பசிக்குமில்ல
விழியன்
ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லாம் இல்ல. இப்ப நடந்த கதை இது. ஊரே வீட்டில் அடங்கிடுச்சு. ஊர் மட்டுமில்ல உலகமே வீட்டில் அடங்கிடுச்சு. நம்ம நண்பர் காக்கா அதனால ரொம்ப ரொம்ப பாதிப்பு அடைஞ்சிடுச்சு. ஆமா நம்ம நண்பர் காக்காவுக்கு பயங்கர பசி. பயங்கர பயங்கர பசி. எங்காச்சும் சாப்பாடு கிடைக்குமான்னு ஏங்குச்சு. அதுவும் அதுக்கு வடை தேவைப்பட்டுச்சு. ஊர்ல எங்கேயும் வெளிய சமைக்கவே இல்லை. ஓட்டல்கள் எங்கும் இல்லை. மக்களே சாப்பாட்டுக்கு சிரமப்பட்டாங்க. ஆனா ஊர்ல பேருந்து, வேன், கார் எல்லாம் சுத்துறது ரொம்ப ரொம்ப குறைஞ்சிடுச்சு. வானத்துல நண்பர் காக்கா பறக்கும்போது விமானம் பறந்தா ரொம்பவே பயந்திடும். ஆனால் இப்ப அந்த பயமில்லை. வானத்தில எங்கயுமே விமானம் பறக்கல. உலகமே சுத்தமாகுது, காற்றில் மாசு குறையுதுன்னு பேச ஆரம்பிச்சாங்க.
அப்பத்தான் ஒரு பவுர்ணமி நாள் வந்தது. காக்கா பசியில இருந்தப்ப திடீர்னு நிலாவை பார்த்துச்சு. அட காற்றுல மாசு சுத்தமா இல்லைங்கிறதால நிலாவில பாட்டி வடை சுட்றாங்கன்னு கூட தெரிஞ்சிது. அட ஆமா. அதுவும் அந்த பௌர்ணமி சமயத்தில் தான் நிலா பூமிக்கு ரொம்ப கிட்டக்க வந்துச்சு. இளஞ்சிவப்பு நிலான்னு சொல்லிட்டு இருந்தாங்க. காகத்திற்கு அந்த பாட்டி என்ன வடை சுட்றாங்கன்னு தெரிஞ்சுது. ஆமா ஆமா காகத்திற்கு பிடிச்ச உளுந்த வடை. ‘அய்யோ வடை வடை வடை’ன்னு பதறுச்சு. என்ன தான் ஆகுது பார்த்திடலாம்னு நிலாவை நோக்கிப் பறக்க ஆரம்பிச்சுது.
பறந்தது பறந்தது பறந்துகிட்டே இருந்துச்சு. ஏற்கனவே ரொம்ப பசி. கண்ணைக் கட்டியது. அப்போது மேலிருந்து கீழே விழும் சமயம் ஒரு பெரிய பருந்து அதனோட முதுகில நண்பர் காகத்தை பிடிச்சுகிச்சு. காகம் லேசா கண்ணைத்திறந்து பார்த்துச்சு. “நான் எங்க இருக்கேன்’’ன்னு கேட்டுச்சு. “என் முதுகில..’’ என்று கோபமாக சொன்னது பருந்து. காகம் தன் கதையைச் சொல்லுச்சு. நிலாவுக்குப் போய் பாட்டிகிட்ட வடை வாங்கப்போறேன்னு சொன்னதும் பருந்துக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. “சரி, உனக்கு உதவினேன் இல்ல… எத்தனை வடை எடுத்துட்டு வர்ரியோ அதுல பாதி எனக்கு கொடுத்திடணும்’’னு சொல்லிடுச்சு. பருந்தும் ரொம்ப தூரம் மேலே பறந்து சோர்ந்துடுச்சு. அப்ப அங்க ஒரு மேகத்தில உட்கார்ந்துகிட்டாங்க.
மேகம் நல்லா கெட்டியாகி இடம் கொடுத்துச்சு. குட்டி மேகம் தான் அது. “தண்ணி குடிச்சிக்க காக்கா தெம்பா இருக்கும்’’ன்னு சொல்லி மேகத்தில் நடுவில் இருக்கும் தண்ணீரைக் காட்டியது. பருந்து அங்கிருந்து கிளம்புச்சு “பேச்சு பேச்சா இருக்கணும் நண்பர் காக்கா, வடையில பாதி கிடைக்கணும்.’’ காகம் கொஞ்சம் ஓய்வு எடுத்துகிட்டு பறக்க ஆரம்பிச்சுது. இப்ப பாட்டியும் அவங்க சுட்ற வடையும் நல்லாவே தெரிஞ்சது. நல்ல ஓய்வும் தண்ணீரும் குடிச்சதால நல்ல தெம்பு வந்திருச்சு. அதுவும் அந்த தண்ணீர் அவ்ளோ சுவை. ஒருவேளை இது தான் அமிழ்தோன்னு நெனச்சது. “மேகமே, திரும்ப வரும்போது உனக்கும் வடை எடுத்துவரேன்’’னு காகம் சொல்ல, “அதெல்லாம் வேணாம் காக்கா நீ நல்லா சாப்பிடு’’ன்னு சொல்லிடுச்சு.
