கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு!
ஓவியம், கதை:மு.கலைவாணன்
மாணிக்கமும், கோமாளி மாமாவும் தோட்டத்திற்குள் ஒன்றாக வந்தனர். கதை சொல்லும் மரத்தடியில் மல்லிகா மட்டும் வருத்தத்துடன் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள்.
அதைப் பார்த்த கோமாளி “என்ன மல்லிகா நீ மட்டுந்தான் இருக்கே… அதுவும் வருத்தமா இருக்கே” என்றார்.
“செல்வம் புறப்பட்டு வந்துட்டதா அவங்க அம்மா சொன்னாங்க… இங்கே காணோமே… செல்வம் வரலியா?… எங்கே போனான்?’’ என்று கேட்டான் மாணிக்கம்.
“கோமாளி மாமா.. நான்தான் முதல்ல வந்தேன். அடுத்து செல்வம் வந்தான். நான் அவன்கிட்டே போனமுறை மாணிக்கம் வகுப்புத் தலைவனானதுக்கு எல்லாருக்கும் இனிப்பு கொடுத்தான். இந்த முறை நீ ஏதாவது கொண்டு வந்திருக்கியான்னு கேட்டேன். இரு… வர்றேன்னு. அந்த மரத்துக்குப் பின்னாடி போயிட்டு வந்து என்கிட்ட ஒரு காகிதப் பொட்டலத்தைக் கொடுத்து நானும் பேச்சுப் போட்டியிலே முதல் பரிசு வாங்குவேன். இந்தா அதுக்கு இனிப்புன்னு… சொன்னான். நானும் ஆசையா பொட்டலத்தைப் பிரிச்சுப் பாத்தா வெறும் கல்லுதான் இருந்தது. நான் ஏமாந்ததைப் பாத்து அவன் சிரிச்சான். சீ போடா… என்னை ஏமாத்துறியான்னு கோவமா திட்டிப்புட்டேன். அதுக்கு கோவிச்சுக்கிட்டு, அதோ அங்கே போயி உக்காந்திருக்கான் பாருங்க” என்று எதிர்த்திசையில் கை நீட்டினாள் மல்லிகா.
அங்கே செல்வம் ஒரு செடியின் அருகில் சோகமாக அமர்ந்திருந்ததை மாணிக்கமும் கோமாளி மாமாவும் பார்த்தனர்.
கோமாளி சத்தமாக “செல்வம்! இங்கே வா…” என அழைக்க தலை கவிழ்ந்தபடி வந்தான் செல்வம்.
“மல்லிகா கேட்டதுக்கு நான் விளையாட்டுக்காக அப்படி செய்தேன். ஆனா, மல்லிகா ரொம்ப கோவமா திட்டுனது மனசுக்கு வருத்தமாப் போச்சு” என்றான் செல்வம்.
“சரி… சரி… எல்லாரும் சமாதானமாகி கதை கேட்போம் வாங்க” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் மாணிக்கம்.
“மாமா… திடீர்னு மல்லிகா அப்படி கேட்டதாலே கல்லைப் பொட்டலம் கட்டிக் கொடுத்தேன். யாருகிட்ட என்ன இருக்கோ அதைத்தானே கொடுக்க முடியும். சரி… என்னை மன்னிச்சிடு மல்லிகா…’’ என்ற தழுதழுத்த குரலில் சொன்னான் செல்வம்.
“அதையெல்லாம் விடு. கோமாளி மாமா சொல்ற கதையைக் கேட்போம்” என சிரித்தபடி சொன்னாள் மல்லிகா.
“உம்… கதைக்குப் போவமா… உங்களை மாதிரி ஒரே வகுப்புல படிக்கிற அமுதா, குமுதான்னு ரெண்டு குழந்தைங்க பக்கத்துப் பக்கத்து வீட்டுலே இருந்தாங்க. அமுதாவும், குமுதாவும் உங்களை மாதிரியே நல்ல நண்பர்கள். அவங்க குடும்பமும் நல்ல நட்பா இருந்தாங்க.
அவங்க ஊர்ல இருக்குற ஒரு பொதுநலச் சங்கம் மகளிர் நாள் விழாவுக்காக பாட்டுப்போட்டி நடத்துனாங்க. அமுதாவும், குமுதாவும் அந்தப் பாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டாங்க. அதுலே அமுதா சிறப்பா பாடி முதல் பரிசு வாங்கிட்டா. குமுதா தோல்வி அடைஞ்சிட்டா.
