சிறுவர் கதை: மீண்டும் ஒலித்த மியாவ்
கொ.மா.கோ.இளங்கோ
“எம் பேரு இதயா. சின்னப்-பொண்ணு. எங்களோட கிராமம் ஆலங்குறிச்சி.
கிராமத்தில, அனேகமா எல்லா வீடுகளிலும் ஆடு மாடு வளர்ப்பாங்க. எங்க வீட்டுக்குப் பின்பக்கம் இருக்குற தொழுவத்தில், ரெண்டு பசு மாடு, ஒரு கன்றுக்குட்டி, மூனு ஆடுகள வளர்க்-கிறோம். அப்பா, எம் பொறுப்புல ஒரு பூனையும் ஒரு கிளியும் வளர்க்கத் தந்திருக்கார். அதுங்க ரெண்டும் வீட்டுக்குள்ளயே சுத்திச்சுத்தி விளையாடும்.
தொழுவத்தில் இருக்கிற கால்நடைகளுக்கு, வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை தீவனமாகத் தருவோம். ஆடுகளுக்கு அகத்திக்கீரை பிடிக்கும். பூனைக்கு எப்பவுமே பாலும் சோறும்தான்.
தெனமும் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே, நான் பூனையைத் தூக்கிக் கொஞ்சுவேன். பிறகு, வெளியே விளையாடக் கிளம்பிடுவேன். பச்சைக்கிளியும் கூடவே வரும்.
ஒங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்லட்டுமா? தொழுவத்தில் இருக்கிற பசுவோட கன்றுக்குட்டி ‘அம்மா… அம்மா’ ன்னு கத்தும். ஆட்டுக்குட்டியும் ‘அம்மா… அம்மா’ ன்னு கத்தும். பூனையும்கூட ‘அம்மா… அம்மா’ ன்னுதான் கத்தும்.
இதெல்லாம் கேட்கிறதுக்கு வினோதமாகத்தானே இருக்கு! மொதல்ல எனக்கும் இதெல்லாம்தான் ஆச்சரியமா இருந்துச்சு. சின்ன வயசுல, எல்லா வளர்ப்புப் பிராணிகளும் ‘அம்மா’ன்னுதான் கத்துமுன்னு மனசுல நெனச்சுட்டேன். ஆனா, ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில, பூனை ‘மியாவ்’ ன்னு கத்தும்ன்னு எழுதியிருந்துச்சு. வாத்தியாரும் அதைத்தான் சொல்லித் தந்தாங்க.
அப்போ… நம்ம பூனைக்கு என்னாச்சுன்னு தெரியலையே? கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. என் நண்பர்கள்கிட்ட இதைப்பத்திக் கேட்டேன். ஆலங்குறிச்சி கிராமத்தில இருக்கிற எல்லாப் பூனைகளும் அம்மான்னுதான் கத்துதுங்குற செய்தியை அவங்க சொல்லித் தெரிஞ்சிகிட்டேன்.
இதற்குப் பின்னாடி, ஏதோ ஒரு சதி நடந்திருக்குமோன்னு சந்தேகம் எழுந்துச்சு. கொஞ்சம் பயமாகவும் இருந்துச்சு. ஆனா, உண்மையைக் கண்டுபிடிச்சே ஆகணும்னு உறுதியா இருந்தேன். கலா, அமுதா, பூங்கோதை எல்லோரும் உதவி செய்றதாச் சொன்னாங்க.
அன்னக்கி ஒரு நாள், பசுமாட்டுக்கு தீவனம் வெச்சுக்கிட்டுருந்த அம்மாகிட்ட கேட்டேன்,
“அம்மா… ஒரு சந்தேகம். பாடப்புத்தகத்தில பூனை ‘மியாவ்’ ன்னு கத்தும்ன்னு இருக்குதே. நம்ம கிராமத்துப் பூனைகள் மட்டும் ஏன் ‘அம்மா’ ன்னு சொல்லுது?’’ ன்னு கேட்டேன்.