பறந்தது பறந்தது நிலாவுக்கு பறந்து போயிடுச்சு. ‘அய்… நல்ல குளுகுளுன்னு இருக்கேன்’னு சந்தோஷமாகிடுச்சு. பாட்டியை பார்த்ததும் காகத்துக்கு ஊர்ல கேட்ட பேச்சு நினைவுக்கு வந்துச்சு “யாரும் இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற.’’ பாட்டி சுட்ற வடையை யாரு சாப்பிடுவான்னு காகம் யோசித்தது. காகத்தைப் பார்த்ததும் பாட்டி சிரிச்சாங்க. “பாட்டி பசிக்குது.’’ “அது உன் கண்ணை பார்த்தாலே தெரியுது. இரு பெரிய வடையா சுட்றேன்’’னு சொன்னாங்க. கம கமன்னு வாசனை. உண்மையிலேயே பெரிய வடையாகத்தான் இருந்தது. சுடச்சுட பாட்டி காகத்துக்கு கொடுத்தாங்க. ‘சாப்பிடு’ன்னு சொன்னாங்க. “இல்ல பாட்டி நான் பாதி வடையை பருந்துக்கு கொடுக்கணும். மீதியை என் மரத்துக்கு போயி சாப்பிட்றன்’’னு சொல்லுச்சு நண்பர் காகம். “அதோ அங்க இருக்க மரம் தான்’’னு நிலாவில் இருந்து தன்னோட வீட்டை காட்டியது.
கீழ இருந்து நிலாவுக்கு போனதைவிட படு வேகமா மேல இருந்து காகம் இறங்கி வந்தது. நடுவில தனக்கு உதவிய இந்த மேகத்தைத் தேடியது எங்கயும் காணல. சரின்னு பருந்தினை தேடியது. பருந்து தன்னோட குழந்தைகளோட இருந்துச்சு. பாதி வடையை பிட்டு, பருந்துகிட்ட கொடுத்துச்சு. “அட காக்கை நண்பா, ரொம்ப நன்றி. நான் சும்மாத்தான் உன் கிட்ட வடையைக் கேட்டேன். நீயே சாப்பிடுன்னு சொல்லுச்சு.’’
“பருந்தண்ணா பரவாயில்ல பசங்களுக்கு கொடுங்க’’ன்னு சொல்லி பறந்துச்சு காகம். தன்னோட மரவீட்டுக்கு வந்து சேர்ந்தது. மரத்துக்குக் கீழ இருக்க நாய் “லொள் லொள் லொள்”ன்னு கத்திகிட்டே இருந்துச்சு. என்ன விவரம்னு கேட்டா அதுக்கு பசின்னு சொல்லுச்சு. பாதி வடையை ஆளுக்கு பாதியா பிரிச்சாங்க. காகம் முழு கதையையும் நாய்கிட்ட சொல்லுச்சு. நாய் வாலாட்டிகிட்டே அந்த கால்வாசி வடையை சாப்பிட்டுச்சு.
மீதி கால்வாசி வடை தானே இருந்தது, அதனைத் தன் மரக்கிளையில் உட்கார்ந்து கடிக்கலாம்னு நெனச்சப்ப எறும்புக் கூட்டம் அழுதுகிட்டே இருந்தது. அதுக்கும் பசி. கால்வாசியில் ஒரு பகுதியைக் கொடுத்துச்சு. எறும்புகள் கூட்டம் ஹேன்னு சத்தத்தோட மரத்தில் இருந்து இறங்கி புற்றுக்குள் போனது. மீதமிருந்த கொஞ்சம் வடையை சாப்பிட்டது காகம். அதுக்குப் போதலை தான், ஆனாலும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்ப திடீர்னு விக்கல். ஹக் ஹக் ஹக்ன்னு சத்தம். அதே சமயம் வானத்தில் இருந்து மழை. மழைத்துளிகள் அதனோட தாகத்தை போக்குச்சு. அட ஆமா அதே சுவை. அதே அமிழ்து போன்ற சுவை. அந்த மேகம் தான் மழையாகி மாறி வந்திருக்கும்னு நெனச்சுது.
வானத்தில் இருந்து குரல், அந்த நிலா பாட்டி தான். “நான் பார்த்துகிட்டுத் தான் இருந்தேன். உனக்கும் பசிக்குமில்ல. இந்தா இன்னொரு வடை, நீயே சாப்பிடு’’ன்னு பாட்டி வடையைத் தூக்கி போட்டாங்க. லபக்குனுன்னு வடையைப் பிடிச்சுகிச்சு காகம். ஆனா இப்ப காகம் தனியா சாப்பிட்டு இருக்கு.
“கா..கா..கா….’’