பொம்மாசூரா
விழியன்
பொம்மாசூரன் சிலந்தியூருக்குள் நுழைந்துவிட்டதாக உள்ளூர் வானொலியில் செய்தி ஒலிபரப்பானது. ஒரு மணிக்கு ஒருமுறை இதனை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
கோடை விடுமுறை ஆரம்பித்து இருந்த நேரம் அது. குழலியும் செழியனும் அவர்களுடைய அப்பாவிடம் சென்று “பொம்மாசூரன்னா என்னப்பா? ஏன் ரேடியோவில் அடிக்கடி சொல்றாங்க’’ என்று கேட்டனர். அவர்களுக்கு உண்மையில் விவரம் புரியவில்லை. அவர்களுடைய அப்பா தனது சின்ன வயதில் நடந்த சம்பவத்தைக் கூறினார்.
“பொம்மாசூரன் ஒரு நவீன அரக்கன். நாங்க சின்ன வயசில இருக்கும்போது நம்ம சிலந்தியூருக்கு வந்தான். அவனுடைய சாப்பாடு என்ன தெரியுமா? பொம்மைகள் மட்டும் தான். அதுவும் பகலில் சாப்பிடமாட்டான். இரவில் மட்டும் தான் சாப்பிடுவான். எங்க நண்பர்கள் வீட்டில் இருந்த பொம்மைகள் ஒவ்வொன்றாக காணாமல் போயின. முதலில் எங்களுக்கு பொம்மாசூரன் வந்தது தெரியாது. பொம்மாசூரன் பற்றியும் தெரியாது. அருண் மாமா, சங்கர் மாமா, தியாகு மாமா என ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் பொம்மைகள் காணாமல் போயின. எப்போதும் எல்லா வீட்டிலும் குழந்தைகள் அழுது கொண்டே தான் இருந்தார்கள். எங்கே மறைத்து வைத்தாலும் பொம்மாசூரன் பொம்மைகளைத் தின்றுடுவான்.’’
குழலியும் செழியனும் அதைக்கேட்டுப் பயந்து போனார்கள். “அப்பா பொம்மாசூரனை நீங்க பார்த்து இருக்கீங்களா? அவன் எப்படி இருப்பான்?’’ என்று கேட்டார்கள். அப்பா கொஞ்சம் யோசித்துவிட்டு “யாரும் பொம்மாசூரனை நேருக்கு நேர் பார்க்கவில்லை. சங்கர் மாமாவின் தாத்தா பொம்மாசூரனைப் பார்த்திருக்காராம். முதல்ல ரொம்ப குட்டியா தான் இருந்திருக்கான் பொம்மாசூரன். குட்டின்னா… ஒரு எலி அளவிற்கு. அப்புறம் பொம்மைகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு பெரிசா வளர்ந்துட்டான். பொம்மாசூரனின் நிழல் உருவத்தை நாங்க ஒருநாள் இரவு பார்த்தோம். ஏழடிக்கு உயரம் இருக்கும். இப்ப நிச்சயம் இருபது அடி உயரத்தில் இருக்கும்.’’
குழலியின் காதில் “இருபது அடின்னா எவ்வளவு உயரம் இருக்கும்’’ என்று கேட்டு தெளிவுபெற்றான் செழியன்.
அதன் பின்னர் சங்கர் மாமாவின் வீட்டுக்குச் சென்றார்கள். பொம்மாசூரனைப் பற்றி மேலும் தகவல் சேகரித்தார்கள். பொம்மாசூரனை வெல்வது எப்படி? பொம்மைகளைக் காப்பாற்றுவது எப்படி என்று அய்ந்து பேர் கொண்ட குழுவினை உருவாக்கினார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்களிடமும் தகவல் சேகரித்தார்கள். பொம்மாசூரன் கை வைக்காதது ஒரே ஒரு வீட்டில் தான். அந்த வீடு எப்படி இருந்தது என ஆராய்ந்தார்கள். பிரச்சனையின் தீர்வுக்கு நெருங்கிவிட்டார்கள். ஆமாம், அந்த வீட்டினைச் சுற்றி மரங்களும் செடிகளும் இருந்தன. பொம்மாசூரனுக்கு பச்சை நிறத்தில் எது இருந்தாலும் பயம் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அடுத்த கட்டமாக சிலந்தியூரில் இருக்கும் எல்லாச் சிறுவர்களும் கூடினார்கள். முதலில் ஊரில் இருக்கும் எல்லாப் பொம்மைகளையும் காப்பாற்றவேண்டும். இதுவரையில் மூன்று பொம்மைகள் மட்டும் காணவில்லை. மீதம் இருப்பதைக் காப்பாற்ற வேண்டும். ஊருக்கு நடுவே இருந்த பெரிய பூங்காவைச் சுற்றி மரங்கள் இருந்தன. அதனால் பூங்காவுக்குள் எல்லா பொம்மைகளையும் கொண்டுவந்தனர். நாள் முழுக்க சிறுவர்கள் அங்கேயே இருக்க ஆரம்பித்தனர். செடிகளுக்கு தண்ணீர்விட ஆரம்பித்தனர். காய்ந்த சருகுகளைப் பூங்காவில் இருந்து அகற்ற ஆரம்பித்தார்கள். விளையாட்டுச் சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். கோடை விடுமுறை என்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. சிலர் சாப்பிடக்கூட செல்லவில்லை, பெற்றோர்கள் தேடிவந்தார்கள்; உணவளித்தார்கள். பொம்மைகள் பத்திரமாக இருக்கின்றனவா என அடிக்கடி பரிசோதனை செய்தார்கள். பூங்கா அவர்களுடைய கூடாரமானது. மற்ற குழந்தைகளுடன் உணவைப் பகிர்ந்து மகிழ்ந்தார்கள். பூங்காவில் பகுதி நேரமாக வேலை செய்த தாத்தா மகிழ்ந்தார். மகிழ்வுடன் குழந்தைகளுடன் நேரம் செலவழித்தார். பூங்காவைச் சுற்றி சில இடங்களில் செடிகள் இல்லாமல் இருந்ததைக் கண்ட குழந்தைகள் அந்த இடங்களில் எல்லாம் செடிகளை நட்டு வைத்தார்கள். பூங்கா இருக்கும் வீதியில் விதைகளை நட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் செடியும் மரமும் வளர்க்க முடிவெடுத்தார்கள்.
ஆமாம், அந்தப் பொம்மாசூரனுக்கு என்ன ஆனது?
உங்கள் ஊரை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கின்றான்.
ஆமாம், நிஜமாவே அப்படி பொம்மாசூரன்னு ஒருத்தர் சிலந்தியூருக்கு வந்தானா…? இல்லை, செழியன் மற்றும் குழலி அப்பாவின் ரகசிய ஏற்பாடா?