வானவில்லின் வண்ண மகள்
விழியன்
அன்பாவுக்கு ஏழு வயது. அவள் வீட்டில் எல்லா வசதியும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால் அவள் எதையுமே கேட்டதில்லை. ஆமாம், அவளுக்கும் எதுவும் கேட்பது இல்லை. அவள் ஒரு மாற்றுத்திறனாளிக் குழந்தை. மிகக்குறைவாகவே கேட்கும், மிகச்சின்ன ஒலி மட்டும் எழுப்புவாள். அன்பாவின் பெற்றோருக்கு அவளின் இந்தக் குறைகூட பெரியதாகத் தெரியவில்லை. அன்பா இதுவரையில் சிரித்ததே இல்லை. உலகில் இருக்கும் எல்லாக் கோமாளிகளையும் காட்டிவிட்டார்கள். அவள் அப்பா அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டுவார். அவளுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவனும் கோமாளித்தனங்களை எல்லாம் செய்வான். ஆனால், அன்பா சிரித்ததே இல்லை. என்றைக்காவது அன்பா சிரிப்பாள் என்று ஆழமாக அவள் வீட்டில் நம்பினார்கள். ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன.
அன்று சனிக்கிழமை. வழக்கமாக ஏழு மணிக்கு எழும் அன்பா அன்றைய தினம் அய்ந்து மணிக்கே எழுந்துவிட்டாள். வீட்டில் யாரும் எழவில்லை. சன்னலுக்கு வெளியே இருக்கும் விடியலைப் பார்க்கத் துவங்கினாள். அவளுக்கு மெல்ல மெல்ல இருள் விலகி வெளிச்சம் வருவது பிடித்திருந்தது. திடீரென்று அவளுக்கு ஒரு குரல் கேட்டது. இதுவரையில் அவளுக்கு அவ்வளவு சத்தமாக எதுவுமே கேட்டதில்லை. அது வீட்டிற்கு வெளியே இருந்து கேட்டது. அது சத்தம் அல்ல ஓர் இனிமையான குரல் தான். மனிதர்களின் குரல் அல்ல. பேச்சு மொழியும் அல்ல. அது வேறு ஒரு குரல். அது வரும் திசையினை நோக்கி ஓடினாள் அன்பா. வாசலுக்கு ஓடினாள். அங்கே எதுவும் சத்தம் கேட்கவில்லை. தோட்டத்திற்கு ஓடினாள் அங்கிருந்தும் ஒலி வரவில்லை. ஆமாம். மாடியில் இருந்து தான் அந்த ஓசை வந்தது. மாடிப்படி ஏற ஏற அது அதிகமானது. அன்பாவிற்கு நிச்சயமாக அது மாடியில் இருப்பது தெரிந்துவிட்டது.
மொட்டை மாடிக்கு வந்ததும் எல்லா திசையிலும் தேடினாள். அங்கே ஓர் அழகிய வெண்புறா அமர்ந்து இருந்தது. அதன் ஓசைதான் அது. அது ஓசை எழுப்பவில்லை. ஆனால், அதனிடம் இருந்துதான் கேட்டது _ அன்பாவின் காதுக்கு மட்டுமே கேட்ட இசை. சில நிமிடங்கள் அமர்ந்து இருந்த புறா பறந்துவிட்டது. மறு நாளும் அன்பாவுக்கு இந்த ஓசை கேட்டது. விரைவாகவே எழுந்துவிட்டாள். மாடிக்கு ஓடினாள். புறா இருந்தது. நேற்றைய தினத்தினைவிட இன்னும் வெண்மையாக இருந்தது. அன்றைய தினம் தன் அண்ணனிடம் புறா என்ன சாப்பிடும் என்று சைகை மொழியில் கேட்டாள். அண்ணனுக்கு பெரும் மகிழ்ச்சி. தன் தங்கை தன்னிடம் உதவி கேட்டிருக்கின்றாள் என்று அவனுக்கு உற்சாகம் தாளவில்லை. புறாக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தான். அப்போது தான் தன் அண்ணனின் கண்களை நேரிடையாகப் பார்க்கின்றாள் அன்பா. அம்மாவிடம் தானியங்களை வாங்கி ஒரு குட்டிப் பெட்டியில் போட்டுக்கொண்டாள். வீட்டில் அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
மறுநாளில் இருந்து அதே சமயம் மாடிக்குச் சென்றுவிடுவாள். புறா பறந்து வரும். தானியங்களை உண்ணும். சில நிமிடங்களில் பறந்துவிடும். இது சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நிகழ்ந்தது. அன்பாவுக்கு இது அன்றாட வேலையாகிவிட்டது.
