பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை!
பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே,
உங்களில் சிலரை பெரியார் பிஞ்சுகளுக்கான பரிசளிப்பு விழாவிலும், மாணவர்களுக்கான பழகு முகாம் நிகழ்விலும், காணொலி வாயிலாகச் சந்தித்து மகிழ்ந்தேன். அதில் உங்களோடு ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். ஒரு கேள்வி கூட உங்களைக் கேட்டேனே… பெரியார் தாத்தா தொடங்கிய ஏடுகள் என்னென்ன என்று! உங்களில் ஒருவர் பதில் சொல்லும்போது, ‘விடுதலை’, ‘உண்மை’ என்று பட்டியலிட்டீர்கள். நினைவிருக்கிறதா?
உண்மை – பெரியார் தாத்தா விரும்பிய ஒன்று. கடைப்பிடித்த ஒன்று. தான் தொடங்கிய பத்திரிகைக்கு மட்டுமல்ல… தனது ‘குடிஅரசு’ அச்சகத்தை ஈரோட்டில் 1925ல் நிறுவியபோது அவர் வைத்த பெயர் “உண்மை விளக்க அச்சகம்’’ என்பதாகும்.
எத்தனை இடர் வந்தாலும் உண்மையை உரைப்பதில் உறுதியாக இருந்தார் பெரியார் தாத்தா. “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதிருத்தல்’’ என்று சொல்வார்கள் அல்லவா? அப்படித் தான் பெரியார் தாத்தா. உண்மையே பேசுதல் என்பதை நம்மால் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முடிகிறது?
தொழில் ரீதியாக சிலருக்கு பொய் சொல்வதற்கு உரிமம் (‘லைசென்ஸ்’) வழங்கப்பட்டு விடுகிறது சமுதாயத்தால்! கேட்டால், அது அவர்கள் “தொழில் தர்மம்’’ என்று ஒரு சமாதானம் – விளக்கம் சொல்வார்கள்!
வியாபாரிகளும், வக்கீல்களும் பொய் பேசுவதற்கு முழு உரிமை படைத்தவர்களாம்!
தற்காலத்தில் அரசியல்வாதிகள் அவர்களை மிஞ்சும் அளவுக்குப் பொய்யைக் கூறியே பதவி, பெருநிலை அடையும் வாய்ப்பும் நமக்கு கண்ணெதிரே ‘பளிச்’ எனத் தெரிகிறது!
அன்றாடச் சூழலில் உண்மையைச் சொல்லி – கடைசிவரை, பிடிவாதமாக அதைக் கடைப்பிடித்து வாழ்ந்த தலைவர் அண்ணல் காந்தியார் என்றும், அவர் எழுதிய “தன் வரலாறு’’ அதனால்தான் “சத்திய சோதனை’’ என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளது என்றும் பலர் கூறி வருவது உண்மை தான்! ‘My experiments with Truth’ என்பதே அந்நூலின் ஆங்கிலப் பெயர் ஆகும்.
ஆனால், சமூகப் புரட்சியாளரான நம் பெரியார் தாத்தா பொது வாழ்வில் மட்டுமல்லாமல், தனி வாழ்விலும்கூட, அதிலும் தான் வியாபாரியாக இருந்த காலத்திலிருந்தே உண்மையை மட்டுமே பேசி அதற்காகத் தண்டனை கிடைத்தாலும்கூட, ஏற்பதுதான் தனது வாழ்க்கை நெறி என்று வாழ்ந்தவர். உண்மைக்கு மாறாகப் பொய் பேசி, ஒருபோதும் விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள விரும்பாத ஒரு மாமனிதராகவே இருந்துள்ளார் – வாலிபத்திலிருந்தே! அந்தச் செய்தி தெரியுமா உங்களுக்கு?
1900-லேயே ஈரோட்டில் உள்ள பிரபல “வெங்கட்ட நாயக்கர் மண்டி’’க்குப் (இவரது தந்தை விலாசம் அது) பொறுப்பேற்று மண்டி வியாபாரம் செய்பவராக – இளைஞராக இருந்தபோதே தயாராகிவிட்டார்!
அப்போது ஒரு நிகழ்வு.
அது பற்றி பெரியார் தாத்தாவே 26.7.1952 அறிக்கையில் எழுதியிருக்கிறார்கள்.
அப்போது வணிகர் ஈ.வெ.ராமசாமிக்கு (பெரியாருக்கு) 24 வயது – 1903 இல் நிகழ்ந்தது! வெங்கட்ட நாயக்கர் என்ற அவரது தந்தை பெயரில் இருந்த ஓர் ஆயிரம் ரூபாய் (அதன் மதிப்பு இப்போது 3- – 4 லட்ச ரூபாய் இருக்கும்) டிகிரி (Decree) நகலை எடுத்துக் கொண்டு, திருச்சியில் அதை நிறைவேற்றச் சென்றவர், வழக்காமான தனது அவசரப்படி, வக்காலத்து பாரத்தில் இவரே, இவரது தகப்பனார் கையெழுத்தைப் போட்டுவிட்டு, ஈரோட்டிற்கு வந்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து, இவர்மீது போர்ஜரி – ஆள்மாறாட்டம் (தந்தையின் கையெழுத்தை இவர் போட்டதாக) கிரிமினல் வழக்கு போடப்பட்டுவிட்டது.
