சின்னக்கதை
கண்ணீர் மழை
முகிலனும் முகுந்தனும் நண்பர்கள். முகிலன் சிந்தனை நெறியைப் பின்பற்ற முற்படுபவன். முகுந்தனோ பக்தி வெறியைக் கடைப்பிடிப்பவன். இருவரும் விவசாய வேலை பார்க்கும் தினக் கூலிகள். ஒரு நாள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் நேரம், வழியில் பயங்கர இடியுடன் மழைபெய்ய, இடி இடிக்கும் நேரமெல்லாம் அர்ச்சுனன் பெயர் பத்து என்று சொல்லிக் கொண்டே வந்தான் முகுந்தன்.
முகிலன் அவன் சொன்னதற்கு அர்த்தம் கேட்டான். உடனே முகுந்தன் சொன்னான், நீ புராணத்தையும் கடவுளையும் நம்பாதவன். உனக்குச் சொன்னால் ஏது புரியப் போகுது என்றான். முகிலன் அவனை விடுவதாக இல்லை. புராணங்களும் கடவுள்களும் இல்லையெனில் அய்யா பெரியார் ஏது? சும்மா சொல்லு? என்றான்.
புராணப் புளுகைச் சொல்ல ஆரம்பித்தான் முகுந்தன். ஒருகாலத்தில் இடிராசன் மகள் மின்னலை அர்ச்சுனன் பெண் கேட்க, இடிராசன் மறுக்க, இருவருக்கும் சண்டை மூண்டது. இடிராசன் தோற்றவுடன் மகள் மின்னலை அர்ச்சுனனுக்குத் திருமணம்செய்து வைக்கிறான். அப்பொழுது மாமன் இடிராசனிடம் அர்ச்சுனன் ஒரு வரம் கேட்கிறான்.
வரமா? என்ன வரம்? என்றான் முகிலன். வரத்தினை முகுந்தன் சொல்ல ஆரம்பித்தான். இடி விழும்போது அர்ச்சுனன் பெயர் பத்து என்று சொன்னவுடன் இடி அய்ம்பது மைல் தூரம் கடந்து விழவேண்டுமாம். அதுதான் வரம். அதனால்தான் அந்த வரத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறேன் என்றான்.
சற்று நேரத்தில் மிகக் கடுமையான மழைபெய்ய, ஒரு மரத்தடியில் ஒதுங்கினான் முகுந்தன். முகிலன் அவனை எச்சரித்தான், மழை பெய்யும் போது மரத்தடியில் நின்றால் மின்சாரம் பாய்ந்து உயிர் போகும் என்றான். அதற்கு முகுந்தன் சொன்னான், எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது; புராணங்களை முழுமையாக நம்புகிறேன்; எனக்கொன்றும் ஆகாது என்று அடம்பிடித்து நின்றுவிட்டான்.
முகிலன் வீடு செல்லவும், ஒரு இடி முகுந்தன் நின்ற மரத்தடியில் விழவும் சரியாக இருந்தது. மழைநின்றும் வெகுநேரம் முகுந்தன் வராததால் நண்பனைத் தேடி முகிலன் சென்றான். அங்கு முகுந்தன் சுட்ட கறிக்கட்டையாகக் கிடந்தான். முகிலன் அந்தக் கறிக்கட்டை உடலைச் சுமக்கையில் அவன் விழிகளில் கண்ணீர் மழையாய்க் கொட்டியது.
– மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்