மீன்சாரத்தால் மீன் பிடிப்போமா?
தேவையான பொருள்கள் :
இலேசான தகரத்தகடு, பசை மின்கலம், காப்பிட்ட கம்பி அல்லது ஜரிகை
அகலமான பிளாஸ்டிக் தட்டு, கத்தரிக்கோல், பெரிய ஆணி. கத்தரிக்கோலால் தகரத்திலிருந்து சிறு சிறு மீன் வடிவங்களைக் கத்தரித்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் தட்டில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு தகரவடிவ மீன்களை அதில் போடுங்கள்.
பெரிய ஆணியின் மேல் பூக்காகிதச் சுருளைச் சுற்றுவதுபோல் ஜரிகை அல்லது காப்பிட்ட கம்பியை ஒரு சுருள் மற்றொரு சுருளைத்தொடாமல் நெருக்கமாகச் சுற்றுங்கள். சுற்றிய இரு நுனிகளையும் மின்கலத்தோடு மேலும் கீழுமாக இணையுங்கள். ஆணியின் தலைப்பகுதியை தண்ணீர் மட்டத்தில் பிடியுங்கள். தகர மீன்கள் தண்ணீரை விட்டு வெளியே துள்ளிவந்து ஆணியின் தலைப்பைக் கவ்விக்கொள்ளும்.
ஏன்? எப்படி?
காந்தம் இரும்பை இழுக்கும் தன்மை கொண்டது. மின்கலத்திலிருந்து வரும் மின்சாரம் கம்பிச் சுருள்களின் வழியே வரும்பொழுது மின்சக்தி காந்த சக்தியாக மாறி ஆணியைத் தற்காலிகக் காந்தமாக மாற்றுகிறது. ஆகவே, இரும்பு மீன்துண்டுகள் ஆணியில் ஒட்டுகின்றன.
ஆக்கம் : அணு கலைமகள், சிவகங்கை