அதிலே இருந்து குமுதா அமுதாகிட்டப் பேச மாட்டா… அவ வீட்டுக்குப் போகமாட்டா… அமுதாவோட விளையாடுவதையும் நிறுத்திட்டா. இது அமுதாவுக்குப் பெரிய மன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு.
ஒரு நாள் குமுதா வீட்டுல குமுதாவோட அம்மா வீட்டுக் குப்பையை… குப்பைத் தொட்டியிலே கொட்டிட்டு வரச் சொன்னாங்க. குப்பை வாளியைக் கையிலே எடுத்துக்கிட்டு குமுதா வீட்டைவிட்டு வெளியே வந்தா. பக்கத்துலே அமுதா அவங்க வீட்டுக்குள்ள போறதைப் பார்த்தா… உடனே குப்பையைக் குப்பைத் தொட்டியிலெ கொண்டு போய் கொட்டாம அமுதா வீட்டுல கொட்டிடுவோம்னு முடிவு செய்தா. தெருவுல யாரும் இல்லாத நேரமாப் பாத்து குப்பை வாளியில் இருந்த குப்பையை குறுக்குச் சுவருக்கு அடுத்திருந்த அமுதா வீட்டுல கொட்டிட்டு வேகவேகமா வீட்டுக்குள்ள ஓடிட்டா.
கொஞ்ச நேரம் கழிச்சு அமுதா அம்மா வேற எதுக்கோ வெளியே வந்தவங்க, குறுக்குச் சுவர் ஓரமா குப்பை இருக்கிறதைப் பார்த்தாங்க. இங்கே எப்படி குப்பை வந்தது? நாமதான் இந்த இடத்தைச் சுத்தமாப் பெருக்கி வச்சிருக்கமேன்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குள்ள போனாங்க.
“அமுதா… நம்ம வீட்டு சுவர் ஓரமா குப்பை இருக்கே நீ கொட்டுனியான்னு’’… கேட்டாங்க.
“இல்லேம்மா… நான்தான் மாடியில வளக்கிற காய்கறிச் செடிகளுக்கு இயற்கை உரம் வேணுமின்னு வீட்டுப் பின்னாடி குழி தோண்டி குப்பையைச் சேத்து வைக்கிறேனே… நான் ஏன் குப்பையைக் கொட்டப்போறேன்” என்றாள் அமுதா.
“யாரு கொட்டுனான்னு தெரியலியே… ஒருவேளை குமுதா வீட்டிலேயிருந்து யாராவது கொட்டியிருப்பாங்களா…” என்றார் அமுதா அம்மா.
“அம்மா… அதை விடுங்க… யாரு கொட்டுனதுன்னு தெரிஞ்சுக்கிட்டுப் பிறகு கேட்டுக்கலாம்” என்று சமாதானம் சொன்னாள் அமுதா.
குமுதாவோ… அமுதாவின் மேல் உள்ள கோபத்தினால் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குப்பையை அமுதா வீட்டுச் சுவர் ஓரத்திலேயே கொட்டிக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் அமுதா மொட்டை மாடியில் காய்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது குமுதா யாருக்கும் தெரியாமல் குப்பையைக் கொட்டிவிட்டு ஓடுவதைப் பார்த்துவிட்டாள்.
ஒவ்வொரு நாளும் குமுதா கொட்டிய குப்பைகளை அள்ளி, தான் உரம் தயாரிக்க வைத்திருந்த குழியில் போட்டுக் கொண்டிருந்தாள் அமுதா.
ஒரு நாள் காலை குமுதா தூங்கி எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தாள். வாசலில் ஒரு கட்டுக் கீரை, கொஞ்சம் வெண்டைக்காய், கொஞ்சம் கத்தரிக்காய் எல்லாம் இருந்தன.
இவ்வளவு சீக்கிரம் நம் வீட்டில் யாரும் காய்கறி வாங்க மாட்டார்களே… அப்படியே வாங்கினாலும்… எதற்காக வீட்டு வாசலில் வைக்கப் போகிறார்கள் என்று சிந்தித்தபடியே வீட்டுக்குள் போனாள்.
“அம்மா! அம்மா!” என்றாள்.
“என்ன ஆச்சு குமுதா… தூங்கி எழுந்ததும் ஏன் இப்படி சத்தம் போடுறே” என்று கேட்டபடி வந்தாள் குமுதாவின் அம்மா…
“அம்மா! அங்கே பாருங்க நம்ம வீட்டு வாசல்ல கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரைக்கட்டு இதையெல்லாம் யாரோ கொண்டு வந்து வச்சிருக்காங்க. விடிஞ்சும் விடியாம காலங் காத்தால யாருமா இதையெல்லாம் கொண்டு வந்து வச்சிருப்பாங்க” என்று வியப்போடு கேட்டாள் குமுதா.
