கோமாளி மாமா-9 : கனவு
தோட்டத்தில் கதை சொல்ல கோமாளி மாமா வரும் விடுமுறை நாள். முதல் ஆளாக வந்திருந்தாள் மல்லிகா. மாணிக்கமும், செல்வமும் சற்றுநேரத்தில் அங்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் எப்போது வருவார்கள் எனக் காத்திருந்த மல்லிகா “மாணிக்கம், செல்வம்! நேத்து ராத்திரி தூக்கத்தில பயங்கரமான கனவு வந்துதுடா’’ என்றாள்.
“கனவு… அதுவும் பயங்கரமான கனவா? அப்படி என்ன பயங்கரம்?’’ என ஆர்வமாகக் கேட்டான் செல்வம்.
“கனவுக்குப் பலன் உண்டுன்னு சொல்வாங்க. உன் கனவுல அப்படி என்ன பயங்கரம் அதை முதல்ல சொல்லு’’… என்றான் மாணிக்கம்.
“என் கனவுல… நாம மூணு பேரும் எங்கேயோ ஒரு இடத்துக்குப் போறோம்…’’
“எங்கேயோ ஒரு இடமா?… அதுவும் நாங்க ரெண்டு பேரும் கூட வர்றமா?’’… எனப் பயந்தபடி கேட்டான் மாணிக்கம்.
“சரி இருக்கட்டும்… கனவு தானே… சும்மா சொல்லு’’… எனச் சிரித்தபடி சொன்னான் செல்வம்.
“அந்த இடம் ஒரே இருட்டா இருந்தது. நான் மட்டும் ஒரு பள்ளத்தில விழுந்துடுறேன்.
அந்தப் பள்ளத்தில நிறைய பாம்புங்க. இருக்கு… அதுங்க எல்லாம் என்னைக் கடிக்க வருதுங்க… அந்த நேரம் பாத்து எங்க அம்மா என்னை எழுப்பிட்டாங்க.’’
“உங்க அம்மா மட்டும் உன்னை எழுப்பாமவிட்டிருந்தா… உன் நிலைமை என்ன ஆயிருக்கும்?’’ என்றான் செல்வம்.
“பாம்பு கடிச்சிருந்தா கூட பரவால்லே… ஆனா தூங்கி எழுந்திருக்கிற நேரத்திலே கண்ட கனவுக்கு என்னா நடக்கும்?’’ எனக் கேள்வி எழுப்பினான் மாணிக்கம்.
“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது!’’ என்று சொல்லியபடி அவர்களின் அருகில் வந்தார் கோமாளி மாமா.
“இங்கே பாருங்க… கனவுங்கிறது மூளையில் உள்ள நினைவுக் குறிப்புகளை ஒண்ணோட ஒண்ணு தொடர்புபடுத்துற செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. முழிச்சிருக்கும் போது மனிதன் செய்யிற செயல்பாடுகளின் சில வெளிப்பாடுதான் கனவுலயும் வருது. அதுக்குப் பலன் உண்டா அதனால என்ன நடக்கும்னு… ஆராய்ச்சி செய்யிற வேலை முட்டாள் தனம்… மூடநம்பிக்கை. புரிஞ்சுதா…?’’ என்றார் கோமாளி மாமா. “மல்லிகாவுக்குப் பிடிக்காத சேமியா உப்புமாவைப் பார்த்தா அதுக்கு பாம்பு மாதிரி தோணியிருக்கலாம். அது கனவுல கூட பாம்பாவே வந்திருக்கலாம். ஆக மல்லிகா கண்ட கனவுனாலே பயனில்லே. ஆனா… சில கனவுகள் மெய்பட்டிருக்கு. அதுக்கு ஓர் உண்மைச் சம்பவம் சொல்றேன். 20,000 ஆண்டுகளுக்கும் மேலா இருக்கிற கலை வடிவம் தான் தையல் கலை. எலும்புகளில், விலங்குகளின் கொம்புகளில் ஊசி செய்து தைக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் அடைஞ்சு 14ஆம் நூற்றாண்டுல தான் இரும்பு ஊசி கண்டு-பிடிக்கப்பட்டது. அதுக்குப் பிறகு தையல் இயந்திரங்கள் பல நாடுகளில் பல பேரால் கண்டுபிடிக்கப்பட்டும் சரியா வேலை செய்யலே… ஆனாலும் பலபேர் அதுக்கான முயற்சியில் ஈடுபட்டுக்கிட்டே இருந்தாங்க.
அதில் ஒருத்தர்தான் எலியாஸ் ஓவேங்கிற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். இவருதான் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்னு சொல்லலாம். 1846இல் தையல் இயந்திரத்தைப் புதுசா உருவாக்க பல முயற்சிகள் செய்தாரு. அவரு இயந்திரத்தை வடிவமைச்சுட்டாரு. அவருக்குப் பிடிபடாமல் இருந்தது என்னன்னா… அந்த ஊசியோட கூர்மையான பாகத்தில நூலை எப்படிச் சேர்க்கிறது… மற்ற ஒரு பாகம் மிஷினுக்கு உள்ளே போயிடுது. அதனால அந்தப் பாகத்துல சாதாரண மற்ற ஊசியால செய்யிறது மாதிரி நூலை நுழைக்க முடியாது. அப்படியே நுழைச்சாலும் தைக்கிறது எப்படி? இதுதான் அவருக்கு இருந்த பிரச்சனை. ரொம்ப நாள் யோசிச்சாரு ராத்திரி பகலா அதே ஞாபகமா இருந்தாரு. ஒரு நாள் அவரு தூங்கிக்கிட்டிருந்தார். அப்போ ஒரு கனவு கண்டார்.’’
