சர் ஸ்டாம்போர்டு ரஃபேல்சும், தந்தை பெரியாரும்
சிங்கப்பூர் விழாவில் ஒரு பெரியார் பிஞ்சு
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநா விழா பேச்சுப் போட்டிகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. இதில் சிங்கப்பூரின் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த உயர்நிலை
1, 2 பிரிவுகளில் படிக்கும் குழந்தைகள் பெருமளவில் பங்கேற்றனர். சிங்கப்பூரில் இது தேர்வு நேரமாக இருந்தாலும் ஆசிரியர்களின் உதவியும், மாணவர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்தது.
இதன் பிறகு, 27.09.2020 ஞாயிறு அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற பெரியார் பிறந்தநாள்விழாவில் ஆசிரியர் தாத்தா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேற்கண்ட போட்டியில் சிறப்பாகப் பங்கேற்ற, சீடான் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 2-இல் படிக்கும் பாபு நேகா, இவ் விழாவில் உரையாற்றினார்.
தந்தை பெரியாரின் சிறப்புகளை மிக அழகான தமிழில் எடுத்துரைத்தார். திருவள்ளுவருக்குப் பிறகு நமக்குக் கிடைத்த பேரறிவாளர் பெரியார் என்று குறிப்பிட்டுக் காட்டினார்.
சர் ஸ்டாம்போர்டு ரஃபேல்ஸ், சிங்கப்பூர் தீவு சிறந்த துறைமுகமாகத் திகழும் என்று கண்டறிந்து, பகுத்தாய்ந்து அதை உருவாக்கியதைப் போல், நாமும் பகுத்தாய்ந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். என்றார்.
பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பெரியார் பரப்பியதன் முக்கியத்துவத்தையும், கல்வித் துறையில் சிங்கப்பூர் அரசு அதிக கவனமாக இருப்பதையும் ஒப்பிட்டு, இன்றைய சமூக ஊடகங்களில் வருபவற்றையும் நாம் பகுத்தாய்ந்து ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் முன்வைத்தார் பாபு நேகா. ஆசிரியர் தாத்தாவின் பாராட்டையும் பெற்றார் என்பது கூடுதல் சிறப்பு!