உலகப் புகழ்பெற்ற மனிதர்கள்
ஃபிரன்கோயிஸ் கியூஸ்னே. (Francois Quesnay)
உலகில் புகழ்பட வாழ்ந்து, தம்மொத்த மக்களையும் வாழ்விக்க நினைத்த உயர்ந்தோர் பலர். அவர்களுள் ஒருவர் தான் ஃபிரன்கோயிஸ் கியூஸ்னே. (Francois Quesnay). இவர் 1694ஆம் ஆண்டு பாரீஸ் நகருக்கு வெளியே உள்ள, ஒரு பண்ணை வீட்டில் பிறந்தார். இவர் தந்தை ஒரு வழக்குரைஞர். எனினும், இவரைத் தமது பண்ணையில், பணியாற்றும்படி வற்புறுத்தி யதால் இளம் வயதில் பள்ளியில் பயிலும் வாய்ப்பை இழந்தார். தம் படிப்பை 12 வயதில் துவங்கிய இவர், தம் 16ஆம் வயதில், ஓர் அறுவைச் சிகிச்சை வல்லுநரிடம் தொழில் நுணுக்கங்களைக் கற்று, பின் அவருடைய கண்காணிப்பில் முதன்மை அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் தகுதி பெற்றார். சூழ்நிலை காரணமாக வாய்ப்புகளை இழந்தவர், விடா முயற்சியால் எத்தகைய உயர்ந்த நிலையையும் அடைய முடியும் என்பதற்கு இவர் வாழ்வே சான்று.
உலகியல் பார்வையும், பணியும்
இவரது கண் பார்வையில் குறைபாடு இருந்தமையால், அறுவைச் சிகிச்சை மருத்துவப் பணியை விட்டு, உடல் நலம் காக்கும் மருத்துவரானார். 1749 இல் பதினைந்தாம் லூயி மன்னனின் அரண்மனை மருத்துவராக நியமிக்கப் பெற்றார்.
அங்கு, அவருக்கு ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்தமையால் மிகுதியான புத்தகங்களைப் படித்துத் தெளிந்தார். உலகத்தில் உள்ள மக்களை வருத்தும் நோய்கள் இரண்டு. ஒன்று இல்லாமை (வறுமை), மற்றது அறியாமை (Illiteracy). இவ்விரண்டு ஆமைகளும் ஒரு நாட்டில் குடியேறினால் அங்கு இன்பம் விளையாது. உலகம் முழுவதையும் இன்பப் பூங்காவாக மாற்றுவதே சிறந்த அறிஞர்களின் குறிக்கோள். அவ்வகையில், சிந்தித்து உலக நாடுகள் வறுமையில் வாடாமல், வளமான வாழ்க்கை வாழ வழிமுறைகளை வகுத்தார். நாடுகள் வறுமை அடையப் பல காரணங்கள் உள. அவற்றில் முதன்மையானவை தேவையற்ற போர்கள் _ மதக் கலவரங்கள், இயற்கைச் சீற்றங்கள். இவற்றில் இருந்து விடுபட்டு மக்கள் நல் வாழ்வு வாழ வழிமுறைகளை வகுத்தவர்தான் ஃபிரன்கோயிஸ் கியூஸ்னே. இவர் கண்ட வழிகள் எளிமையானவை. உலகம் உய்ய அவர் வகுத்த கொள்கைகள் (Physio-cracy) இயற்கை வழி (ழிணீக்ஷீணீறீ ளிக்ஷீபீமீக்ஷீ) எனப் பெயரிடப்பட்டது.
உலகின் கண்ணோட்டம்
புதிய புதிய தொழிற்சாலைகளை அமைப்பதும், அதில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நியமிப்பதும் அதனால் எல்லையில்லா உற்பத்தியைப் பெருக்குவதும் அவற்றைப் பிற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதும், அதன் காரணமாக கணக்கற்ற செல்வத்தைக் குவிப்பதும்தான் இன்றைய நாடுகளின் குறிக்கோள். இதைத்தான் முதலாளித்துவ சமுதாயம் என்று குறிப்பிடுகிறோம். இச்சமுதாயத்தினால் போட்டிகள் தோன்றின. அதனால், சுரண்டலும் பதுக்கலும் மக்களிடையே நோய்க்கிருமிகள் போல் பரவின. ஏழ்மையுற்றவர்கள் ஏழ்மையிலும் ஏழ்மை அடைந்தனர். வசதி படைத்தோர் மேலும் மேலும் தங்கள் வசதிகளைப் பெருக்கினர். இப்படித் தேடிப் பெற்ற வசதிகளைத் தங்கமாகவும் – பணமாகவும் (Currency) சேமித்தனர். இப்படிச் சேமித்த பணத்தால் தம் நாட்டுக்கும், தம் நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கலாம் என்று, உலக நாடுகள் சிந்தித்த காலத்தில் ஃபிரன்கோயிஸ் கியூஸ்னே இயற்கை வழியில் சிந்தித்தார்.
