லண்டன் போலாமா பேருந்தில்?
அன்புப் பிஞ்சுகளே…. சாலை வழியாக சாகசப் பயணம் போலாமா? மலையேறுதல், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், என்று நிறைய சாகசச் செயல்கள் (Adventures) கேள்விப்பட்டு இருப்பீங்க. சாலைவழிப் பேருந்து பயணத்தில் சாகசம் இருக்க முடியுமா? இருக்குதே! ஹரியானா மாநிலத்தில் குரூராம் பகுதியைச் சேர்ந்த நிறுவனம்தான் அட்வென்ச்சர்ஸ் ஓவர் லேண்ட் (Adventures Overland) சாலை வழியான சாகசப்பயணங்களுக்காகவே தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். உலக அளவில் பல சாகசங்களைச் செய்து வருகிறது 2010ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக்காங்க. அது மட்டும் இல்லை; பூமியில் அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் பயணம் செய்து 75 நாடுகளில் சாகசப் பயணங்களை நிகழ்த்தி 16 உலக சாதனைகளையும் படைத்துள்ளது இந்த நிறுவனம்.
அடுத்த சாகசப் பயணம் என்ன தெரியுமா? டெல்லியில் லண்டனுக்குப் பேருந்து பயணம் என்ற ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். “பஸ் டு லண்டன்’’ (லண்டனுக்குப் பேருந்து) என்ற பெயரும் அந்தப் பேருந்துக்கு வச்சிருக்காங்க. டெல்லியில் தொடங்கி லண்டனில் முடியும் முதல் பேருந்துப் பயணம் இது தான். எந்தெந்த நாட்டு வழியா போகப் போறாங்கனு தானே கேட்கறீங்க? 18 நாடுகளைக் கடந்து போகுது ‘பஸ் டு லண்டன்’, மொத்த பயணம் 70 நாள்கள். மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கடந்து லண்டன் போறாங்க. இருபது நபர்கள் மட்டும் பயணம் விதமாக 20 உயர்தர இருக்கைகளோடு பேருந்தை வடிவமைச் சிருகாங்களாம். வேற என்ன சொல்றாங்க கேளுங்க!
இந்தப் பயணிகளுடன் ஒரு ஓட்டுநர், ஓர் உதவி ஓட்டுநர், ஒரு வழிகாட்டி, உதவியாளர்கள் பயணம் செய்வார்கள். ஒவ்வொரு பயண இடைவெளியிலும் சுற்றுலா வழிகாட்டிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். பயணிகளுக்கான விசாவை நிறுவனமே பெற்றுத் தந்துவிடும். நான்கு கட்டங்களாக இந்தச் சுற்றுலா பிரிக்கப்பட்டுள்ளது. “சரி இதெல்லாம் இருக்கட்டும் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்று தானே கேக்குறீங்க? சொல்றேன் அதிகமில்லை வெறும் 15 லட்சம் ரூபாய்தான்!
டெல்லியில் இருந்து லண்டன் வரை 70 நாள் பயணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நிறுவனமே வழங்கும். நான்கு அல்லது அய்ந்து நட்சத்திர விடுதிகளில் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள். அனைத்து நாடுகளிலும் இந்திய உணவே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யோசனையைச் சொல்லி நடைமுறைப்படுத்த இருப்பவர் அட்வென்சர்ஸ் ஓவர் லேண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் துஷர் அகர்வால்.
2013-14 ஆம் ஆண்டுகளில் துஷர் அகர்வால் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் மதன் இருவரும் உலகம் முழுக்க 90,000 கிலோ மீட்டர் தரை வழியாக பயணித்து 50 நாடுகளைச் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
2017-18 ஆம் ஆண்டு 13 கார்களில் 27 நபர்களோடு இந்தியாவிலிருந்து 18 நாடுகள் வழியாக லண்டன் சென்றுள்ளனர். தரைப் பயணத்தில் பலருக்கும் இருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியானாலும் வரும் 2021 மே மாதம்தான் பயணம் தொடங்க உள்ளது.
என்ன பிஞ்சுகளே… நல்ல முயற்சி தானே! ஆனா இதற்காக அப்பா அம்மாவைக் கேட்டு நச்சரிக்க முடியாதில்லையா? அப்போ நாம் அவசியம் இப்படி பயணம் போகலாம்.