“ஓகோ! நம்ம மல்லிகா மாதிரி அவருக்கும் கனவுல பாம்பு வந்துதுங்களா’’… என்று ஆர்வமாகக் கேட்டான் செல்வம்
“இல்லே… அந்தக் கனவுல அவரை சில காட்டு வாசிங்க பிடிச்சுக்கிட்டுப் போறாங்க; அவரைக் கொண்டு போய் ஒரு இடத்துல கட்டிப் போட்டுடுறாங்க. அந்தக் காட்டுவாசிகளின் தலைவன் வர்றான். கட்டிப் போடப் பட்ட எலியாஸ் ஓவேயைப் பார்த்து ஓர் உத்தரவு போடுறான்.
“என்ன உத்தரவு மாமா?’’… என்றான் மாணிக்கம் “பொழுது சாயிறதுக்குள்ள நீ தையல் இயந்திரத்துக்கான ஊசியைக் கண்டு பிடிக்கணும்.
அப்படிக் கண்டுபுடிக்கலேன்னா… காட்டுவாசிங்க எல்லாரும் சேந்து உன் தலைய ஈட்டியால குத்தி உன்னைக் கொன்னுடுவாங்க. இது அரசகட்டளை’ன்னு சொன்னான் தலைவன்.”
“எலியாஸ் ஓவேக்கு என்ன பண்றதுன்னு தெரியலெ. திருதிருன்னு முழிக்கிறாரு.
அந்த நேரத்திலெ காட்டுவாசிங்க எல்லாரும் ஒரு மாதிரி கத்திக்கிட்டு அவரைச் சுத்திச் சுத்தி வந்து ஆட்டம் போடுறாங்க. ஆகா, தன்னோட கடைசி நேரம் நெருங்கிடுச்சுன்னு பயத்தோட, ஆடுறவங்களைப் பரிதாபமாப் பாத்தாரு. அவங்க கையில வச்சிருந்த ஈட்டியை இவரோட முகத்துக்கு நேரா நீட்டி குத்துற மாதிரி காட்டி ‘ஓகா… ஊகான்னு கூச்சல் போடுறாங்க. நேரம் போயிக்கிட்டே இருக்கு. அப்படி இவர் முகத்துக்கு நேரா நீட்டுன ஈட்டி கண்ணுலபடுற மாதிரி வந்து வந்து போகுது. அப்ப அந்த ஆயுதத்தின் கூரான முனையைப் பாக்குறாரு. அந்த முனையிலே ஒரு சின்ன துவாரம்… தெரியுது உடனே எலியாஸ் ஓவேக்கு பளிச்சுன்னு ஒரு யோசனை தோணுச்சு.
இதைத்தானே இவ்வளவு காலமா நாம தேடிக்கிட்டிருந்தோம்! கூரான முனையிலே ஒரு சின்னத் துவாரத்தைப் போட்டுட்டா அது மூலமா நூலைச் செலுத்திவிட்டால் தையல் இயந்திரத்தின் ஊசி ரெடின்னு நினைச்சாரு.
அவ்வளவுதான், தூக்கமும் போச்சு கனவும் கலைஞ்சு போச்சு. உடனே அதுக்கான வேலையைத் தொடங்குனாரு. கொஞ்ச நாளில் அந்த ஊசியைச் செய்து பயன்படுத்திப் பார்த்து தன் முயற்சியிலே வெற்றியும் அடைஞ்சிட்டாரு. அன்றைய காலகட்டத்திலெ கிட்டத்தட்ட 80 பேருக்கு மேல அதுவும் அய்சாக் சிங்கர் உள்பட பலபேரு இந்த முயற்சியிலே ஈடுபட்டுக்கிட்டிருந்தாங்க. 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் இதற்கான காப்புரிமையை முதன்முதலா பெற்றவர் எலியாசு ஓவே. அதனாலெ தையல் இயந்திர வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாளரா அவரோட பேரு பதிவாச்சு.
“அதெப்படி அவர் கனவுல அப்படி ஒரு யோசனை வந்தது மாமா’’ என்றாள் மல்லிகா. நல்ல கேள்வி. நம்ம பார்க்கிற, கேட்கிற, உணருகிற பல விசயங்களைப் பதிவு பண்ணிக்குது நம்மோட மூளை. ஆனால், அடுத்தடுத்த நகர்வுகளாலேயோ, சிந்தனைகளாலேயோ அது நம்ம கவனத்துக்கு வராமல் கூட போகலாம்.
ஆனால் நம் மூளையோட நினைவு அடுக்குகள்ல தேங்கி நிற்கும். நாம் கவனிக்கத் தவறிய இப்படிச் சில செய்திகள் நம்ம கனவுல வெளிப்படலாம். ஒன்றிலிருந்து ஒன்றா தோன்றும் கற்பனைகள் கூட கவனம் பெறாம, பிறகு கனவுல வரலாம். அப்படித்தான் ஓவே, தொடர் ஆராய்ச்சியில் இருந்தப்போ அவர் மூளை பதிவு செய்துக்கிட்ட ஒரு விசயம் கவனம் பெறாமல், திரும்ப கனவு வழியா வந்திருக்கலாம்.
ஒரு கண்டுபிடிப்பாளரின் கனவுனால சமூகத்துக்குப் பயன் விளைஞ்சுது. சாதாரணமா, மனிதர்கள் காணுற கனவுக்குப் பலனைத் தேடி அலையக்கூடாது. புரிஞ்சுதா’’ என்று கதையைச் சொல்லிமுடித்தார் கோமாளி மாமா.
புரிந்து கொண்ட மூவரும் புறப்பட்டனர் – புதிய சிந்தனைகளைச் சுமந்தபடி.
– மீண்டும் வருவார் கோமாளி