சராசரி நுண்ணறிவு விகிதம் (மினி) எவ்வளவு? அதை அதிகரிப்பது எப்படி? கணக்கிடுவது எப்படி?
What is the average level of IQ? How to improve it? How to calculate it?
ஜெர்மன் சொல்லான Intelligenz Quotient என்பதிலிருந்து வந்த “IQ’’’’ எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912 இல் பயன்படுத்தப்பட்டது. அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினெட் (Alfred Binet) மற்றும் தியோடர் சைமன் (Theodore Simon) என்ற உளவியலாளர்களால், மாணவர்களின் அறிவுத்திறனை அளந்தறிய உருவாக்கப்பட்ட முறையாகும்.
இம்முறைப்படி, ஒரு குழந்தையின் வயதும், அதன் திறன் வயதும் கொண்டு நுண்ணறிவு விகிதம் கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திறன் வயது என்பது செழியன் என்ற ஒரு 10 வயது மாணவனால், ‘ஒரு 14 வயது மாணவன் தீர்க்கக் கூடிய கணிதம், மொழி, பொது அறிவு சார்ந்த சிக்கல்களை தீர்க்க முடியுமெனில்’ செழியனுடைய திறன் வயது 14 என கணக்கிடப்படுகிறது.
இதன் பின் கீழ்க்காணும் சூத்திரத்தின் அடிப்படையில் நுண்ணறிவு விகிதம் (நு.வி) கணக்கிடப்படுகிறது.
நு.வி = (திறன் வயது/வயது) X 100
நாம் எடுத்துக்கொண்டதன் படி செழியனின் நு.வி = 14/10 X 100 = 140
இது பழைய முறை. இதனை மேம்படுத்தி ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினரால் உருவாக்கப்பட்ட ஸ்டான்ஃபோர்டு – -பினட் முறை (ஷி-ஙி-), குழந்தைகளுக்கான வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவீடு (WISC), பெரியவர்களுக்கான வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவீடு (WAIS, குழந்தைகளுக்கான கவ்ஃப்மேன் மதிப்பீட்டு அளவை (Kaufman-ABC) போன்ற முறைகள் இப்போது பயன்பாட்டிலுள்ளன. இது தவிர, பீபாடி படச் சொல் தேர்வு ( Peabody Picture Vocabulary Test) ராவெனின் வளர் அணி (Raven’s progressive Matrices)முறைகளும் பயன்பாட்டிலுள்ளன.
ஸ்டான்ஃபோர்டு – –பினட் முறையிலும், பெரியவர்களுக்கான வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவீட்டு முறையிலும் இயல் பரவல் முறையில் மதிப்பிடப்படுபவரின் திட்ட விலக்கத்தைக் கொண்டு நுண்ணறிவு விகிதம் கணக்கிடப்படுகிறது.
எ.காட்டாக 60 கேள்விகள் கேட்கப்படும் ஒரு நுவி மதிப்பீட்டுத் தேர்வில் 25/60 என்பது 100 என்பது இயல்பு எனக் கொள்ளப்படும். இது சராசரியாகும்.
45/60 க்கு நுவி 130
55/60 க்கு நுவி 140
ஒருவரை வெவ்வேறு முறைகளில் சோதித்தபோது அவர் பெற்ற நு.வி எண்கள் வெவ்வேறாக இருந்தன. எனவே, இது இம்முறைகளின் பெரும் குறைபாடாக உள்ளது. நோபல் பரிசை வென்ற அறிவியல் அறிஞரான ஃபிரான்சிஸ் கிரிக் அவர்கள் 115 நுண்ணறிவு விகித எண்ணையே பெற்றார். வெவ்வேறு தொழில் புரிவோருக்கிடையேயான நு.வி. எண்களில் பெரும் மாறுபாடு இருந்தது. எது நுண்ணறிவு? என்பதை வரையறுக்க முடியாத சிக்கல் இன்னும் உளவியல் அறிஞர்களுக்கே உள்ளது. மேலும், நுண்ணறிவு விகித எண்களைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையின் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, நுண்ணறிவைத் துல்லியமாக அளக்கும் முறைகள் மேம்படுத்தப் படவேண்டும்.