“இதயா! அது பெரிய கதைடா. எனக்கே கொஞ்சம்தான் தெரியும். இப்போ நேரமில்லை. சாவகாசமா இருக்கும்போது நிச்சயமா ஒனக்குச் சொல்லுறேன்’’னாங்க. உடனே புல்லுக்கட்டு வாங்கக் கௌம்பிப் போயிட்டாங்க.
அம்மாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு திரும்பி வந்துட்டேன். பூனையைத் தூக்கிக்கிட்டு வெளையாடக் கௌம்பினேன். கொஞ்ச நேரம் பூங்கோதை வீட்டுத் திண்ணையில உட்கார்ந்து ரெண்டுபேரும் பேசுனோம்.
“நம்மளோட தாய்மொழி தமிழ்ன்னு சொல்றாங்க. அப்போ பூனைகளோட தாய்மொழி ‘மியாவ்’ வா?’’ ன்னு கேட்டேன்.
“அப்படித்தானே இருக்கணும். அதில என்ன சந்தேகம்? நீ யோசிச்சது சரிதான்’’ ன்னு சொன்னாள்.
மடியிலிருந்த பூனை ‘அம்மா… அம்மா’ ன்னு கத்துச்சு. பூனையோட வால் சிலிர்க்கிறதைப் பார்த்தேன். பூனை கோபமா இருக்குதுன்னு புரிஞ்சது. தட்டில, பால் ஊத்தி வெச்சுட்டுப் பேச்சைத் தொடர்ந்தேன்.
பூனைகளோட பிறவிக்குணத்தை யாரோ மாற்றி இருக்காங்கன்னு தெரிஞ்சது. ஆனா அது, யாருன்னு உடனடியாக் கண்டுபிடிக்க முடியலை. கொஞ்சநாள் வரையிலும் அதைப்பத்தி மறந்தே போயிட்டேன்.
தை மாசம் கிராமத்தில பொங்கல் பண்டிகை பத்துநாள் நடந்துச்சு. கிராமத்தை ஒட்டின மைதானம் களைகட்டிடிச்சு. மைதானதுக்குப் பக்கத்தில இருந்த பெரிய ஆலமரத்துக்கு கீழே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமுன்னு எல்லோரும் ஒன்னு கூடினாங்க.
ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம்லாம் பார்த்து ரசிச்சோம். சின்னப்பிள்ளைகளுக்கு விளையாட்டுப்போட்டி வெச்சாங்க. ஜெயிச்சவங்களுக்குப் பரிசு கொடுத்தாங்க.
நான், நாலு போட்டில ஜெயிச்சேன். பரிசு தர மேடைக்குக் கூப்பிட்டாங்க. எங்கூட பூனையும் வந்துச்சு. கிராமத் தலைவர் பரிசு தந்தார். சந்தோஷமா இருந்துச்சு.
திடீர்ன்னு மனசுக்குள்ளே ஏதோ நினைவு தட்டின மாதிரி இருந்துச்சு. பூனையோட தாய்மொழி எதுன்னு அவர்கிட்ட கேக்க நெனெச்சேன்.
“எனக்கொரு சந்தேகம். ஏனிந்தப் பூனைகள் ‘மியாவ்’ ன்னு கத்துறதக்குப் பதிலா அம்மான்னு கத்துதுன்னு தெரியுமா?’’ ன்னு கேட்டேன். யாரும் பதில் பேசலை. வாயடைச்சுப் போய் நின்னாங்க. சிலர் அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க.
அடுத்த சில நிமிஷம், நீண்ட அமைதிக்குப் பிறகு ஆலமரம் பேசிச்சு.
“இதயா! ஒரு காலத்தில ஆடு மாடுகளையெல்லாம் ஒரே இடத்தில மேய்ச்சலுக்கு விடுவாங்க. ராத்திரியானா… ஆலமரத்துக்கு கீழே, அவையெல்லாம் மந்தை மந்தையா படுத்துக் கெடக்கும். ஒவ்வொரு மாசமும் அரசாங்க கால்நடை மருத்துவர் கிராமத்துக்கு வருவார். எல்லா விலங்குகளையும் சோதிச்சுப் பார்த்து மருந்து கொடுப்பார். வீட்ல வளர்ற சிறு விலங்குகளும் அதில கலந்துக்கும்’’ என்றது.
