புதிய தொடர்: அதிசயம்! ஆனால் உண்மையா?
பிஞ்சண்ணா
தாடியுடனும், தடியுடனும் படத்திலிருக்கும் இந்தத் தாத்தாவைப் பார்த்தால் உங்களுக்குப் பெரியார் தாத்தா நினைவுக்கு வருகிறாரா? இவர் அவரில்லை, என்றாலும் இவரும் அவரைப் போன்றவர் தான்!
மூடநம்பிக்கைகளையும், ஏமாற்று வித்தைகளையும் ஒழிப்பதற்காகவே, தான் மறையும் வரை போராடிய இந்தத் தாத்தாவின் பெயர் ஜேம்ஸ் ராண்டி. இவர் உலக அளவில் புகழ்பெற்ற மேஜிக் கலைஞர்.
அதுவும் எப்படித் தெரியுமா? நயாகரா -அருவியின் மேல் கயிற்றில் தொங்கவிடப்பட்ட கூண்டுக்குள் உடல் முழுவதும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலிருந்து தப்புவது எல்லாம் இவருக்குக் கைவந்த கலை. உலகம் முழுவதும் பயணித்து மேஜிக் கலைஞராகப் பணிபுரிந்துள்ளார்.
இவருக்கு மேஜிக் ஆசை எந்த அளவுக்கு இருந்தது என்றால், பள்ளியில் படிக்கும் போதே பாதி நேரம் மேஜிக் வித்தை செய்து-காட்ட கார்னிவலுக்குப் போகும் அளவுக்கு இருந்தது. பின்னர் பள்ளிப் படிப்பை முழுமையாக விட்டுவிட்டு மேஜிக் செய்யக் கிளம்பிவிட்டார்.
பிறகு கொஞ்ச காலம் பத்திரிக்கை ஒன்றில் ராசிபலன் எழுதுபவராகப் பணியாற்றினார். அப்படியென்றால் இவரென்ன ஜோசியரா? ஹஹஹ… அதெல்லாம் இல்லை. அவர்கள் இஷ்டத்துக்கு உளறுவார்கள். இவர் அதையெல்லாம் எடுத்து மாற்றி மாற்றிப் போட்டு எழுதிவிடுவார். புரியவில்லையா? பத்திரிகைகளில் ராசிபலன் பகுதி வருகிறது அல்லவா? அதையெல்லாம் எடுத்து மாற்றி மாற்றிப் போட்டு இவர் பணியாற்றிய பத்திரிகையில் வெளியிட்டுவிடுவார். வேறென்ன இருக்கிறது அதில்… எதையாவது எழுதிட வேண்டியதுதானே!
இப்போது உங்களுக்கொரு கேள்வி தோன்றலாம்… “பார்த்தால், வெள்ளைக்காரராட்டம் இருக்கிறார். நயாகராவில் தொங்கியவர் என்று வேறு சொல்கிறீர்கள்? இவர் ராசிபலன் எழுதினாரா? இந்தியாவிலா இருந்தார்?” என்று!
உண்மை தான். ஜேம்ஸ் ராண்டி கனடாவில் பிறந்தவர்; அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவர். ஆனால், அவர்தான் தன் வாழ்நாள் முழுக்க மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தவர். அங்கேயும் மூடத்தனங்களை ஒழிக்கப் போராட வேண்டியிருப்பது ஏன் என்றால், மூடநம்பிக்கைகள் நம் நாட்டுக்கு மட்டுமா சொந்தம்! உலகெங்கும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை! ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகை! நம் நாட்டில் ஜோசியம் என்றால், அவர்கள் பிஷீக்ஷீஷீsநீஷீஜீமீ என்றார்கள். இங்கே அசுரன், அரக்கன் என்றால், அவர்கள் சாத்தான். சைத்தான் என்கிறார்கள். இவற்றைத் தாண்டி அறிவியல் பெயர்களைச் சொல்லி, பல மூடநம்பிக்கைகள் மேலைநாடுகளில் உண்டு.
ஜேம்ஸ் அமேசிங் ராண்டி அவற்றையெல்லாம் பொய்யென்று நிரூபிக்க நிறைய வேலை பார்த்தார். இயகையை மீறி தனக்கு சக்தி இருக்கிறது என்று சொன்னவர்களின் பொய்களை அம்பலப்படுத்த களத்தில் இறங்கி, தானே நேரடியாக செய்து காட்டினார்.
காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, தொடுவது ஆகிய அய்ம்புலங்களைத் தாண்டி, ஆறாவதாக “ஷிவீஜ்tலீ ஷிமீஸீsமீ” இருக்கிறது என்று சிலர் கிளம்பினார்கள்.
“உங்களிடம் கேட்காமலே… உங்கள் மனதில் உள்ளவற்றை நான் அறிந்து சொல்ல முடியும்! என் பார்வையாலேயே ஸ்பூனை வளைப்பேன். என் கருத்தைக் குவித்து, தொடாமலேயே பொருள்களை என் பக்கம் இழுக்க முடியும்!” என்று சொன்னதோடு அதைத் தொலைக்காட்சியிலும் செய்து காட்டினார் ஒருவர். உலகமே பார்த்து வியந்தது இஸ்ரேலைச் சேர்ந்த யூரிகெல்லரின் நிகழ்ச்சிகளை! ஆனால், இதை நம்புவதா? கூடாதா? மக்களுக்கு முன்னால் செய்துகாட்டுகிறார். கண்ணுக்கு முன்னால் ஸ்பூனை வளைத்துக் காட்டுகிறார். எப்படி நம்பாமல் இருப்பது? என்று மக்கள் யோசித்தார்கள்.
யூரி கெல்லர் பார்வையால் ஸ்பூனை வளைத்தது உண்மையா? ஜேம்ஸ் ராண்டி என்ன செய்தார்?
(அடுத்த இதழில்)