இந்தக் கணிப்புமுறை மேற்கத்திய உளவியலாளர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. ஆகவே மேற்குலக நாட்டு மக்களை மனதில் கொண்டே கேள்விகள் உருவாக்கப்பட்டன. அத்துடன் படித்தவர்கள் கூடுதலாக நன்கு தேர்ந்துவிடும் வாய்ப்பும் உண்டும். கணிப்புமுறைகள் நாட்டுக்கும், கணிக்கப்படும் சந்தர்ப்பத்தின் பின்புலத்துக்கும் ஏற்ற மாதிரியான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டாலும் இதில் சில குறைபாடுகள் உண்டு. குறிப்பாக மொழித்திறன் போன்றவற்றில் அதிகம் படித்தவர்களுக்கு சார்பாகவே இந்தக் கணிப்புமுறை அமைந்துவிடுகின்றது.
ஆகவே என்னைப் பொறுத்தவரை ஒரு மனிதனுடைய அறிவையோ ஆற்றலையோ துல்லியமாக ஒரு சூத்திரத்தை வைத்துக் கணித்துவிட முடியாது.
உள்ளங்கை, உள்ளங்கால் வெண்மையாகவும், புறங்கை, புறங்கால் கருமையாகவும் இருப்பது ஏன்?
நம் உடல் முழுக்க தோலின் தன்மை ஒரே மாதிரி இருப்பதில்லை, பல வகைகளில் வேறுபடுகிறது. மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் தோல் செல்களை உற்பத்தி செய்யும் மெலனின் (Melanin)) நிறமியின் அளவுதான் தோல் நிறத்தைத் தீர்மானிக்கிறது. பொதுவாக நம் தோல்கள் மூன்று அடுக்குகளால் ஆனது. எபிடெர்மிஸ் (Epidermis)) என்னும் மேல் அடுக்கு, டெர்மிஸ் (Dermis)) என்னும் மைய அடுக்கு மற்றும் ஹைப்போடெர்மிஸ் (Hypodermis)) என்னும்கீழ் அடுக்குகளால் ஆனது.
சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களை (UV rays), நம் மேல் தோல்கள் தடுக்கும் பணியைச் செய்யும்போது, மெலனின் வினையாற்றி தோல் நிறத்தைப் பழுப்பாக்குகிறது. உள்ளங்கைகளையும் கால் பாதங்களையும் எடுத்துக்கொண்டால், மற்ற மேல் தோல்களை விட ஓர் அடுக்கு அதிகமாக இருக்கும். இந்தத் தடிமனான மேல் அடுக்கில் மெலனின் நிறமி மிக மிகக் குறைவு என்பதால் தான் தோல் வெண்மையாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மேல் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள், வியர்வைச் சுரப்பிகள் போன்றவை மிக மிக குறைவாக இருப்பதனால்தான் நம்மால் வழுக்காமல் ஒரு பொருளைத் தூக்கவும், சறுக்காமல் நடக்கவும் முடிகிறது.
நமது பரிணாம வளர்ச்சியில் சுமார் ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உடல்முழுக்க இருந்த என்பது சதவீத ரோமங்களை நாம் இழந்துவிட்டோம். கற்கருவிகள் முதல் மடிக் கணினி வரை, காலங்காலமாக நமது கைகளும், நடக்கும்போது பாதங்களும் உராய்விலேயே செலவிடப்படுவதால் பரிணாம வளர்ச்சியில் இந்த மாற்றத்தை அடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கேள்விகளை அனுப்பியவர்: பி.சாந்தி
“கேளுங்கள் மிஸ்டர் ஜி.கே.விடம்” என்று குறிப்பிட்டு உங்கள் கேள்விகளை அஞ்சல் / மின்னஞ்சல் (periyarpinju@gmail.com) / வாட்ஸப் (9710944819) வழியாக அனுப்புங்கள்.