சாய்ந்த கோபுரம் – மேகா
இத்தாலியில் பைசா (Pisa) என்ற அழகான நகரம் உள்ளது. இங்கு எட்டடுக்கு மாடிகளுடன் காணப்படும் கோபுரமே பைசா நகர கோபுரம் என்றழைக்கப்படுகிறது. கி.பி. 1174 – 1350 இல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இக்கோபுரம் சாய்ந்து கொண்டே வருவதால், பைசா நகர சாய்ந்த கோபுரம் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இதுவரை 16 1/2 அடிவரை சாய்ந்துள்ளது. இக்கோபுரம் கட்டப்பட்ட பின்பு சாயத் தொடங்கியதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். கோபுரத்தின் மூன்றாவது மாடியினைக் கட்டும்போதே சாயத் தொடங்கிவிட்டதாம்.
சாய்வதற்கான காரணங்களைப் பலரும் பலவிதமாகக் கூறுகின்றனர். என்றாலும், 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளதும், 14,500 மெட்ரிக் டன் எடையைத் தாங்கக் கூடிய அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதாக இல்லை, அடித்தளம் மணலினைக் கொட்டி எழுப்பியதால்தான் சாய்ந்து வந்தது என்பதும் நம்பக்கூடியவையாக உள்ளன. மேலும், மத்தியத் தரைக்கடலிலிருந்து வீசும் உப்புக் காற்றும் கேட்டினை அதிகப்படுத்தி வந்தது. மூன்றாவது மாடியினைக் கட்டத் தொடங்கும் போதே, கட்டட நிபுணர்கள் தங்கள் தவறினைச் சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. எனினும், அதற்குமேல் அய்ந்து மாடிகளைக் கட்டிவிட்டனர். 175 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிட்டுக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பைசா நகர சாய்ந்த கோபுரம் அதன் அருகில் உள்ள மாதா கோயில் ஒன்றுக்கு மணிக்கூண்டாகக் கட்டப்பட்டது.
கோபுரத்தின் உயரம் 179 அடியாகவும், சுவர்கள் 13 அடி கனத்திலும் உள்ளன. உச்சியில் 6-7 அடிவரை கனத்திலும் கட்டப்பட்டுள்ளது. முதல் மாடியில் 15 தூண்களால் தாங்கப்படும் கமான்களும், அடுத்த 6 மாடிகளில் 30 தூண்களும், மேல்மாடியில் 12 தூண்களும் உள்ளன. மேல்மாடியில் மணிகள் உள்ளன. மேல்மாடிகளுக்குச் செல்ல உள்ளே 296 படிக்கட்டுகள் உள்ளன. கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லினைப் போட்டோமென்றால், அக்கல் கோபுரத்தின் அடியிலிருந்து 16 1/2 அடி தள்ளி விழுகின்ற முறையில் கோபுர அமைப்பானது அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைச் சலவைக் கல்லினால் காண்போர் கண்களைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
கோபுரத்தின் உச்சியில் நகரைப் பார்த்து ரசிப்பதற்கு மேடையும் உள்ளது. இம் மேடையிலிருந்துதான் 1589 இல் விஞ்ஞானி கலிலியோ, மேலிருந்து கீழ்நோக்கி விழும் பொருள்களின் முடுக்கத்தைப் (Acceleration) பற்றிய ஆய்வினை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மேடையிலிருந்து பைசா நகரின் அழகிய காட்சியினையும், மத்தியத் தரைக் கடலையும் கண்டு ரசித்து மகிழலாம்.
கோபுரத்தைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோபுரத்தின் சாய்வினைத் தடுக்க, கட்டடக் கலை பொறியியல் வல்லுநர்கள் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
அந்தக் கால மக்களே இவ்வளவு திறமையுடன் கட்டியுள்ளார்கள். தொழில்நுட்பம் வளர்ந்த கணினியுகத்தில் உள்ளவர்கள் சாய்வினைத் தடுக்க தொடர்ந்து முயற்சி செய்தனர். முயற்சி வெற்றியைத் தந்துள்ளது.
யுனெஸ்கோ அமைப்பும் 1989 இல் கோபுரத்தைப் பாதுகாக்கும் பணியினை ஏற்றுக்கொண்டது. பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கோபுரத்திற்கடியில் சேர்ந்துள்ள மண் மற்றும் கழிவுப் பொருள்களை லேசர், உளி மற்றும் சிறிய வகை ஊசிகளைப் பயன்படுத்தி நீக்கினர். 6 மில்லியன் பவுண்டு செலவில் கிட்டதட்ட 5.5 டிகிரி சாய்ந்திருந்த கோபுரம் மீட்கப்பட்டு, தற்போது 3.9. டிகிரி சாய்வு நிலைக்கு நேர் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 200 ஆண்டுகளுக்கு இந்தக் கோபுரத்துக்கு ஆபத்து இல்லை என்று இதனைப் பராமரித்து வரும் ஒபரா பிரமாசியால் நிறுவனம் தெரிவித்துள்ளது.