“தெரியலியே… குமுதா! நம்ம வீட்டு வாசல்ல திடீர்னு எப்படி காய்கறி வந்ததுன்னு புரியலியே… ஆனா… நல்ல காய்கறியா இருக்கு… எடுத்து உள்ளே வை. சமைக்கலாம்…’’ என்றார் குமுதா அம்மா.
மறுநாளும் காலை குமுதா கண் விழித்து வெளியே வந்து பார்த்தால் தக்காளி, முள்ளங்கி, பச்சை மிளகாய் என காய்கறிகள் வீட்டு வாசலில் இருந்தன.
ஆனால், இம்முறை அதில் ஒரு துண்டுச் சீட்டும் இருந்தது.
குமுதா அந்த துண்டுச் சீட்டை எடுத்து பிரித்துப் படித்தாள். அதில் ‘ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதையே கொடுப்பார்கள்’ என எழுதியிருந்தது. அது அமுதாவின் கையெழுத்து என்பது தெரிந்தது. தான் அமுதா வீட்டில் குப்பையைக் கொட்டியதற்கு… அவள் வீட்டில் விளைந்த காய்கறிகளை நமக்குத் தந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள் குமுதா.
அந்த நேரத்தில் அங்கு வந்தார் குமுதா அம்மா. “என்ன குமுதா… ஏதோ கையில சீட்டு வச்சிருக்கே… காய்கறி வச்சவங்க அதுக்கான விலையை அதுல எழுதி வச்சிருக்காங்களா? என்று கேட்டாள்.
“அம்மா” என அழுதபடி தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் குமுதா.
“எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒவ்வொரு நாளும் குப்பையைக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியிலே கொட்டாம… அமுதா மேலே உள்ள கோபத்திலே அவங்க வீட்டுல கொட்டுன… அமுதா அந்தக் குப்பைகளை எல்லாம் தன் வீட்டுல உள்ள உரக் குழியிலே எடுத்துப் போட்டு எருவா மாத்திக்கிட்டா. மாடித் தோட்டத்துல உள்ள செடிகளுக்கு அந்த எருவைப் போட்டு அதுல வளர்ந்த காய்கறிகளைத்தான் உனக்குப் பரிசாகக் கொண்டு வந்து நம்ம வீட்டு வாசல்ல வச்சிட்டுப் போனா அமுதா.’’
பாட்டுப் போட்டியில உன்னால பரிசு வாங்க முடியாததுக்கு காரணம்… அமுதா இல்லே.
அமுதா சிறப்பாகப் பாடி பரிசு வாங்குனதுக்கு நீ பெருமைப்பட்டிருக்கணும். அதை விட்டுட்டு பொறாமைப்பட்டது உன் தவறுதானே? அதுக்காக அவங்க வீட்டுக்குள்ள நம்ம வீட்டு குப்பையைக் கொட்டுனது அதைவிடப் பெரிய தப்பு.
பரிசு வாங்குற அளவுக்கு அமுதா எப்படிப் பாடுனா… அதுக்காக அவ என்ன வழிமுறைகளைக் கடைபிடிச்சான்னு நீ கேட்டுத் தெரிஞ்சுக்கிறதை விட்டுட்டு, அவ மேலே கோபப்பட்டு உன்கிட்ட இருந்த குப்பையைக் கொடுத்தே.
அமுதா அதையும் எருவாக்கி அதன் மூலம் விளைஞ்ச காய்கறிகளை உனக்குக் கொடுத்திருக்கா.
‘ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதையே கொடுப்பார்கள்’ என்ற வாசகத்தைத் துண்டுச் சீட்டுல அமுதாவை எழுதி வைக்கச் சொன்னதே நான்தான். இப்பப் புரிஞ்சுதா.
பொறாமைப்படுறதை விட்டுட்டு அமுதாவோட எப்பவும் அன்பா நட்பா இருக்கிறதுதானே நல்லது. போ… ஓடு… உடனே அமுதாவைப் பாரு” என்றார் குமுதா அம்மா.
தன் தவறை உணர்ந்த குமுதா’ அம்மா அந்தச் சொல்லைச் சொல்லி முடிப்பதற்குள் அமுதா வீட்டை நோக்கி ஓடினாள், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க!
கதை கேட்ட மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் கை கோத்தபடி வீட்டுக்குப் புறப்பட்டனர்.
(கோமாளி மீண்டும் வருவார்)