சிறுகதை : பறவைகள் செய்த இயற்கை விவசாயம்
’உழவுக்கவிஞர்’ உமையவன்
எப்பவுமே சந்தோச ஒலி நிறைந்திருக்கும் மகிழவனம் அன்றைய தினம் ரொம்ப அமைதியாக, வெறிச்சோடிக் காணப்பட்டது. அங்கு வாழும் பறவைகளும், விலங்குகளும் எப்பவுமே ஒற்றுமையா, மகிழ்ச்சியா வாழ்வதால் அந்த வனத்திற்கு மகிழவனம் என்று பெயர் வந்தது. ஆனா இன்னைக்கு எல்லா விலங்குகளும், பறவைகளும் ரொம்பவும் சோகமாக இருந்தன, இதனால் அங்கிருந்த மரங்களும், செடிகளும் சோகமாகிவிட்டன.
எல்லோரும் சோகமாக இருந்தாலும் அங்கிருந்த குட்டிக் குரங்கு மட்டும் தன் சேட்டையை விட்டபாடில்லை. ஒவ்வொரு விலங்கிடமும் சென்று “என்னாச்சு? ஏன் எல்லோரும் இப்படி மூஞ்சிய உம்முன்னு வெச்சிருக்கீங்க?’’ என்று கேட்டது.
குட்டிக் குரங்கின் கேள்விக்கு பல விலங்குகள், “அதெல்லாம் ஒன்றுமில்லை, நீ போய் விளையாடு’’ என கூறிவிட்டன. ஆனால், குட்டிக் குரங்கின் நண்பரான மயில் மட்டும் அனைவரது சோகத்திற்கான காரணத்தைக் கூறியது.
“ஏய், குட்டிப்பையா,
“உனக்கு விசயமே தெரியாதா’’?
“இல்ல, எனக்குத் தெரியாது, நீயாவது என்னாச்சுன்னு சொல்லேன்’’ என்றது குட்டிக் குரங்கு.
“நேற்றைய தினம் பக்கத்து விளைநிலத்திற்கு உணவு தேடப் போன நமது வனத்தின் பறவைகளுக்கு, அங்கிருந்து வந்ததிலிருந்து உடம்பு சரியில்லை, நம்ம குரங்குத் தாத்தா தான் அவைகளுக்கு மருந்து கொடுக்கிறது. அதனால் தான் எல்லோரும் சோகமாக இருக்காங்க’’ என்றது.
“உடம்பு சரியில்லாமப் போற அளவுக்கு’ அப்படி என்னத்த சாப்பிட்டன பறவைகள்?’’ என கேட்டது குட்டிக் குரங்கு.
“அதுதான் யாருக்குமே தெரியல, குரங்குத் தாத்தா வந்து சொன்னாத் தான் தெரியும்’’ என்றது சோகமாக மயில்.
அன்றைய தினம் வழக்கம்போல காட்டு மைதானத்தில் விலங்குகள், பறவைகளின் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. ஒவ்வொரு மரமாகச் சென்று மூலிகை மருந்தைப் பறவைகளுக்குக் கொடுத்துவிட்டு குரங்குத் தாத்தாவும் சோர்வாக வந்து கொண்டிருந்தது. என்ன சொல்லப் போகிறதோ, பறவைகளுக்கு என்ன ஆனதோ என எல்லோரும் ஒருவித பதற்றத்தோடும், பயத்தோடும் காத்திருந்தனர்.
“பறவைகளுக்கெல்லாம் என்ன ஆனது குரங்குத் தாத்தா’’ என முதல் ஆளாகக் கேட்டது குட்டிக் குரங்கு.
“நாமெல்லாம் விரைவாக இந்த மகிழ வனத்தை விட்டு வேறெங்காவது செல்லும் காலம் வந்து விட்டது’’ என்றது குரங்குத் தாத்தா சோகம் தளும்பிய குரலில்.
“நாம எதுக்கு இவ்வளவு ஆண்டுகளாக வாழ்ந்த. இந்தக் காட்டைக் காலி செய்ய வேண்டும்?’’ எனக் கேட்டது குட்டி யானை.
“நம்ம காட்டைச் சுற்றி இருக்கிற வயல்வெளிகளில் எல்லாம் இப்ப அதிகமாக செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் அங்க உணவு தேடிப் போற நம்ம பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் பேராபத்து காத்திருக்கு. இதுல முதல் கட்டம் தான், இந்தப் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகள்.’’
“அப்படி வேற இடத்துக்குப் போனாலும் அங்குள்ள விளை நிலத்திலும் இதுபோன்ற செயற்கை மருந்துகளை அவர்களும் பயன்படுத்துவார்கள் தானே குரங்குத் தாத்தா’’ என்று கரடி கேட்டது.
“நல்ல கேள்விதான், ஆனா நமக்கு இதைவிட்டா வேற வழி இல்லையே! இப்படியே போச்சுன்னா நம்ம பறவை, விலங்கினங்கள் எல்லாம் அந்த நச்சு மருந்துப் பொருளுகளால் விளையும் உணவு தானியங்களை உண்டு நாளடைவில் நோயுற்றும், இறந்தும் விடுமே’’
“நமக்கே இந்த நிலைமைன்னா, அப்போ அந்த உணவுப் பொருள்களை உண்ணக்கூடிய மனிதர்களின் கதி என்ன ஆகும் குரங்குத் தாத்தா’’ என்றது மான்.
“மகசூலைப் பெருக்க மரபு வழி வேளாண்மையைவிட்டு விலகி, அதிகமாக செயற்கை உரங்களையும், அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தும். இந்த மனிதக் கூட்டத்திற்கு விரைவில் பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது’’ என கோபக்குரலில் எச்சரிக்கை மணி அடித்தது குரங்குத் தாத்தா.
