சிறுவர் கதை : எப்படி குளிர்விப்பாய்?
விஜய் பாஸ்கர் விஜய்
இரும்புக் கொல்லர் ஒருவர், கம்பியைப் பழுக்க வைத்து அதை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. மெல்ல அழும் சத்தம்.
அவர் வீட்டில் யாரும் இப்படி மெல்ல அழுவது கிடையாது. மனதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே வாரி இறைத்து அழுவதுதான் அவர் குடும்பத்தாரின் பழக்கம். இப்படி நாசூக்காக யாரும் அழ மாட்டார்களே என்று கொல்லருக்குக் குழப்பம்.
இரும்பு அடிப்பதை நிறுத்திவிட்டு, அழுகை ஓசை கேட்கும் இடத்தை நோக்கி நடந்தார். இரும்படிக்கும் ஓசையைக் கேட்டுக் கேட்டு அவர் காது மந்தமாக இருந்தாலும் அந்த அழுகையில் இருக்கும் உணர்வை மனதால் கேட்டு நடந்தார்; கண்டுபிடித்துவிட்டார்.
அங்கே பட்டுடை அணிந்த பதினைந்து வயது சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். அச்சிறுவனை எங்கோ பார்த்தது மாதிரி இருந்தது. ஆனால் பிடிபடவில்லை.
“தம்பி உன்னைப் பார்த்தால் பணக்கார வீட்டுச் சிறுவன் போலிருக்கிறது. உனக்கென்ன பிரச்சனை? ஏன் அழுகிறாய்?’’
“…………………………..’’
“பதில் சொல்லேன். உனக்குத் தெரியுமா? அழுகை என்பது வெறுமனே உணர்வை வெளியேற்ற உள்ள வழி மட்டுமன்று. அது உணர்வை வெளிப்படுத்தி காரியம் சாதிக்கும் நல்ல உத்தியும்தான். உன் அழுகைக்கான காரணத்தை நீ சொல் நான் தீர்த்து வைக்கிறேன்’’
“நான் இந்த நாட்டின் இளவரசன்’’
“ஆஹா, அதானே பார்த்தேன்! உன் முகத்தின் சாயலில் அதை உணர்ந்தேன். நீ இளவரசன்தான் சொல்!’’
“இளவரசன் என்றால் நீங்கள் மதிக்க மாட்டீர்களா?’’
“வயதில் சிறியவன்தானே நீ, உன்னை ஏன் நான் வாங்க போங்க என்று அழைக்க வேண்டும்?’’
“நான் இந்நாட்டின் வருங்கால அரசன் அல்லவா?’’
“ஆனால் வயதில் என்னை விட சிறியவன் அல்லவா?’’
“உம்மை மாற்ற என்னால் முடியாது. என் பிரச்சினையே வேறு’’
“உன் பிரச்சனை என்ன என்று சொல்லு. நான் தீர்த்து வைக்கிறேன். நான் இரும்பையே வளைக்கிறவன். பிரச்சனையை எல்லாம் எளிதில் வளைத்துத் தீர்ப்பேன்’’
“சரி சொல்கிறேன். என் அம்மா என்னைத் திட்டி விட்டார்கள். நான் மன்னிப்புக் கேட்டாலும் மன்னிக்காமல் திட்டுகிறார்கள்’’
“அம்மா ஏன் குழந்தையை சும்மா திட்டப்போகிறார்கள்? நீ உன் அம்மாவை என்ன சொன்னாய், என்ன சேட்டை செய்தாய்?’’
“நான் ஒன்றும் செய்யவில்லை’’
“என் இரும்படிக்கும் வேலையை விட்டுவிட்டு உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன். ஆனால் நீ உண்மையை மறைக்கிறாயோ?’’
“சரி சொல்கிறேன் என் அம்மாவிடம் பேச்சுவாக்கில்…’’
“பேச்சு வாக்கில்…?’’
“அம்மா நீங்கள் என்ன, போருக்கா வருகிறீர்கள்? உங்கள் வேலை அந்தப்புரத்தில் இருந்து கொண்டு பட்டுடை உடுத்திக் கொண்டு, நன்றாக உணவு உண்டு கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதுதானே! என்று கேட்டேன்’’
“அப்படியா கேட்டாய்?’’
