பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு
ஒரு 11 வயதுச் சிறுவனின் அனுபவம்!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
என் அன்பும் வாழ்த்துகளும்! பள்ளிக்கூடங்கள் திறக்காமல் இருப்பது, வீட்டிலேயே நீண்ட காலம் பள்ளிக்குச் சென்று நண்பர்களோடு கலகலப்பாக உறவாடும் நட்புரிமை காணாமற் போயிருப்பது குறித்து மிக்க வருத்தமாக இருக்கிறீர்கள் என்பது எனக்கு நல்லாவே தெரியும்.
என்ன செய்ய முடியும்? கொரோனா- கொடுந்தொற்று (கோவிட்-19) கொடுமை இன்னமும் ஓயவில்லையே!
ஆந்திராவில் திறந்த பள்ளிகளுக்குச் சென்ற மாணவச் செல்வங்கள் பலர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனரே! அதுபோல் நம்ம ஊர்களும் ஆகக் கூடாதல்லவா? அதனால் தான் சோர்வின்றி, படிப்பது, விளையாடுவது, குடும்பத்தாருடன் கலகலப்பாக எப்போதும் இருப்பது – வீட்டில் இருக்கும்போது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளுவதில் நேரத்தைச் செலவழிப்பது எல்லாம் நல்லது. அவற்றில் ஈடுபடுங்கள்.
இந்த மாதம் டிசம்பர் 24 – நம்ம பெரியார் தாத்தா நினைவு நாள். 95 ஆண்டு நமக்காக வாழ்ந்து நமக்காகவே தனது சொத்து சுகம் எல்லாவற்றையும் தந்த கொடை வள்ளல் அல்லவா பெரியார் தாத்தா? அந்த பகுத்தறிவுப் பகலவனை – நான் உங்களைப் போலவே 11 வயதுச் சிறுவனாக இருந்தபோது 29-7-1944-ல் கடலூர் புதுநகர் (N.T) திருப்பாதிரிப்புலியூரில் பெரியார் தாத்தாவும் மணியம்மா பாட்டியும், தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டிற்கு வந்தபோது ஓர் எளிய சத்திரத்தில்தான் தங்கியிருந்தனர். அப்போது டார்ப்பீடோ ஏ.பி.ஜெனார்த்தனம் எம்.ஏ., என்னை பெரியார் தாத்தாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார்!
எனக்கு சிங்கம் போன்ற அவரை நெருங்கவே பயம். மெதுவாக அருகில் சென்றவுடன் மிகவும் வாஞ்சையுடன் என்னைப் பற்றி அன்பொழுக விசாரித்தார் பெரியார் தாத்தா. பாட்டியும் பக்கத்தில் இருந்தார்! சிறு பிள்ளைகளிடம் கூட பெரியார் தாத்தா எப்போதும் வாஞ்சையுடன் பழகுவார்! எனது படிப்பு, அப்பா, அம்மா பற்றியெல்லாம் விசாரித்தார்.
அவரது கனிவான அந்த அன்பு என் மனதில் மிகப்பெரிய விதையை நட்டுவிட்டது! என்னை அறியாமல் ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதை வார்த்தைகளில் விளக்கிட இப்போது கூட என்னால் முடியாது! எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி! எவரெஸ்ட் சிகரம் ஏறியவன் போல ஒரு குதூகலம் இந்த அரைக்கால் சட்டை மாணவனுக்கு!
அன்று காலை 10 மணிக்கு மாநாடு துவங்கி முத்தய்யா டாக்கீஸ் திரையரங்கில் நடந்தது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், மற்ற தலைவர்களும் மேடையில் இருக்க, என்னை மேசையின் மீது தூக்கி நிறுத்திப் பேசவைத்தனர்.
(அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கடலூர் முதுநகரில், அண்ணாவின் ‘திராவிட நாடு’ வார ஏட்டுக்குப் பண முடிப்பு தந்த பொதுக் கூட்டத்தில், முதல் முதலில் நான் மேடையில் ஏறிப் பேசிய போது அண்ணாவைப் பார்த்தேன். அவர் பேச்சைக் கேட்டேன். சில கருத்துகள் பசுமரத்தாணி போல் பதிந்தும் விட்டன.)
நான் முதன் முதலில் பெரியார் தாத்தாவைப் பார்த்த நிகழ்வு – அதற்குப் பிறகு நடைபெற்றது. பெரியார் தாத்தாவும் பங்கேற்ற இக் கூட்டத்தில் நான் சுமார் 10, 15 நிமிடம் பேசினேன். எழுதிக் கொடுத்ததை வரப்படுத்திப் (மனப்பாடம் செய்து) பேசிய பேச்சுதான்!
பெரியார் தாத்தா பேசுவதற்கு முன் அண்ணா பேசினார். நான் பேசியதைப் பற்றி அண்ணா மிகவும் பாராட்டிப் பேசினார். அதற்கு கூடியிருந்த மக்கள் கைதட்டினர். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. திருஞான சம்பந்தன் கதை போன்றவை தெரியாததால், எல்லா கருத்துகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அந்தப் பாராட்டுரை முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியதாகவே இருந்தது!