நானும் நண்பர்களும் தெகைச்சுப் போனோம். ஆலமரம் சொன்னதைக் கேட்கக் கேட்க ஆச்சரியமா இருந்துச்சு.
“கிராம மக்கள், ஒரு காலத்தில கால்நடைகளைக் குழந்தைகள் மாதிரியே வளர்த்திருக்காங்க’’ ன்னு பூங்கோதைகிட்ட சொன்னேன். அவள் என்னைப் பார்த்துச் சிரிச்சாள்.
மரம், தொடர்ந்து பேசிச்சு. “கிராமத்துக் கால்நடைகள் ஒண்ணுகூடுற இடத்தில, ஒரு முரட்டு எருமைமாடு இருந்துச்சாம். அது, மத்த விலங்குகளை மிரட்டிப் பயமுறுத்தி வெச்சிருந்ததாம். விலங்குகள் எல்லாம் ‘அம்மா’ ன்னுதான் கூப்பிடணுமுன்னு சட்டம் போட்டதாம். அதிகாரத்துக்கு அடிபணிஞ்ச விலங்குகள், எருமைமாடு இட்ட கட்டளைய ஏத்து, சொன்னதைச் செஞ்சுதுகளாம்’’ன்னுச்சு.
அமுதா, சட்டுன்னு “பயம்மா இருக்குடீ! ஆலமரமா பேசிச்சி?’’ ன்னு கேட்டா. சட்டுன்னு, ஆலமரக்கிளை மறைவில இருந்து படபடன்னு இறக்கை அடிச்சுப் பறந்து வந்துச்சு ஒரு பச்சைக்கிளி. அட! இது எங்க வீட்டு வளர்ப்புக் கிளி…..!
“இதயா! இப்போ ஆலமரம் பேசலை. நான்தான் பேசினேன். ஒன்னோட சந்தேகத்துக்கு விடை தேட, நானே பக்கத்துக் கிராமங்களுக்குப் போய் விவரம் சேகரிச்சிட்டு வந்தேன். அங்கயெல்லாம் பூனைகள் ‘மியாவ்’ ன்னுதான் கத்துது’’ ன்னுச்சு.
“அப்பாடா! ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருச்சு. சந்தேகமும் தீர்ந்திருச்சு. நீ செஞ்ச உதவிக்கு நன்றி’’ ன்னேன்.
பச்சைக்கிளி, உடனே ஒரு யோசனை சொல்லுச்சு.
“அக்கா! நம்ம கிராமத்துப் பூனைகள் இனி தங்களோட தாய்மொழியில ‘மியாவ்’ ன்னுதான் கத்தணும். அதுக்கான பயற்சிய நான் தாரேன்’’ன்னது.
கிராமத்து மக்கள், பச்சைக்கிளி சொன்ன ஆலோசனைய ஏத்துக்கிட்டாங்க. அடுத்த ஒரு வாரத்துல கிராமமே மாறிப்போச்சு. எல்லாப் பூனைகளும் ‘மியாவ்… மியாவ்’ ன்னு கத்த ஆரம்பிச்சது. நானும் நண்பர்களும் சந்தோசமடைஞ்சோம்.
ஏதோ ஒரு கட்டாயத்தால, நாமளும் கொஞ்சங் கொஞ்சமா அந்தப் பூனைகளைப்போல தாய்மொழியை மறந்திட்டு வாரோம். தாய்மொழி அழிஞ்சு போனா நம்ம தலைமுறை அழிஞ்சு போயிராதா?
இனி, “நான் தாய்மொழியைக் கட்டாயமாகக் கத்துப்பேன், தாய்மொழியில் பேசுவேன்’’னு உறுதி எடுப்பீங்கதானே!