புறாவிற்கு ஒரு பாத்திரத்தையும் அவளே வடிவமைத்தாள். தண்ணீர் பருக ஒரு பத்திரத்தையும் ஏற்பாடு செய்தாள். இங்கேயே இரு புறா என்று மனதில் கேட்டாள் அன்பா. ஆனால் அவள் கேட்ட மறுநாளில் இருந்து அன்பாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் புறா வரவே இல்லை. ஒரு நாள் காலை முதல் இரவு வரையில் மொட்டை மாடியிலேயே இருந்தாள். புறா வரவேயில்லை. அந்த ஓசையும் கேட்கவில்லை.
அன்று தான் முதன்முதலாக அழுதாள் அன்பா. அன்பா இதுவரையில் சிரித்ததும் இல்லை அழுததும் இல்லை. ஓவென்று அழுதாள். தன் மகள் அழுகின்றாளே என்று வருந்தவா அல்லது ஓர் உணர்ச்சியைக் காட்டுகின்றாளே என்று மகிழவா என்று தெரியாமல் அவளை வாரி அணைத்தனர் குடும்பத்தினர். அழுது அழுது நடு இரவில்தான் உறங்கினாள் அன்பா.
விடியற்காலையில் அந்த ஓசை கேட்டது. ஆமாம் அதே ஓசை தான். கட்டிலில் இருந்து ஓடினாள் அன்பா. அவளுடைய வெண்புறா அங்கே அவளுக்காகக் காத்திருந்தது. சின்ன மாற்றத்துடன் இருந்து புறா. அன்று புறாவின் நிறம் ஊதா நிறத்தில் இருந்தது. ஆனால் அன்பாவுக்கு அது தன்னுடைய புறா என்று நன்றாகவே தெரிந்தது. அதே போல சிறிது நேரத்தில் பறந்துவிட்டது. மறுநாள் வந்தபோது அது கருநீல நிறத்தில் இருந்தது. அடுத்த நாள் நீலம். அடுத்து பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று மாறியது. எட்டாவது நாள் மீண்டும் வரவில்லை. மீண்டும் புறா வரும் என உறுதியாக நம்பினாள் அன்பா.
ஒரு நாள் விடியலில் அதே ஓசை கேட்டது. அன்பாவுக்கு இன்ப அதிர்ச்சி. புறா வந்திருந்தது. ஆனால், அது யானையின் அளவுக்கு பெரியதாக இருந்தது. வா வந்து ஏறிக்கொள் என்பது போன்ற சைகை செய்தது புறா. எதுவும் யோசிக்காமல் அன்பா ஏறிக்கொண்டாள். அது வானத்தில் சிறகடித்துப் பறந்தது. வெகு தூரம் பறந்தது. அங்கே தூரத்தில் வானவில் தெரிந்தது. அந்த ஏழு வண்ணங்கள் வானவில்லின் வண்ணங்கள் என்பதை அன்பா புரிந்துகொண்டாள்.
“நான் வானவில்லின் மகள்’’ என்றது புறா.
உயர உயரப் பறந்து வானவில்லின் ஆரம்பத்திற்கு சென்றது புறா. அங்கே வானவில்லின் உச்சியில் அன்பாவை அமர வைத்தது புறா. சர்ர்ர்ர்ர்…. என்று வழுக்கி வானவில்லின் வளைவோடு சறுக்கினாள் அன்பா. அங்கிருந்து உலகின் எல்லா அதிசயங்களையும் பார்த்தாள் அன்பா. மலை, காடு, ஆறு, கடல், மழை, சூரியன், பறவைகள், விலங்குகள் என அனைத்தையும் பார்த்தாள் அன்பா. வானவில் முடியும் இடத்தில் தக்கெனப் பிடித்துக்கொண்டது புறா. அன்பா மிக மிக உற்சாகம் அடைந்தாள்.
அன்பா சிரித்தாள். அன்றிரவு பூமியெங்கும் தூறல் பொழிந்தது.