அதற்குப் பிறகு, பெரியார் தாத்தா பேசும்போது, திடீரென்று ஒரு சத்தம். “ஏய் ராமசாமி நாயக்கரே பேசாதே – நிறுத்து – சாமி இல்லை என்ற பிரச்சாரத்தை நாங்கள் கேட்கத் தயாராக இல்லை” என்பதான முரட்டுக் குரலில் சத்தம் – ஒரு கதர் ஜிப்பாவாசியிடமிருந்து!
கூடியிருந்த எல்லோரும் ஆவேசமாக திரும்பினர்.
“அமைதியாக இருங்கள். அவருக்கு நான் பதில் சொல்றேன்’ என்று தந்தை பெரியார் அனைவரையும் அடக்கிவிட்டு சிங்கம் கர்ஜிப்பதுபோல சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் பேசி பதில் கூறியது – எனது பிஞ்சு உள்ளத்தில் மிகப் பெரிய வியப்பை மட்டுமல்ல.. துணிச்சலையும் கூட பதிய வைத்துவிட்டது!
எங்கள் ஊரில் நமது இயக்கக் கூட்டங்களில் மேடையை நோக்கி கற்கள் விழுவதைக் கண்டு பயப்படாமல் பதில் சொல்லிப் பேசும் பழக்கம், அதற்கு முன்பே இரண்டொரு தடவை அனுபவம் மூலம் ஏற்பட்டுவிட்ட்து!
எனவே எங்களுக்கு பயம் போய்விட்டது. துணிவு இயல்பாகிவிட்டது! மஞ்சை நகர் மைதானத்தில் மாலையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் – பெரியார் தாத்தா பேசும்போதே கொட்டும் மழை _- மேலே தொடர முடியாத அளவுக்கு!
அதனால் கூட்டத்தை முடித்து, கை ரிக்ஷா வண்டி ஒன்றில் கைப் பெட்டியுடன் பெரியார் தாத்தா ஏற்றப்பட்டு (ஆள் தான் இழுத்துவருவார் அப்போது) கெடிலம் நதி பாலத்தில் வரும்போது திடீரென்று மின்சாரம் இல்லை. சிலர் தண்ணீர் பாம்பை பெரியார் மீது வீச, பாம்பு, பாம்பு என்று கூச்சல். சிறு வெளிச்சம் டார்ச் லைட்டு மூலம் பிறகு பார்த்தோம். தண்ணீர் பாம்புதான்.
பெரியார் தாத்தா அருகில் அவரைச் சுற்றி இளைஞர்கள், மாணவர்கள், தோழர்களுடன் சிறுவனாக நானும் வருகிறேன். திடீரென்று ரிக்ஷா வந்த வழியே சிறிதுதூரம் திரும்பிச் சென்று, பிறகு மீண்டும் திரும்பி எங்களுடன் வந்தது! பெரியார் தாத்தா சென்னைக்குப் போகிற காரணத்தால், திருப்பாதிரிப் புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் புகை வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தார் பிளாட்பாரத்தில்!
அப்போது கைப் பெட்டியைத் திறந்து காட்டிச் சொன்னார். “கெடிலம் பாலத்தில் ரிக்ஷா வந்தபோது செருப்பு ஒன்று இருட்டில் என்மீது விழுந்தது. அதனால்தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன். அதற்குள் மற்றொரு செருப்பும் விழுந்தது” என்று இரண்டு செருப்புகளைத் தனது பெட்டியிலிருந்து எடுத்துக்காட்டினார். எங்களுக்கு ஒரே அதிசயம்! இருட்டில் நடந்த கதை இப்படியா என்று!
எவ்விதப் பதற்றமும் இல்லாமல் பெரியார் தாத்தா எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டார் என்பதை இன்று நினைத்தாலும் கூட சிலிர்க்கிறது!
எதிர்நீச்சலில் கூட அவருக்குத் தான் எத்தனை இன்பம்! எவ்வளவு துணிவு!
கொள்ளை மலைப்பாக இல்லையா பிஞ்சுகளே?
அன்று நான் 11 வயதில் கற்ற பாடத்தை இன்றும் கைக் கொண்டுள்ளேன்!
எனவேதான் பயமறியாத பாதையாக நமக்கு “ஈரோட்டுப் பாதை” ஆகிவிட்டது!
அந்த உணர்வு என்னை பக்குவப்படுத்தியதால் இன்றும் பாதை மாறாமலே பயணிக்கிறேன்.
‘இளமையில் கல்’ என்பார்கள். என்னைப் பொறுத்தவரை _- இளமையில் நான் கற்ற பாடம் இது. ஆகையால் உறுதியுடன் வேகநடை போட முடிகிறது!
இந்தப் பாடம் _- எனக்கு மட்டுமில்லை. நம் கருஞ்சட்டை வீரர் வீராங்கனைகள் எல்லோருக்கும் தான்!
தெரிந்துகொள்ளுங்கள்! எதிர்ப்பு மலையளவு வந்தாலும் பயமின்றி பழகுங்கள் _- வழிதவறாது பயணம் செய்யுங்கள்!
உங்கள் பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி