காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா?
சிகரம்
மின்னல் மின்னி இடி இடிக்கும்போது “அர்ஜூனா, அர்ஜூனா” என்று சொன்னால் இடி தாக்காது என்று மக்கள் நம்பி, அவ்வாறே சொல்கின்றனர். பிள்ளைகளையும் அப்படியே சொல்லச் சொல்கின்றனர்.
இடி என்பது ஒரு மின் தாக்குதல். அப்படியிருக்க அர்ஜூனா என்று சொன்னால் அது எப்படித் தாக்காமல் இருக்கும்? அர்ஜூனா என்று சொல்லிககொண்டு மின்சாரம் செல்லும் கம்பியைத் தொட்டால் ‘ஷாக்’ அடிக்காமல் இருக்குமா? சிந்திக்க வேண்டும்.
இடி என்பது என்ன? அறிவியல் ரீதியான விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் இந்த மூடநம்பிக்கை அறவே விலகும்.
இடி விழுதல் என்பது சரியா?
படித்தவர்கள்கூட இடி விழும் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
மேகம் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும்போது, அதில் ஒரு பகுதி சிதறிவிழும் என்றும் அதுவே இடி என்றும் நம்புகின்றனர். அவ்வாறு விழும் இடி வாழை மரத்தில் விழுந்தால் தங்கமாக அல்லது இரும்பாக மாறும் என்றும் நம்புகின்றனர். இவை முற்றிலும் தவறான நம்பிக்கைகள்; உண்மைக்கு மாறான கருத்துக்கள்.
இடி எப்படி உருவாகிறது?
மின்னூட்டப்பட்ட நீர்த் திவலையின் தொகுப்புதான் மேகம். மேகத்தின் மேற்பகுதியில் எதிர் மின்னூட்டம் (-) காணப்படும். கீழ்ப்பகுதியில் நேர் மின்னூட்டம் (+) காணப்படும்.
சில நேரங்களில் நேர்மின்னூட்டமும், எதிர் மின்னூட்டமும் கலந்து காணப்படும்.
மேகங்களில் உள்ள நேர்மின்னூட்டங்கள், பூமியில் பாய ஏதாவது ஓர் ஊடகத்தை எதிர்நோக்கியிருக்கும். பொருத்தமான ஊடகம் கிடைத்தவுடன் அதன் வழி பூமியில் பாய்ந்து விடும்.
குறிப்பாக உயரமான மரங்கள், உயரமான கட்டடம் ஆகியவற்றின் வழி, அந்த நேர்மின்னூட்டம் பூமியை வந்தடையும். அப்போது மனிதர்களோ, விலங்குகளோ குறுக்கிட்டால், அவர்கள் அல்லது அவற்றின் வழி அந்த நேர் மின்னூட்டம் கடந்து (பாய்ந்து) பூமியை அடையும். அதையே இடிதாக்குதல் என்கிறோம். அதனால்தான் மழைக் காலங்களில் மரத்தடியில் நிற்கக் கூடாது என்கின்றனர்.
அதாவது மின்சாரத் தாக்குதலே இடி, மின்னல் எனப்படுவது ஆகும். மின்சாரத்தில் அகப்பட்டவர் போல இடியில் அகப்பட்டவர் கருகிப் போகிறார்.
ஒரு மேகத்தில் உள்ள மின்னூட்டங்கள் (நேர் (+) அல்லது எதிர் (_) வானத்தில் மிதந்து செல்லும் போது ஒன்றோடொன்று மோதுவதால் ஏற்படும் மின்சாரமே ஒளியாக மின்னல் ஆகும். அப்போது எழும் ஓசையே இடி ஓசை ஆகும்.
இடியினால் ஏற்படும் ஓசை நெட்டலையாகி, அதில் ஏற்படும் குறுக்கும் நெடுக்கும் இவற்றின் விளைவாய் தொடர் இடியோசை ஒளி (Light)யின் வேகம் ஒலி (Sound) யின் வேகத்தை விட அதிகம் என்பதால், நமக்கு முதலில் மின்னல் தெரிகிறது. இடி அதனைத் தொடர்ந்து கேட்கிறது. கேட்கிறது.
இடிதாங்கி
நேர் மின்னூட்டங்கள் இடிதாங்கியில் உள்ள கூர்முனையில் எதிர் மின்னூட்டங்கள் காற்றில் கசிந்து மேகத்தில் உள்ள நேர் மின்னூட்டத்துடன் இணைந்து சமநிலைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இடியின் பாதிப்பு (மின்தாக்குதலின் பாதிப்பு) கட்டடத்திற்கு வராது.
நேர் மின்னூட்டம் செல்லும்போது, அவை ஒன்று சேர்ந்து மின்னழுத்தம் அதிகமாகி கட்டடத்தையே இடிக்கின்றது. இடிதாங்கி இருந்தால் இந்த அழுத்தம் மேற்கண்டவாறு சமநிலைப் படுத்தப்பட்டு இடியின் தாக்குதல் தவிர்க்கப் படுகிறது. கட்டடம் பாதுகாக்கப்படுகிறது.
ஆக, இடி, மின்னல் என்பது இயற்கையில் வெளிப்பட்டு வரும் மின்சாரத் தாக்குதல் ஆகும். மின்சாரத்திடம் நாம் எந்த அளவிற்கு எச்சரிக்சையாக இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இடியிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மழைக் காலங்களில் எச்காரணத்தைக் கொண்டும் மரத்தடியில் நிற்கக் கூடாது.
மழைக் காலங்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் ஆன்டனா, பலூன், மின்சாரப் பிளக் போன்றவற்றைப் பிடுங்கிவிட வேண்டும். முடிந்த மட்டும் மின்னல், இடியின்போது தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி மின்சாரப் பிளக்கை எடுத்து விட வேண்டும். இரவு படுக்கும்முன் இரண்டையும் பிடுங்கி விடவேண்டும்.
உண்மை இப்படியிருக்க ‘அர்ஜூனா’ என்று சொல்லும் வழக்கம் எப்படி வந்தது?
மழைத் துளிகளில் சூரிய ஒளி ஊடுருவிச் செல்லும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு வானத்தில் வானவில் தோன்றுகிறது. நாம் வாயில் தண்ணீரை வைத்துக்கொண்டு காலை அல்லது மாலை நேரத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று வாயில் உள்ள நீரை ‘ப்பூ’ என்று ஊதினால் அதில் நிறப்பிரிகை தோன்றுவதை யாரும் காணலாம். சூரியனுக்கு எதிர்திசையில்தான் எப்போதும் வானவில் தோன்றும்.
இந்த அறிவியல் உண்மை புரியாமல், வில்லுக்கு அதிபதி அர்ஜூனன். அவன்தான் வானவில்லைப் போடுகிறான் (வரைகிறான்) என்று மூடத்தனமாக நம்பியதும், இடி என்பது அர்ஜூனன் வில்லை வளைப்பதால் ஏற்படும் ஓசை என்று நம்பியதும்-தான், இடிஇடிக்கும்போது அர்ஜூனா என்றால் இடி தாக்காது என்ற நம்பிக்கை ஏற்படக் காரணம்.
அர்ஜூனன் வானத்தில் வில் போடுவதும் இல்லை. வில்லை வளைப்பதும் இல்லை; அர்ஜூனன் உயிருடனும் இல்லை. எனவே, அர்ஜூனன் என்று சொன்னாலும் இடி தாக்கவே செய்யும்.
இடி, மின்னல் தாக்காமல் இருக்க நாம் வீட்டிற்குள் செல்ல வேண்டும். மரத்தடியில் வெட்டவெளியில் செல்லவோ, நிற்கவோ கூடாது. அதுவே இடி மின்னல் தாக்காமல் இருக்க வழி!