பாம்புப் புற்றா கரையான் புற்றா?
மண் புற்றுகளை எங்காவது பார்த்தால் அதனைப் பாம்புப் புற்று என்கிறார்கள். பாம்புகள் புற்றுகளில் வாழ்வதாக நினைக்கிறார்கள். உடனே அங்கே புற்று நாகாத்தம்மா கோயில் உருவாகிவிடுகிறது. மூடநம்பிக்கையாளர்கள் அங்கு குவிந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. பின்பு எதற்காக பாம்புகள் புற்றுக்குள் நுழைந்து வெளியில் வருகின்றன என்ற கேள்வி எழலாம்.
புற்றுகள் கரையான்களால் உருவாக்கப்படுபவை. கரையான்கள் கோடிக்கணக்கான முட்டைகளையிட்டு, தன் இனத்தைப் பெருக்கும் இயல்புடையவை. தாய்க் கரையான் இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அது, கொழு கொழுவென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகப் பெரிதாக இருக்கும்.
பாம்புக்கு மிகப் பிடித்தமான உணவுகளுள் ஒன்றே இந்தத் தாய்க் கரையான். அதனை உண்பதற்காவே பாம்பு புற்றுக்குள் சென்று வருகிறது. கரையான் புற்றைத்தான் பாம்புப் புற்று என்று தவறாக எண்ணிக் கொண்டு, அதற்குள் பாலையும் ஊற்றி பூஜை செய்து வருகின்றனர் அறியாத நம் மக்கள்.
மேலும், பாம்பு பாலை நக்கியோ உறிஞ்சியோ குடிப்பதும் கிடையாது. ஏனென்றால், பாம்பின் நாக்கு பிளவுபட்டிருக்கும். இதனால், பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க முடியாது. தான் பிடிக்கும் இரையைக் கடித்துத் துண்டாக்கிக்கூடச் சாப்பிடாமல் அப்படியே விழுங்கிவிடக் கூடியது பாம்பு. அந்த இரையிலிருந்தே தேவையான தண்ணீர் பாம்புக்குக் கிடைத்துவிடுவதால் தனியாக எதையும் அருந்துவதுமில்லை. பாம்புக்கு மேல் இமையும் கிடையாது. காதும் கிடையாது. நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே அருகில் வரும் எதனையும் உணர்ந்துகொள்கிறது. மகுடியின் இசையைக் கேட்டு பாம்பு ஆடுவதில்லை. பாம்பாட்டியின் உடலசைவிற்கு ஏற்பத்தான் ஆடுகிறது. இதுதான் உண்மை. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பழமொழியை நினைவு கூறலாம். நம் கிராமங்களில், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டதைப் போல என்று கூறுவார்கள். இதிலிருந்தே தெரிகிறதே. கரையான்தான் புற்றைக் கட்டுகிறது என்று.