பெரியார் தாத்தாவின் தந்தையார் பிரபல வக்கீலை எல்லாம் வைத்து வாதாடச் செய்தார். அப்போது பார்ப்பன உயர்ஜாதிக்காரர்கள்தான் வக்கில்களாக இருப்பார்கள். இந்தப் பணக்காரத் தந்தை… அதுவும் ஊரில் பெரிய மனுஷன் தன் மகன் ஜெயிலுக்குப் போய்விடுவானோ என நினைத்து நினைத்து அழுதார்.
அந்த வக்கீல், “அக் கையெழுத்தை உங்கள் மகன் இராமசாமி நாயக்கன் போடவில்லை என்று மறுத்து வாக்குமூலம் சொன்னால், நான் மீதியைப் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அதைக் கேட்ட வெங்கட்ட நாயக்கர், எப்படியாவது தன் மகனைத் தப்பச் செய்ய வேண்டும் என்று கருதி, தன்மகனிடம் பெரியாரிடம் வக்கீல் சொன்னது போல் சொல்லிவடுமாறு மன்றாடினார். ஆனால் பெரியாரோ “பொய் சொல்லமாட்டேன். நானே கையெழுத்துப் போட்டு விட்டு, இப்போது மறுத்து கோர்ட்டில் பொய் சொல்லமாட்டேன்’’ என்று பிடிவாதமாகக் கூறிவிட்டு, தனது தங்க நகை, கடுக்கன்களைக் கழற்றிவிட்டு, தரையில் படுத்து, எளிய உணவு உண்டு சில நாள் – சிறைவாசத்திற்குப் பழகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
கோர்ட்டில் பிரபல வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். விசாரணை நீதிபதியான வெள்ளைக்கார கலெக்டர் விசாரித்தபோது, “இந்த வக்காலத்தில் உங்கள் தந்தையின் கையெழுத்தை நீங்கள் போட்டீர்களா?’’ என்று பெரியாரிடம் கேட்டார்.
“ஆம், என் தந்தை கையெழுத்தை நான்தான் போட்டேன் – வியாபாரத்தில் இது வாடிக்கையாக நடைபெறும் வழக்கம்’’ என்று பதில் சொன்னார் பெரியார் தாத்தா.
“ஏன் அந்த வழக்கம்?’’ என்று வெள்ளைக்கார கலெக்டர் (விசாரணை நீதிபதி) கேட்டார்.
அதற்கு கோர்ட்டில், பதில் கூறிய ஈ.வெ.ரா “எங்கள் அப்பா கிழவனார்; நான்தான் வேலை பார்ப்ப! அந்த வியாபாரமும், பணமும் என்னுடையது. அவர் பெயர் பிரபலம். ஆதலால், அந்தப் பெயர் வைத்தே – மாற்றாமல் நான் வியாபாரம் செய்கிறேன்’’ என்றார்.
உடனே வெங்கட்ட நாயக்கரைக் கூப்பிட்டு, பெட்டியில் ஏற்றி, கலெக்டர் கேட்டார், “அவர் சொல்வது உண்மையா?’’
“ஆம். பல காலம் அவர்தான் மண்டி நடத்துபவர்’’ என்றார் அவர்.
“சரி, போகலாம்!’’ என்று சொல்லிவிட்டு, தீர்ப்பில், ஈ.வெ.ரா.வை விடுதலை செய்துவிட்டார் வெள்ளைக்கார கலெக்டர்.
“இந்த நடவடிக்கை, இந்த செக்சனுக்குப் பொருந்தாது. எதிரி யாரையும் மோசம் செய்ய இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது’’ என்றார்.
வக்கீல்களுக்கே அதிர்ச்சி!
உண்மை வென்றது; பெரியாரின் பொது அறிவும், அறிவு நாணயமும் அவருக்கு விடுதலையை வாங்கித் தந்தது. எத்தனை ஆண்டுகளுக்குமுன் – 117 ஆண்டுகளுக்குமுன் நடந்தது. அப்படித்தான் தன் இறுதி வரை வாழ்ந்தார் பெரியார் தாத்தா.
உண்மையோடு வாழ்வதுபற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார், கேட்போமா?
“எனக்கு மட்டும் உண்மையின்மீது மிகப் பற்று உண்டு. ஒழுக்கத்திற்கே மதிப்புக் கொடுப்பேன். ஒழுக்கத்திற்கு மரியாதை கொடுக்க நான் தவறுவதில்லை. இன்றைக்கு இல்லையானாலும், என்றைக்காவது உண்மையான மேன்மையை மக்கள் உணரத்தான் போகிறார்கள். எனவே, என்னைப் பொறுத்தமட்டில், ஒழுக்கத்தோடு நடந்தால், உண்மையை ஒளிக்காமல் (மறைக்காமல்) எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்கு தனி சக்தி உண்டு என்பது என் நம்பிக்கை!’’
– தந்தை பெரியார், ‘விடுதலை’, 10.3.1956
அதனால தான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார்…
“வாய்மைப் போருக்கு என்றும் இளையார் – பெரியார்’’ என்று!
எனவே, தெரிந்துகொள்ளவேண்டும் பெரியார் பிஞ்சுகளே – உண்மையின் மறுபெயர் பெரியார் என்பது வரலாற்று உண்மை அல்லவா?
பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,
– கி.வீரமணி
பெரியார் தாத்தா பற்றிய வினாவிடைப் போட்டியான ’’பெரியார் 1000” போட்டிக்கு உங்கள் கணினி, செல் பேசியிலேயே பங்கேற்றுப் பயிற்சிபெற…