பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!
எல்லோருக்கும் பெரியார் தாத்தா 142ஆம் பிறந்தநாள் வாழ்த்துகள். நமக்கு எப்போதும் செப்டம்பர் 17ஆம் தேதி என்றால் திருவிழாதானே! அன்றுதான் பெரியார் தாத்தா பிறந்தநாள் என்பதை வைத்து அவருடைய கொள்கை, லட்சியம், வாழ்க்கை, சாதனை _- இவற்றையெல்லாம் பற்றி உங்களைப் போல் உள்ள குழந்தைகள், பிஞ்சுகள், மற்றவர்கள் அனைவரும் அறிந்து கொண்டாடி மகிழ வேண்டும் அல்லவா! அதனால்தான் விழா _- உலகமெங்கும்!
பெரியார் தாத்தா ஒருமுறை அவர் பிறந்தநாளை ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு அழகான _- அருமையான விளக்கம் சொன்னார்.
என்ன தெரியுமா?
“பிறக்காத கடவுளுக்கெல்லாம் பிறந்தநாள் விழாவாக, பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, இராம நவமி, கந்தர் சஷ்டி என்றும், பெரியவர்கள் பிள்ளை விளையாட்டாகக் கொண்டாடுகிறார்கள். கடவுள்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை என்று கூறிவிட்டு, பிறந்தநாள் என்று ஒருநாளை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். அது எதற்காக? _ பிரச்சாரம் செய்ய!
ஆனால் நானோ முழுமையான மனிதன் _- உங்கள் முன்னால் செயல்படுகின்றவன். எனது கொள்கையைப் பரப்ப இது ஒரு பிரச்சார வாய்ப்பு _ அவ்வளவுதான். மற்றபடி இது வேறு எதற்கும் இல்லை’’ என்று எளியமுறையில் விளக்கினார்.
ஏன் விழா? புரியுதல்லவா?
பெரியார் தாத்தாவும் மணியம்மா பாட்டியும் உங்களை மாதிரி குழந்தைகளைக் கண்டால் ரொம்ப ரொம்பப் பிரியமாக அவர்களைக் கொஞ்சுவாங்க! தின்ன தின்பண்டம் தருவாங்க; வேடிக்கையெல்லாம் கூட பெரியார் தாத்தா செய்வாங்க!
ஒரு முறை ஒரு சிறு பேரப்பிள்ளை போன்ற சிறுவனை அழைத்தார்; ஓங்கி முதுகில் ஒரு அடி கொடுத்தார்… (செல்லமாகத்தான்!) அப்போது அவன் சிரித்தபடி நின்றவுடன், இப்படி யார் உன்னை அடித்தாலும் உடனே Thanks _ தாங்க்ஸ் _ -நன்றி என்று சொல்லு என்றார்; அதுவொன்றும் புரியாமலேயே தாத்தா சொன்னதை அப்படியே கடைப்பிடித்தான். யார் அடித்தாலும் ‘Thanks’ தாங்க்ஸ் என்பான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்! தான் ஒரு குழந்தையைப் போல அச் சிறுவனுடன் விளையாடுவார்! அவனும் மிகுந்த பாசத்துடன் இருப்பான்.
பெரியார் தாத்தாவுக்கு கழகத் தோழர்கள் வெளியூர் பயணங்களில் ஏராளமாக பழங்கள், பிஸ்கட்டுகள், தின்பண்டங்கள், பலகாரங்களைக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுக் காட்டுவார்_ அவர்கள் கண்ணெதிரிலேயே! மகிழ்ச்சி ஏற்படும். மிச்சத்தைப் பாதுகாத்து வைத்து திருச்சியில் உள்ள நாகம்மை குழந்தைகள் இல்லத்தில் வளரும் குழந்தைகளுக்கென அன்போடு மணிப்பாட்டி மூலம் கொண்டு போய் கொடுப்பார்கள்.
பெரியார் தாத்தாவும் மணியம்மை பாட்டியும் வளரும் குழந்தைகள் மேல் எப்போதும் மிகுந்த வாஞ்சையுடன் இருப்பதோடு, அவர்களது படிப்பு, எதிர்காலம் பற்றியும் திட்டமிட்டுச் செயல்படுவார்கள்!
எத்தனையோ குழந்தைகள் இல்லம் நாட்டில் உண்டு. ஆனால், இதுதான் ஒரு குடும்பத்தில் அங்கமாகி ‘தங்கமாகிய’ குழந்தைகள் இல்லம். பெரியார் தாத்தா, மணிப் பாட்டி வளர்ப்புதான் ‘ஸ்பெஷல்’ _-அவர்களுக்குப் படிப்பு, சேமிப்பு; வளர்ந்த பிறகு (பெண் குழந்தைகளானால்) திருமணம்… இப்படி முழுமையாக ஆளாக்கியவர்கள் என்பது அவர்களது மனிதநேயத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா?
‘கடவுளை மற’ என்று சொன்ன பெரியார் தாத்தா, அத்தோடு நிறுத்திவிடவில்லை. கவனியுங்கள்_- ‘மனிதனை நினை’ என்றார்! மனிதனை நினை என்பதற்கு அர்த்தம்_ உண்மையான பொருள் தெரிந்து கொள்ள, திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லமே நல்ல சான்று! பெரியார் தாத்தாவின் மனிதநேயம் பலரையும் வாழ வைக்கும் நேசம், இல்லையா?
பெரியார் வாழ்க என்றால் மனிதநேயம் வளர்ந்திடும் என்று அர்த்தம். புரிந்ததா பேத்திகளே, பேரன்களே, பிஞ்சுகளே!
உங்கள் பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,
– கி.வீரமணி