பன் விருந்து
இன்று மதியம் ஒரு மணிக்கு பன் விருந்து. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த பன் விருந்து நடைபெறும். அதுவும் ஞாயிறு மதியம் தான் நான் அங்கே செல்வதற்குத்தான் தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். உங்களுக்கு எல்லாம் பெயர் இருப்பது போல எனக்குப் பெயர் இல்லை. யாரும் வைக்கவில்லை. ஆனால் சிறுவர்கள் ஆளுக்கு ஒரு பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். டாமி, டைகர், சோழவரம்பன் என்று நிறைய பேர்களை வைத்து கூப்பிடுவார்கள். தெரு நாய்களுக்கு பெயர் யாரும் வைப்பதில்லை. வைத்தாலும் நிரந்தரப் பெயர் இல்லை. நான் பழுப்பு நிறத்தில் இருப்பேன். சரி சரி நேரமாகிவிட்டது நான் பன் விருந்துக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கிறேன்.
அட, என்ன இது? ஊர் இப்படி இருக்கு? என் தெருவை விட்டுக்கூட வெளியே வரமுடியலையே. எங்க தெருவை அடைச்சு வெச்சிருக்காங்க. இத்தனைக்கும் இது பிரதான சாலை தான். குறுக்குச் சந்தெல்லாம் இல்லை. இதையே இப்படி தடுப்பு போட்டு மூடி வெச்சிருக்காங்களே. இத்தனை ஆண்டு வாழ்க்கையில இந்த மூனு மாதங்கள் ரொம்பவே கொடூரமான நாட்கள். என்னவென்றே தெரியல… சாப்பாடே எங்களுக்கு எங்கேயும் ஒழுங்கா கிடைக்கல.
அதோ பக்கத்துத் தெரு… அது வழியா வெளிய வந்துட்டேன். போரூர் பாலத்தைத் தாண்டி நாலாவது சந்தில் தான் பன் விருந்து நடக்க இருக்கு. பிரதான சாலைக்கு வந்துட்டதால இப்ப எல்லாம் நெரிசல் இல்லை. வேகமா போக முடியுது.
அய்யோடி, இதென்ன புதுசா பயமுறுத்துற மாதிரி ஒரு பொம்மை வெச்சிருக்காங்க. அதுவும் நடு ரோட்டுல. போன முறை வேற ஒரு நண்பனோட பேசிட்டு வந்ததால கவனிக்கல. தலையை பார்த்தாலே பகீர்ன்னு இருக்கே! ஒருவேளை இந்த ஆள்தான் இப்ப ஊரையே ஆட்டி வைக்கிறாரோ? பன் விருந்து துவங்கினப்ப மொத்தம் நாலு நாய்ங்க மட்டுமே இருந்தோம். ஆமா என்னை ஆரம்பகால உறுப்பினர்னு வெச்சிக்கலாம். ரெண்டு வருஷம் முன்னாடி நாங்க நாலு நாய்கள் எதேர்ச்சையா சந்திச்சோம். அப்ப பராபர் டீக் கடையில இருந்து கருப்பு நாய் (என் நண்பன் தான்) ஒரு பன் எடுத்துட்டு வந்துச்சு. அங்க வேலை பார்க்கிற வடநாட்டுப் பையன் பன் போட்டு இருக்கான். அதை நாலு பேரும் பகிர்ந்து சாப்பிட்டோம். நாங்க பிச்சு சாப்பிட்றத பார்த்து அந்த பையன் இன்னும் ரெண்டு பன் போட்டான். அதைச் சாப்பிட்டுட்டு, அங்கிருந்து முன்னூறு அடி தூரத்தில இருக்கும் போரூர் ஏரிக்கரைக்குப் போவோம். அங்கே ஒரு சந்து வழியா கரைக்குக் கிட்ட போயிடுவோம். அங்க ஒரு கோவில் இருக்கு. விசேஷ நாட்களில் நல்ல சாப்பாடு கிடைக்கும், அது வேற கதை. அந்த கோவிலை ஒட்டினாப்புல ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கும். அந்த மர நிழலில் தான் உட்கார்ந்துப்போம். மனித நடமாட்டம் இருக்காது. மழை நாட்களில் இன்னும் அருமையாக இருக்கும். ஏரியில் மழை பெய்வதைப் பார்ப்பது சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில நேரம் பயமாகவும் இருக்கும். அவ்ளோ பெரிய ஏரி. ஜொயிங்ன்னு மழை கொட்டும். சுமார் ரெண்டு மணி நேரம் அமர்ந்திருப்போம், தூங்குவோம். டான் என்று நான்கு மணிக்கு கோவிலில் ஒலி எழுப்பப்படும். உடனே அங்கிருந்து கிளம்பி, அவரவர் தெருக்களுக்குப் போய்விடுவோம். எங்கள் தெருக்களில் இருந்து கிளம்பி, திரும்ப வரும்வரையில் அது பன் விருந்து தான். எப்ப இந்த பன் விருந்து வரும்னு ஆவலாக ஒவ்வொருவரா இருப்போம்.
