துணிச்சல் : விமானத்தில் ஒரு வீராங்களை
இந்தியாவில் ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும்நாள் செப்டம்பர் 5 என்பது நமக்குத் தெரியும். அதே நாளில் ஓர் இளம் வீரப் பெண்மணியின் நினைவுகளும் வருகிறது.
அவர்பெயர் நீரஜா பனேட். வீரதீரச் செயல்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ விருது இவருக்கு வழங்கப்-பட்டிருக்கிறது. அப்படி என்ன வீரச் செயலை இவர் செய்துவிட்டார்?
பாம்பேயில் இருந்து நியூயார்க் செல்லும் PanAm Flight 73 இடையில் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் மேற்கு ஜெர்மனியின் ஃப்ராங்ஃபர்ட் ஆகிய இடங்களில் வழக்கமாக நின்று செல்லும். 1986ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அப்படி கராச்சியில் தரையிறங்கி நிற்கையில், Abu Nidal Organization அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் அந்த விமானத்தைக் கைப்பற்றித் தங்கள் கட்டுப்-பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.
“விமானத்தின் கதவை மூடு” என்று ஒரு விமானப்பணியாளரின் காலருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கையில், அவ்விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த நீரஜா விமான ஓட்டிகளுக்கு விமானம் கடத்தப்பட்ட செய்தியை குறியீடாக அனுப்பினார். Inertial Reel Escape Device வழியாக விமானிகள் தப்பித்துச் சென்று விட்டனர். அதன் காரணமாக கடத்தல்-காரர்களால் விமானத்தை மேற்கொண்டு கடத்திச் செல்ல வழியில்லாமல், பாகிஸ்தானோடு பேரத்தில் ஈடுபடுகின்றனர்.
பயணிகளின் பாஸ்போர்ட்டுகளைச் சேகரித்துத் தரச்செல்லி அதிலிருந்து அமெரிக்கர்களை மட்டும் தனியே பிரித்து வைத்துக்கொண்டு பேரம் பேசுவதும், படியாவிட்டால் சுட்டுக் கொள்ளலாம் என்பதும் அவர்களது திட்டம். இதனை உணர்ந்து கொண்ட விமானப் பணிப்பெண்கள் சிலர் அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டை இருக்கைக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டார்கள். ஒரு கட்டத்தில் பேரம் படியாது என்று எண்ணிய கடத்தல்காரர்கள், கண்டபடிக்கு சுட ஆரம்பித்தார்கள். அது சமயத்தில் நீரஜாவும் உடனிருந்த விமானப்பணியாளர்களும் விமானத்தின் கதவுகளைத் திறந்து விட்டு பயணிகளைத் தப்பிக்க வைத்தனர்.
அச் சமயத்தில் கடத்தல்காரர்கள் அவர்களை நோக்கிச் சுட்டதில் நீரஜாவின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்து இரத்த இழப்பு அதிகம் ஏற்பட்டது. அவசர உதவி வந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் இறந்து போனார். அப்பொழுது அவருக்கு வயது 22. இன்னும் இரண்டு நாட்கள் உயிரோடிருந்திருந்தால் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்.
இதற்காக அவருக்கு ‘அசோக் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு அஞ்சல்துறை அவர் படத்தோடு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. அசோக் சக்ரா விருது பெற்ற மிக இளவயதுக் குடிமகள் (Citizen) என்ற பெருமையும் இவருக்குண்டு.