பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: தாத்தாவின் சீட்டா!
அன்பார்ந்த பேத்தி, பேரன்களே,
எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? கொரோனா என்னும் கோவிட் 19 ஒரு பொல்லாத் தொற்று நோய் அல்லவா? மிகுந்த விழிப்புடனும் முன்னெச்சரிக்-கையுடனும் இருக்க வேண்டும். வெளியில் போகும்போது முகக்கவசம் இல்லாது இருக்கக்கூடாது. கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு நன்றாகப் பலமுறை கழுவ வேண்டும்.
பெரியவர்களுக்குத்தான் கொரோனா தொற்றுவரும்; குழந்தைகளாகிய நமக்கு வராது என்றெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டு தான் தோன்றித்தனமாக அலட்சியமாக இருக்கக்கூடாது. ஏராளமான குழந்தைகளையும் இளைஞர்களையும் கூட இந்த தொற்று உயிர்ப் பலி வாங்கியுள்ளது. செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த சோகத்துடன் தான், அருமைப் பேத்தி பேரன்களே. உங்களுக்குச் சொல்லுகிறேன். கவனம்! கவனம்!!
நன்கு சத்தான உணவைச் சாப்பிடுங்கள்! உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்யுங்கள்! விசாலமானதாக வீட்டுப் பகுதி, மேல் மாடி, தாழ்வாரங்கள் இருந்தால் அதற்கேற்ப விளையாட்டு, உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், ஜாக்கிங் (Jogging) ஓடுவது இவைகளை முகக்கவசத்துடன் செய்து நல்ல உடல், உள்ள நலத்தைப் பேணிக் காப்பாற்றி, உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்திக் கொண்டால், அச்சமற்று வாழலாம்.
பேத்தி, பேரன்களே,
பெரியார் தாத்தா எப்படி உண்மை பேசுவதற்காக ஜெயிலுக்குப் போவதற்குக் கூட தன்னை வீட்டிலேயே பழக்கப்படுத்திக் (தரையில் படுப்பது போன்ற பயிற்சிகள்) கொண்டார் என்று நான் எழுதியதை, போன ‘பெரியார் பிஞ்சு’ இதழில் படித்தீர்கள் அல்லவா?
அதுபோல, பெரியார் தாத்தாவும் மணியம்மை பாட்டியும் உங்களை மாதிரி – பிஞ்சுகளிடம் – குழந்தைகளிடம் – எப்படியெல்லாம் கொஞ்சி மகிழ்ந்து, மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளைக்கூட எழுத்துக் கொண்டு வந்து வளர்த்து, ஆளாக்கி மகிழ்ந்தார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியம்.
பெரியார் தாத்தாவும், மணி பாட்டியும் வெளியூர்களில் சுற்றுப் பயணம் முடித்து நடு இரவில் வேனில் திருச்சிக்குத் திரும்பி படுக்கைக்கு செல்லும் முன்கூட, “நாகம்மை குழந்தைகள் இல்லத்துக்’’ குழந்தைகள் பற்றி, – அவர்களது நலம் பற்றி இருவருமே விசாரித்து, பிறகே உறங்கச் செல்வார்கள்!
இரண்டு, மூன்று குழந்தைகள் எப்போதும் அவர்களது சுற்றுப் பயணத்திலேயே கூட வருவார்கள். கைக்குழந்தைகள் – மணியம்மா பாட்டியின் வளர்ப்பில் அன்பு அரவணைப்பில் வளர்ந்தவர்கள்தான். அது பற்றி நிறைய தெரிந்து கொள்ளணும்னு நீங்க ஆசைப்பட்டா, திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தங்கத்தாள் அக்காவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
அதே மாதிரி வளர்ப்புகளான செல்லப் பிராணிகளிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டோர் பெரியார் தாத்தாவும், மணியம்மா பாட்டியும்!
என்ன ஆச்சரியப்படுகிறீர்களா? பெரியார் தாத்தா, தான் வளர்த்த அல்சேஷசன் நாய்க்கு ‘சீட்டா’ என்று பெயர் வைத்து, மிகுந்த பாசத்துடன் அதனைப் பராமரித்தார்கள். அம்மாவைவிட அய்யாவிடம் அதிகப் பாசம் போலும். ஆகையால், எப்போதும் அவரை விட்டு பிரியாது. அந்த சீட்டா நாயும் சரி, அதன்பின் வந்த சில குட்டையான வகை நாய்களும் சரி, கழிப்பறைக்கு பெரியார் தாத்தா சென்றால் கூட, திரும்பி வரும்வரை அறைக்கதவுக்கு வெளியே படுத்துக் காத்துக் கிடக்கும்.
கூட்ட மேடைகளுக்குப் பெரியார் தாத்தா வரும் முன்னர், முக்கிய வி.அய்.பி. பிரமுகர்களுக்கு இன்று ‘பெரிய செக்யூரிட்டி ஆபிசர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பதுபோல, ‘சீட்டா’ கம்பீரமாக வந்து மேடையை ஒரு பார்வை பார்த்து அய்யா அருகில் அல்லது கட்டிலின் அடியில் மேடையில் படுத்திருக்கும். பெரியார் தாத்தா -பேசும்போது அது அமைதியாகவே இருக்கும். – எதிரிகள் அய்யாவிடம் நெருங்கிட மிகவும் பயப்படுவார்கள். அன்பு ஒரு புறம், பாதுகாப்பு மறுபுறம், என்னே விசித்திரம்.
பல நேரங்களில் தான் சாப்பிட்ட தட்டிலேகூட உணவை வைத்து சீட்டாவையோ, தான் வளர்த்த பிற நாய்களோயோ சாப்பிட அவர் அனுமதிப்பார். அப்படி பேதத்தை எங்கும் காட்டாத தாத்தா தான் நம் பெரியார் தாத்தா என்பதை உலகுக்கே புரிய வைப்பது போன்ற சமத்துவ – சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் அவை!
(பலரால் இச்செய்திகூட செரிமானம் செய்து கொள்ளப்பட முடியாத செய்தியாகும்).
நாய்க்கு நோய் என்றால் பிராணிகள் மருத்துவரிடம் அனுப்பி, உடனே தக்க சிகிச்சை பெற்று நாயின் வலியிலிருந்து காப்பாற்ற பெரியார் தாத்தாவும் மணியம்மா பாட்டியும் தயங்கியதே இல்லை!
அப்படி ஒரு செல்லமோ செல்லம்!
அந்த நாய் ‘சீட்டா’ இறந்தபோது எதற்கும் கலங்காதவர்களான இருவரும், -கண்ணீர் விட்டு அழுதார்கள் – அதனைப் புதைக்கு முன்!
மனிதநேயம் தாண்டிய உயிர் நேயமும்கூட! அந்த துக்கத்தை மாற்றத்தான் பர்மா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று வெளிநாட்டிற்குப் பயணம் செய்தார்கள் என்று தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிஞர் கருணானந்தம் அவர்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளார்! அன்பு செலுத்துவது என்றால் சகல ஜீவராசிகளிடமும் தான். செல்லப் பிராணிகள் விதிவிலக்கல்லவே!
பிள்ளைகளே,புரிந்து கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,
– கி.வீரமணி