா, மைசூர் அரண்மனை மாபெரும் மாளிகையா இருந்தது. திப்பு சுல்தான் வெள்ளைக்காரங்களோட சண்டை போடுறாரு. மைசூர் மஹாராஜா வெள்ளைக்-காரங்களோட சந்தோசமா பேசிக்கிட்டிருக்காரு. இவங்கள்ல யார் மக்களுக்குப் பாடுபட்டிருப்-பாங்கன்னு நானும் யோசிக்கிறேன்; நீங்களும் யோசிங்க. அப்புறம் முக்கியமா மைசூருல மிருகக்காட்சி சாலைக்குப் போனோம். பெரியதா இருந்தது. வெளிநாட்டு மிருகங்கள், பறவைகள் ரொம்ப இருந்துச்சு. உள்ள நுழைஞ்சதுமே ஒட்டகச் சிவிங்கி நின்னுக்கிட்டு இருந்துச்சு. எவ்ளோ பெரிசு தெரியுமா? யப்பா.. எனக்கு கழுத்தே வலிச்சிருச்சு. அவ்ளோ உயரமா நடந்து திரிஞ்சுச்சு. அஞ்சு ஒட்டகச் சிவிங்கி இருக்கு. அதப் பார்த்துட்டு உள்ள போனோம் கலர் கலரா வெளிநாட்டுப் பறவைங்க ஜோடி ஜோடியா இருந்துச்சு. flamingo, emu, ostrich, pheasant, tucan, macaw போன்ற பறவைகளும், பல வண்ணத்துல கிளிகளும், கருப்பு அன்னப்-பறவையும் இருந்துச்சு.
ஒரு புலி சும்மா ஜம்முன்னு படுத்துக்கிட்டு எல்லோரையும் பார்த்துச்சு பாருங்க. அதோட பார்வையே நம்மளப் பயமுறுத்துர மாதிரி இருந்துச்சு. வெள்ளைப்புலியையும் அங்க பார்த்தேன். இது மட்டுமில்ல, நாம இதுவரை பார்க்காத பல மிருகங்கள அந்த மிருகக் காட்சி சாலையில வச்சிருக்காங்க. ஆப்பிரிக்கா யானை, கரடி, காண்டாமிருகம், நீர் யானை, பபூன் குரங்கு, சிம்பன்சி, கொரில்லா (மனிதக் குரங்கு), வரிக்குதிரை, புள்ளி மான், கலை மான், காட்டு எருமை, காட்டு நாய், சிங்க முகக் குரங்கு, குட்டிக் குரங்கு, காட்டு அணில் இப்படி பல மிருகங்களும் அங்க இருக்கு.
ஒவ்வொரு மிருகமும் நடந்துக்கிட்டு, சாப்பிட்டுக்கிட்டு, விளையாண்டுக்கிட்டு இருந்துச்சுங்க. மனிதக் குரங்கப் பார்த்தா அப்படியே நம்மள மாதிரியே இருக்குங்க. அது உட்கார்ந்து இருக்கிறது, பார்க்கிறது,திரும்புறது எல்லாமே அச்சு அசல் நம்மள மாதிரியே இருக்கு. அதோட கை, கால் நம்மள மாதிரிதான் இருக்கு. நமக்கும் அதுக்கும் ஏதோ ஒரு உறவு இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன். எல்லாத்தையும் பார்த்துட்டுத் திரும்புறப்போ எனக்கு ஒன்னு தோணுச்சு. நம்மள மாதிரிப் போறவங்க இந்த மிருகங்கள பார்த்துக்கிட்டே போறோம். ஒவ்வொன்றையும் பார்த்து சில சமயம் கேலி செய்யுறோம். வரிசை வரிசையா வேடிக்கை பார்த்துக்கிட்டு போறோம். நாம அதப் பார்த்து வித விதமா கருத்து சொல்றோம். இதே மாதிரி நம்மளப் பார்த்துக்கிட்டு இருக்கிற அந்த மிருகங்கள் எல்லாம் நம்மளப் பார்த்து என்ன நினைக்கும்?
ஆமா அவுங்க நம்மளப் பார்த்து என்ன நினைப்பாங்க?
*********
இது என்னோட விடுமுறை அனுபவம். இந்தக் காலத்துப் பிஞ்சுகள், விடுமுறை விட்டா ஒண்ணு வீட்டுல டி.வி. பார்க்கிறோமாம்; இல்லாட்டி கம்ப்யூட்டர்ல உட்கார்ந்திடறோமாம். எங்க அப்பா சொல்றாரு. அவங்க காலத்துல பயணக்கட்டுரை எழுதுவாங்களாம். இப்ப அது இல்லாமப் போச்சு. நீயாவது எழுது, அத நம்ம பெரியார் பிஞ்சுல போடுவாங்கன்னு சொன்னாரு. அதான் எழுதுனேன். நீங்களும் சுற்றுப்பயணம் போனா உங்க அனுபவத்தை எழுதுங்க. நம்ம பெரியார் பிஞ்சுல அது வெளிவரும்.
இப்படிக்கு,
இ.பெ.தமிழீழம்
9 ஆம் வகுப்பு,பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி,
கோடம்பாக்கம், சென்னை.