“உங்களிடம் நல்ல யோசனை இருந்தாலும் சொல்லுங்க, நாம கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.’’
“என்னிடம் ஒரு யோசனை உள்ளது சொல்லட்டுமா குரங்குத் தாத்தா’’ என கையை தூக்கியது குட்டிக் குரங்கு.
“ஓ… சொல்லலாமே, இங்கு எல்லோருக்கும் சம வாய்ப்பு உள்ளது.’’
“எனக்கு என்ன தோனுதுன்னா, நாம எல்லோரும் இங்கிருந்து வேற காட்டுக்குப் போயி, அங்கேயும் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திப்பதை விட பேசாம நாமலே இயற்கை முறையில நமக்கு வேண்டிய உணவு தானியங்களை உற்பத்தி செய்யலாமே! என்றது.’’
குட்டிக் குரங்கு சொன்னதைக் கேட்டதும் மைதானத்தில் இருந்த அனைவரும் பலமாகச் சிரித்துவிட்டனர்.
“விவசாயமா? நாமலா?’’ என மறுபடியும் சிரிக்கத் தொடங்கினர்.
ஆழ்ந்த யோசனையில் இருந்த குரங்குத் தாத்தா அனைவரையும் அமைதிப் படுத்தி “குட்டிக் குரங்கு சொல்லறதும் நல்ல யோசனையாத்தான் இருக்கு, நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது. நாம அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக இதைச் செய்து முடிக்கலாம். இதைவிட்டா நமக்கு வேற எந்த வழியும் இல்லை. நமது அடுத்த தலைமுறையைக் காப்பது நமது கடமை.’’
முதலில் ‘நம்மலால இது எப்படி முடியும்’ எனத் தயங்கியவை, ஒவ்வொரு விலங்கா, பறவையா தலையை ஆட்டி ஒப்புதல் சொல்ல, முடிவில் எல்லாரும் இந்த யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திலேயே யார் யாருக்கு என்னென்ன வேலைகள் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு வேறெங்கும் உணவு தேடிப் போகாமல் அங்குள்ள பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழ்வதென முடிவெடுக்கப்பட்டது.
மறுநாள் காலை புது விடியலாக இருந்தது, அவற்றுக்கு! கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதைப் போல் அங்கிருந்த மரத்தை முறித்து கலப்பை போல் செய்து அந்த மைதானத்தை உழத் தொடங்கின யானைகள்.
யானைகள் உழுவதற்குள் அங்கிருந்த வேப்பந்தழைகளையும், பழங்களையும் கொண்டு வந்து அடி உரமாகப் போட்டன குரங்குகள்.
ஒரு வழியாக நிலத்தைப் பண்படுத்தி உழுது முடித்துவிட்டன. இனி விதைக்க வேண்டும்.
அடுத்த நாள் விடியக் காலையில் பக்கத்துக் காட்டில் அப்போதுதான் விளைந்திருந்த சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்றவற்றை மயில்கள் உள்ளிட்ட பறவைகள் தங்களின் வாயில் கொண்டுவந்து மய்தானக் காட்டில் தூவி விட்டன.
ஒரு வழியாக மய்தானம் முழுக்க விதைகளைத் தூவி விட்டன பறவைகள். அடுத்து விதைகள் முளைக்கத் தண்ணீர் வேண்டுமே! அதற்கும் யோசனை இருந்தது அவற்றிடம்.
யானைகள் கூட்டம் கூட்டமாகச் சென்று பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த அருவியிலிருந்து தண்ணீரைத் தங்களின் தும்பிக்கையால் கொண்டு வந்து ஊற்றின.
ஒவ்வொரு நாளும் ஒரு யானைக் கூட்டம் என முறை வைத்து தினந்தோறும் யானைகள் தண்ணீர் ஊற்றத் தொடங்கின.
விதைகள் எல்லாம் மெல்லத் துளிர்விடத் தொடங்கின. அங்கிருந்த விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. ஏதோ பெரிதாக ஒன்றைச் சாதித்ததைப் போன்று துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டன.
ஏற்கெனவே கொக்குகள் மண்புழுக்களைக் கொண்டு வந்து போட்டதனால், பயிர்களின் வேர்கள் நன்கு மண்ணில் சென்று வேகமாகப் பயிர்கள் வளர்ந்தன.
பூச்சிக் கொல்லி மருந்துகள் எதுவும் அடிக்காததால், பயிர்களின் மேல் சிலந்திகள் வலைகளைப்பின்னின. அங்கு வரும் பூச்சிகள் வலையில் மாட்டி சிலந்திக்கு உணவாகின. இதனால் பயிர்களுக்குப் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பும் குறைந்தது.
நாள்கள் செல்லச் செல்ல பயிர்கள் எல்லாம் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுத்தன. அங்கிருந்த பறவைகள் எல்லாம் இயற்கைமுறையில் விளைந்த உணவுகளை உண்டு அதே காட்டில் ஆனந்தமாக வாழ்ந்தன. பக்கத்துக் காட்டில் உள்ள பறவைகளும் மகிழ வனத்திலேயே தங்களுக்கான இரையைத் தேடிக்கொண்டன. இதனால் அங்குள்ள பறவைகளும், விலங்குகளும் எந்த நோயும் இன்றி நீண்ட நாள்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தன.
என்ன குழந்தைகளே, அதிகம் நச்சுத் தன்மையுள்ள உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் தவிர்த்து, கவனமாக பாதுக்காப்பான விவசாயம் செய்வோமா?