“ஆம். அதற்குப் போய் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்’’
“ஒஹோ!’’
“என்ன சமாதானம் செய்தாலும் அம்மா சமாதானம் ஆகவில்லை’’
“சரி”
“மூன்று நாள்களாக என்னைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து விழுந்து கொண்டே இருக்கிறார்கள்’’
“ம்ம்ம்’’
“நான் அவர்கள் செல்லமகன். நான் மன்னிப்புக் கேட்டாலும் ஏன் அம்மா சமாதானம் ஆகவில்லை?’’
“சரி, அதுகிடக்கட்டும். நீ வா வீட்டுக்குப் போகலாம். அங்கே கொஞ்சம் பழங்கள் வைத்திருக்கிறேன். அதை சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’’
“ஆம், ஆம். சரி எனக்கும் பசிக்கிறது. போகலாம்’’ போனார்கள்.
“என்ன உங்கள் வீடு சீக்கிரம் வந்து விட்டது’’
“ஆம் பக்கத்தில்தான். நான் உள்ளே சென்று பழங்கள் வெட்டி வருகிறேன். இளவரசனே, நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்’’
“செய்கிறேன்’’
“நான் பழம் வெட்டி எடுத்து வருவதற்குள். இதோ இந்த பழுத்த இரும்புக்கம்பியை வாயால் ஊதி ஊதி குளிர்வித்து விடு’’ என்று சொல்லி குடிசைக்குள் சென்று விட்டார்.
இளவரசன் முழித்தான்.
அய்ந்து நிமிடம் கழித்து மாம்பழங்களைத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு வந்தார் கொல்லர். இங்கே இளவரசன் முழித்துக் கொண்டிருந்தான்.
“என்ன, இரும்பை ஊதிக் குளிர்வித்தாயா?’’
“அது எப்படி அவ்வளவு பழுக்கச் சூடு செய்த இரும்பை ஊதி ஊதிக் குளிர்விக்க முடியும்?’’
“அது எப்படி அவ்வளவு அதிகமாகக் காயப்படுத்தின அம்மாவின் மனதை “மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்று மட்டும் கேட்டு ஆற்றிவிட முடியும்’’ என்றார் பொற்கொல்லர்.
இளவரசன் சடாரென்று திரும்பினான். பொற்கொல்லர் தொடர்ந்தார்.
“நீ வார்த்தையால் கொடுத்த காயம் உன் அம்மா மனதில் இருந்து ஆறுவதற்கான கால இடைவெளியை நீ கொடுக்க வேண்டுமல்லவா?’’
“ஆம்’’
“நன்றாக காயப்படுத்திவிட்டு. உடனே மன்னிப்பு கேட்டு, உடனே நீ காயப்படுத்தின ஆள் மன்னித்து விட வேண்டும் என்று நினைப்பது ஒரு வன்முறைதானே’’
“ஆம்’’
“இப்போது உன் பிரச்சனை தீர்ந்ததா!’’
“தீர்த்து விடுவேன்’’ என்று இளவரசன் எழுந்து ஓடினான். கொல்லர் அவனைத் துரத்தி ஓடி நிறுத்தினார்.
“இரு சிறுவனே’’
“என்ன?’’
“நீ அந்த இரும்பை எப்படி எளிதில் குளிர்விப்பாய்’’
“கொஞ்சம் நீரை ஊற்றினால் குளிர்ந்து விடும்’’
“அது போல உன் அம்மாவை உன் வார்த்தை ஏன் காயப்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்! அப்பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் போதுதான் உன்னால் உன் அம்மா மனதைக் குளிர்விக்கும் நீரை ஊற்ற முடியும்’’
“அம்மாவின் மனதை அவ்வார்த்தைகள் அவ்வளவு காயப்படுத்தியது என்று எப்படிப் புரிந்து கொள்வது’’
“இதோ இந்தப் புத்தகத்தைப் படி! உன் வார்த்தையின் கொடூரம் புரியும்’’
“இது என்ன புத்தகம் அய்யா’’
“இது பெரியார் எழுதின ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் என்றார் கொல்லர்.’’
இளவரசன் பெரியாரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் அம்மாவைக் காண ஓடினான்.