இந்த மூனு மாதமா பன் விருந்தில் ஒரே சோகம் தான். எங்களுக்கு உணவளிக்கும் நண்பர்கள் பலரைக் காணவில்லை. எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. கடைகள் பெரும்பாலும் மூடியே இருக்கு. டீக்கடைகள் இருந்தாக் கூட சமாளிச்சிப்போம். மேலத்தெரு கருப்பன் எங்கயோ ஒரு ஸ்கூல் பக்கமா ஒதுங்கிட்டானாம். அங்கே பசங்களுக்குப் பதிலா நிறைய மக்கள் வந்து தங்க ஆரம்பிச்சிட்டாங்களாம். ஆம்புலன்ஸும், மருந்து வாடையும் அதிகமாகிடுச்சுன்னு சொன்னான். ஆனா அங்க சாப்பாடு நல்லா கிடைக்குது, யாராச்சும் வரீங்களான்னு போன பன் விருந்து சமயத்தில் கேட்டான். அவங்க அவங்களுக்கு அந்தத் தெருவை விட்டு வர மனசு இல்லை என்பது தான் உண்மை. எனக்குச் சோறு போட ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவன் தெனைக்கும் ஒரு வேளையாச்சும் எனக்கு சோறு வெச்சிடுவான். நான் சாப்பிட்ற வரைக்கும் காத்திருப்பான். வாலை ஆட்டிகிட்டே சாப்பிடுவேன். அவன் சிரிச்சுகிட்டு உள்ள போயிடுவான். ஆனா இப்ப சில வாரமா ஒரே சோகமாத்தான் அவனும் இருக்கான். அவனை விட்டுட்டு வர முடியாது என்னால! முன்ன எல்லாம் அவன் தான் கடைக்குப் போய் சாமான் எல்லாம் வாங்கிட்டு வருவான். அவன் கூடவே ராணுவப் படை வீரன் போல போயிட்டுத் திரும்ப வருவேன். சில சமயம் கடையில் ரெண்டு பர்பி வாங்குவான். எனக்கு ஒன்னு அவனுக்கு ஒன்னுன்னு சாப்பிடுவோம். இப்ப அவன் வீட்டைவிட்டே போறது இல்லை. வெளிய வரும்போது முகத்துல துணி கட்டிகிட்டுத்தான் வருவான். சில சமயம் என்கிட்ட பேசுவான். நான் பதிலுக்கு வாலைமட்டும் ஆட்டுவேன். அவனை விட்டு எப்படி வர்ரது சொல்லுங்க. இதோ பன் விருந்து முடிச்சிட்டுத் திரும்ப எங்க தெருவுக்குத்தான் போகப் போறேன்.
இப்ப எல்லாம் எங்க பன் விருந்துக்கு மொத்தம் 12 நாய்கள் வராங்க. நண்பர்கள், நண்பர்களோட நண்பர்கள்னு கூட்டம் பெருசாகிடுச்சு. ஆனா ஒரே ஒரு முறை நாங்க சந்திச்சப்ப நாய் வண்டி வந்துச்சு. சிட்டா பறந்துட்டோம்ல! கருப்பன் ஒரு முறை சிக்கி! தப்பிச்சு வந்த கதையை ரெண்டு வாரம் சொல்லிகிட்டு இருந்தான். வழக்கமா சந்திக்கிற டீக்கடை இன்னைக்கு மூடி இருந்துச்சு. போச்சு… பன் இல்லாம தான் இன்னைக்கு பன் விருந்து போல. எட்டு பேர் வந்துட்டோம். அதுல பாதிப் பேர் சாப்பிட்டு ஒரு நாள் ஆச்சுன்னு சொன்னாங்க. பாவமாத்தான் இருந்துச்சு. பஸ், கார், இரு சக்கர வாகனம் எல்லாம் ரொம்ப ரொம்பக் குறைவாத்தான் இன்னைக்கு சாலையில் இருந்துச்சு. முக்கியமா பன் எடுத்துட்டு வரும் நண்பன் தொங்கிய முகத்துடன் வந்தான். நாக்கு வெளிய நீட்டி வந்தா சோகமா இருக்கோம்னு அர்த்தம். ஒன்பதாவது நபரும் வந்தாச்சு ஆனா ஒரு துண்டு ரொட்டி, பன், சாப்பாட்டுப் பொருள் எதுவுமே இல்லை.
முதல்முறையா ஒரு பன் விருந்து இப்படி அமைஞ்சிருக்கு. “நம்ம ஊருக்கு யாராச்சும் சூன்யம் வெச்சிட்டாங்களா?’’ என்றது ஒரு நண்பன். “ஆமாம் இப்படி பார்த்ததே இல்லை’’ என்றது எங்க பன் விருந்து குழுவின் மூத்த நாய். “ஏப்பா, அந்த வெள்ளம் வந்த சமயம் கூட நமக்கு எல்லாம் சாப்பாடு கெடச்சது, ஜோரா ஏரியில நீந்தி பயங்கர குஷியா இருந்தோம். இப்ப என்னடான்னா. எங்க பார்த்தாலும் போலீஸ் வண்டியா நிக்குது. பார்க்கவே கொஞ்சம் பயமாவும் இருக்கு. எப்ப முடியுமோ’’ இப்படியே சோகமா பேசிட்டு இருந்தோம்.
அப்ப.
“ச்சூ..ச்சூ..ச்சூ’’
ஒரு குட்டிப்பெண் பாக்கெட் நிறைய பன்களுடன் எங்களை அழைத்தாள். எல்லோரும் வாலை ஆட்டிக்கொண்டே பன்களை கவ்விக்கொண்டோம். எல்லோரும் மகிழ்ச்சியாக ஏரிக்கரைக்குச் சென்றோம். தொடர்கின்றது எங்கள் பன் விருந்து. அடுத்த பன் விருந்துக்குள் எல்லாம் சரியாகிட வேண்டும் என பேசிக்கொண்டோம்.