இவரது கொள்கைகள்
ஒரு நாட்டின் செல்வ வளம் என்பது, அந்நாட்டின் கருவூலங்களில் அடங்கியுள்ள தங்க நாணயங்கள் மற்றும் காகித நோட்டுக்களின் குவியலைக் கொண்டு அளவிட முடியாது. அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பது இவர் கருத்து. அதாவது, அந்நாட்டின் வேளாண்மையின் முன்னேற்றத்தைக் கொண்டுதான் கணக்கிட முடியும். இவர் கருத்தை எளிமையாக விளக்குவதற்கு சின்னச் சின்ன மின்னல்கள் என்ற நூலில் குறிப்பிடப்பட்ட ஒரு உரையாடலை இங்குக் காண்போம்.
ஓர் எலியார், ஓர் அணிலாரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல். அணிலே! அணிலே! ஏன் வேகமாகச் செல்கிறாய்? சற்று நேரம் நில்! உலக மக்கள் உன்னைக் கண்டால், விருப்பத்துடன் உன் முதுகைத் தடவிக் கொடுக்கிறார்கள். ஆனால், என்னைக் கண்டாலோ தடி கொண்டு அடிக்கிறார்கள். ஏன் தெரியுமா, உலகம் உன்னுடைய அழகில் மயங்கி, உன் மேலுள்ள மூன்று கோடுகளைக் கண்டு வியந்து, உன்னைப் பாராட்டுகிறது. ஆனால், அழகில்லாத என்னைக் கண்ட அளவில் விரட்டுகிறார்கள் என்று சொன்னது.
அதைக் கேட்ட அணிலார், எலியைப் பார்த்து, உன்னை மக்கள் வெறுப்பதற்கு அதுவல்ல காரணம். நான் மரங்களில் பழுத்த பழங்களைப் பார்க்கிறேன். அதில் எனக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டும் உண்டுவிட்டு, மீதமுள்ள பழத்தை விட்டுவிடுகிறேன். மக்கள் அணில் உண்ட பழம், என்று மீதமுள்ள அப்பழத்தை விரும்பி உண்ணுவார்கள். ஆனால், நீயோ எந்தப் பொருள் அகப்பட்டாலும் அதை முழுதும் உண்டுவிட்டு, மீதத்தை விட்டு வைக்காமல், கிடைத்ததை எல்லாம் கொண்டுபோய் குழியில் இட்டு, பதுக்கிக் கொள்கிறாய். (உலக) மக்களுக்குப் பதுக்குபவர்களைக் கண்டால் பிடிக்காது என்பது உனக்கு தெரியாதா?… என்று அணிலார், எலியாரின் தவற்றைச் சுட்டிக் காட்டினார். இதைத்தான், இயற்கைப் பொருளியல் வல்லுநர், இயற்கை வழி (Natural Order) என்ற தம் தத்துவத்தை மக்களிடையே எடுத்து வைக்கிறார். ஒரு நாடு உயர வேண்டுமாயின் உற்பத்தி பெருக வேண்டும். மக்கள் உண்மையாக உழைக்க வேண்டும். ஒரு நாடு, தன் நாட்டின் வளத்தைப் பெருக்க வேண்டுமானால் முதலில் விவசாயத்தையும் உழவர்களையும் உயர்த்த வேண்டும். அவர்களின் உழைப்பில்தான் உலகம் உயர முடியும். ஒரு நாட்டின் செல்வம் என்பது அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டுவதில் அல்ல, மனிதத்தைக் கட்டமைக்கக் கூடிய வேளான் தொழிலே, என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
“Poor peasant, poor kingdom;
poor kingdom. poor king’’
என்பதே அவர் தந்த கருத்து. இதைத்தான் ஔவை அன்றே சொன்னார். வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயர்வான். இதை 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒவ்வொருவரும் இந்த உண்மையை (இந்த இயற்கை நீதி) உணர்ந்து உழவுத் தொழிலுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிப்போம்.