விளையும் பயிர்..
மிட்டாய்களை பரிசாக பெற்றவர்
அமெரிக்க அய்க்கிய நாடுகளைச் சேர்ந்த சிகாகோ நகரில் 1901 இல் பிறந்தவர். ஆறு வயதில் இவரது குடும்பம் மிஸ்ஸௌரியில் இருந்த ஒரு பண்ணைக்கு மாறியது. மகிழ்ச்சியில் துள்ளினார். வீட்டிலும் வயலிலும் ஓடும் நாய், பூனை, எலி, கோழி, வாத்து, பசு, குதிரை எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தார். எறும்புகள் புற்றுக் கட்டுவதையும் பார்த்தார். அவரது பண்ணையில் இருந்த சிவப்புச் சேவல் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
வயல்களில் ஓடும் கன்றுகளையும் முயல்களையும் ஓடுவது போலவே வரைய முயற்சித்தார். இவரது பண்ணைக்கருகில் ஒரு மருத்துவர் வசித்து வந்தார். சிறுவனின் ஓவியத் திறமையைக் கண்ட மருத்துவர் மிகவும் உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினார். மருத்துவர் வளர்த்து வந்த செல்லக் குதிரையின் படத்தினை வரைந்து காட்டச் சொன்னார். அப்போது இவரது வயது 9. குதிரையின் படத்தை மணிக்கணக்கில் வரைந்தார். படத்தினை வரைந்து முடிக்கும் வரை மருத்துவரும் அவரது மனைவியும் குதிரையைப் பிடித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தனர். படத்தினை வரைந்து முடித்த சிறுவன் சற்று பயத்துடனேயே காட்டினார்.
படத்தினைப் பார்த்த தம்பதிகள் மிகவும் நன்றாக உள்ளது என்று சொல்லி மகிழ்ந்து பாராட்டினார்கள். பை பையாக மிட்டாய்களைக் கொடுத்து மகிழ்ந்தனர். பள்ளியில் படித்துக் கொண்டே தனது ஓவியத் திறமையையும் வளர்த்துக் கொண்டார்.
சிகாகோ உயர்நிலைப் பள்ளியில் படித்த போது புகைப்படம் (Photo) எடுக்கும் கலையையும் கற்றுக் கொண்டார். சிகாகோ ஹெரால்டு பத்திரிகையில் பணிபுரிந்த கலைஞர் ஒருவர் நடத்திய நுண்கலைக் கழக வகுப்பில் கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்) வரையக் கற்றுக்கொண்டார். முழுவதும் கார்ட்டூன் களையே வைத்துப் படம் தயாரித்தவர்.
இப்படி, சிறு வயதிலேயே இயற்கையைத் கூர்ந்து கவனித்ததால் ஆலிஸ் ஹாஸ்யச் சித்திரங்கள், ஆஸ்வால்டு என்னும் அதிர்ஷ்டக்கார முயல், மிக்கி மௌஸ் கதைகளைக் கொடுத்து யாரும் செல்லாத துறையில் முயன்று பெரும் சாதனைகள் புரிந்தவர் வால்ட் டிஸ்னி!
இன்றும் டிஸ்னி லாண்ட் என்னும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குப் பூங்கா அமெரிக்காவில் உலகப் புகழ்பெற்றதாகத் திகழ்கிறதே!