செய்து அசத்துவோம் – கூண்டுக்கிளி
தேவையான பொருட்கள்:
1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு.
2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று
3. அளவுகோல், 4. பசை, 5. கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா.
செய்முறை:
1. முதலில் இரண்டு அட்டைகளில் ஒன்றை எடுத்து, அதில் ஒரு கிளியின் படத்தை வெட்டி ஒட்டிக் கொள்ளவும்.
2. பிறகு மற்றோர் அட்டையை எடுத்து, அதில் ஒரு கூண்டு படத்தை வரைந்து கொள்ளவும். (அல்லது படம் கிடைத்தால் வெட்டி ஒட்டிக் கொள்ளவும்)
3. இப்பொழுது கிளி பட அட்டையைத் திருப்பி வைத்து அதில் பசையைத் தடவி, படம் 3 -இல் காட்டியபடி குச்சியை எடுத்து நடுவில் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
4. பின்பு கூண்டு படத்தை எடுத்து (கூண்டு வெளிப்புறம் தெரியும் படி) அந்தக் குச்சி ஒட்டிய படத்தின் மீது ஒட்டிக் கொள்ளவும்.
5. இப்பொழுது படம் 4–இல் உள்ளது போல.
ஒரு புறமும் கிளியும் மறுபுறம் கூண்டும் தெரியும்.
6. பிறகு உங்கள் நண்பரிடம் படம் 5 -இல் உள்ளது போல. இரண்டு உள்ளங்கைகளுக்கும் நடுவில் குச்சியை வைத்தபடி, ஆனால் உங்கள் நண்பர் பக்கம் கூண்டு மட்டுமே தெரியும்படி காட்டி, “இந்த கூண்டுக்குள் கிளியை வரவைக்கவா’’ என்று விளையாட்டாய் சவால் விடுங்கள்.
7. பிறகு படம் 6–இல் காட்டியபடி முன்னும் பின்னும் உருட்டினால் கிளி கூண்டுக்குள் இருப்பது போல உங்கள் நண்பருக்கு தெரியும்.
கண்ணின் நிலைப்புத் தன்மையினைப் (Persistence of Vision) புரிந்து, மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தொடக்கக்கட்ட சோதனை முயற்சிகளின் அடிப்படையில்தான் சினிமா தொழில்நுட்பம் வளரத்தொடங்கியது. இதற்கு Thaumatrope என்று பெயர். இதையே நீங்கள் வட்ட வடிவில் காசு போன்று அட்டையில் செய்து, குச்சிக்கு பதில் இருபுறமும் துளையிட்டு நூல் கட்டி சுற்றிச் சுண்டிவிடுவதன் மூலமும் செய்து மகிழலாம்.